அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23/3/17

மீண்டெழட்டும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் –யோகேந்திர யாதவ்



இந்த தேசம் நிச்சயமற்ற உருவில் “கருப்பு பணத்திற்கு எதிரான போரில்” ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஊழலுக்கு எதிரான நிலையில் இருந்தே விடுபட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் நாம். உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் பின்னோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை(PCA),1988 திருத்துவதற்கு தயாராகி விட்டது பாராளுமன்றம். கொடுமை என்னவென்றால், பெரும்பாலான அரசியல் அமைப்புகளுக்கும் சாதகமாக அமைவதால், பல கட்சிகளின் ஆதரவையும் இத்திருத்தம் பெட்டறுள்ளது. ஆம், எல்லாம் கருப்பு பணத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தான்.
நாடாளுமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் ஊழல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2013, சில திருத்தங்களை ஊழல் தடுப்பு சட்டத்திற்கு(PCA) முன்மொழிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட மிகப் பரவாலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் போது, 2013ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. சட்டரீதியாக ஊழலுக்கு கிடுக்கு பிடி போடுவதே அதன் நோக்கம். ஆனால் வருந்தத்தக்க சில அம்சங்கள் அதிலும் இருந்தன. எனினும் அதன் ஒட்டுமொத்த சீர்குலைவு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்க முனைந்த திருத்தங்களால் தான் ஆனது. கேபினெட் உட்பட, பல்வேறு கட்சிகளையும் உள்ளடக்கிய மாநிலங்களவையின் தேர்வு குழுவும் இந்த மாற்றங்களை ஏற்று கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான சட்டம் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேற்ற முடியாததால் தள்ளி போகும் நிலையிலுள்ளது. 


யோகேந்திர யாதவ்





சீர்குலைக்கும் திருத்தங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு குழுவால் அங்கீரிக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வழிகளிலும் ஊழல் தடுப்பு என்னும் அதன் அடிப்படையையே மழுங்கடிப்பதாக உள்ளது. ஊழலின் தற்போதைய வரையறையை குறுக்குவதோடு அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரத்தையும் அதை நிருபிப்பதற்கான தேவையையும் அதிகமாக வலியுறுத்துகிறது, இது “தகவல் தெரிவிப்பாளர்களின” (whistleblowers) நிலையை இன்னும் சிரமம் ஆக்குவதோடு, அதிகாரிகள் தங்களை மேலும் காத்துக் கொள்வதற்கும், ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் எந்த ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் உள்ளகாதவாரு பார்த்து கொள்ளவுமே பயன்படும். இந்த மசோதா சட்டமானால், ஏற்கனவே ஊழலுக்கு எதிராக பலவீனமாக உள்ள நமது அமைப்பு மேலும் பலத்த அடி வாங்கும்.
  
இப்போது மசோதாவின் முக்கியமான ஒவ்வொரு சரத்தும் ஊழலுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது என பாப்போம் 

மசோதாவில் முதல் அம்சமான ஊழலின் வரையறையும் பொருளும், அரசு (அ) பொதுப் பனியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறுக்கப் பட்டுளள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1)(d), ஊழலின் பல்வேறு மறைமுக அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளது, முறையற்ற உதவியாக “எந்த விலை மதிப்புள்ள பொருளோ அதற்கான முகாந்திரத்தை நிறுவும் செயலோ” அல்லது “பொது பணியாளராக தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தல்’ என்பது உட்பட. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவோ இந்த பிரிவையே நீக்க்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் மேலோட்டமான ஒரு வரையறையாக, பொது பணியாளர் குற்றச் செயலில் ஈடுபடுதல்: முறையற்ற வழியில் ஒருவர் கட்டுபாட்டில் சொத்துகளை வைத்து இருப்பது மற்றும் உள்நோக்கத்தோடு முறையற்ற வகையில் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவிப்பது என மாற்றப் பட்டுள்ளது. இந்த புது வரையறையின் படி , எந்த ஒரு பலனும் பொருளாதார ரீதியாயானதாக இல்லாமலோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அதை குற்றமாக கருதவோ தண்டிக்கவோ முடியாது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தை கவனமாக ஆராய்ந்த சட்ட ஆணையம் இந்த புது வரையறையை நிராகரித்துள்ளது. இன்னும் விரவானதொரு வரையறையை அது முன்மொழிந்தது. பொதுப் பணியாளரின் “ஒழுங்கற்ற பொதுச் செயல் மற்றும் நடவடிக்கை”, “முறையற்ற ஆதாயத்துக்கு வழி வகுத்தால்” அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டும் என சட்ட ஆணையம் கோரியது. இத்தனைக்கு பிறகும், அரசும் பாராளுமன்ற குழுவும் இந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு ஊழல் கூட்டாளிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மேஜை-அடியிலான பரிவர்த்தனை என ஏதும் இப்போது உயர்மட்ட அளவில் நடப்பதில்லை இருப்பினும், இப்போது இருக்கும் சட்டத்தில் 13(1)(d) பிரிவு மட்டுமே உயர்மட்ட இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு சற்றும் பொருந்தாத வகையிலேயே ஊழல் புரிந்த அரசு பணியாளர் பெரும் பலனானது, கடல் தாண்டிய பரிவர்தனையாகவும் நேரடி பணவடிவில் இல்லாமலும் இருக்கிறது உதரணத்திற்கு, பனி ஓய்வுக்கு பிந்தைய பலன்கள். போபர்ஸ் ஊழலில் இருந்து 2G வரை, காமன் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து மாபெரும் ஊழலும் குற்றங்களாக கருதப்பட்டது இந்த பிரிவின் உபாயத்தால் தான். அரசு அதிகாரிகளில் ஒரு சாரார் தொடர்ந்து இந்த பிரிவை மட்டும் நீக்க வலியுறுத்துவதும் இதனால் தான். அதற்கு அவர்களது வாதமாக அவர்கள் கூறுவது, நேர்மையான அதிகாரிகளின் நன்மதிப்பை இது பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே. ஆனால் இந்த வாதம் உண்மை அல்ல. நேர்மைக்கு பெயர்போன ஓய்வு பெற்ற கேபிநெட் செயலாளரான டி.எஸ்.சுப்பிரமணியம், நேர்மையான அதிகாரிகளுக்கு போதுமான வகையில் இப்போது இருக்கும் சட்டமே பாதுகாப்பை வழங்குகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். பதவியை தவறான வழியில் நிதி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தியது உறுதியாக நிரூபனமாகாத வரையில் பணியாளர்களின் நன்மதிப்பு எவ்வகையிலும் பாதிப்பு அடையாது. 


ஆரம்பநிலை அழுத்தம் 

இரண்டாவது, இந்த மசோதா தொடக்க நிலையிலேயே ஆதாரம் இல்லையென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்போரை குற்றவாளியாக கருத முடியாததாக ஆக்குகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி பொதுப் பணியாளர் ஒருவரின் அறியப்பட்ட வருவாய்க்கு மீறிய சொத்து அல்லது பணமே அவர் செய்த ஊழலை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் இப்போது வழக்கு தொடுப்பவரேதான், தவறான வழியில் அரசு அலுவலர் பெற்ற பணமே முறையற்ற ரீதியில் அவர் சொத்து குவிக்க பயன்பட்டது என்பதையும் நிரூபித்தாக வேண்டியதாக இருக்கும். மாநிலங்களவையின் தேர்வு குழு இவ்வாறு நோக்கம் கற்பிப்பது தேவையற்றது என கூறி இருந்தாலும் அரசாங்கத்தின் இறுதி முடிவு நமக்கு இன்னும் தெரியவில்லை. அதிலும் இப்போதைய சட்டத்தில் இருக்கும் “அறியப்பட்ட வருவாய்” என்பதற்க்கு “அரசு அல்லது பொதுப் பணியாளர் சட்டரீதியான அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தான் பணியாற்றும் காலத்தில் மட்டும் பெறப்படும்” என வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திருத்தம் 1988ம் ஆண்டு அதன் முந்தைய சட்ட வடிவத்தில் இருந்த ஓட்டைகளை அடைக்க கொண்டுவரப் பட்டது. ஆனால் சமூக தரப்பில் யாரிடமும் இருந்து எந்த பரிந்துரையும் பெறாது, மத்திய அரசு இப்போது இந்த சரத்தையே தூக்க இருக்கிறது. இது பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவைக்கும் செயலே ஆகும்.

மூன்றாவது, இந்த மசோதா லஞ்சம் கொடுப்பவரை லஞ்சம் வாங்கியவருக்கு எதிரான சாட்சியாக நிறுத்துவதை சிக்கலாகி உள்ளது. இப்போதிருக்கும் சட்ட படி, ஒரு நபர் தன்னிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என ஒருவர் மீது புகார் அளித்தார் என்றால், புகார் அளித்தவரே லஞ்சம் வாங்க தூண்டினார் என குற்றம் சாட்ட முடியாது. லஞ்சம் வாங்குவோரையும் கொடுப்பவரையும் ஒரே விதத்தில் நடத்தக் கூடாது. ஆனால் வரவிருக்கும் மசோதா அதை செய்கிறது. இது லஞ்சம் கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அரசு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியமாக மாறாமல் இருக்கவே செய்யும். மறைமுகமாக இது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்துவிடும். 

இப்படி முழுவதும் சிக்கலாக்குவதற்கு, வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பவருக்கு முழு விளக்கு அளிக்காமல் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கலாம். அரசுக்கு சிறப்பான வாய்ப்புக்கள் இருந்தன. இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை லஞ்சத்தை “தர விளைவது” மற்றும் “ரகசியமாக தருவது” என இருவகையாக பார்க்க பரிந்துரைத்தது. ஒருவர் லஞ்சம் லஞ்சம் தர முனைந்து, தந்த பின்பு உடனடியாக புகார் அளித்தார் எனில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் அரசு உதாசினப்படுத்தியதன்- அனைவரயும் தண்டிக்கும் யோசனயின்- மூலம் லஞ்சம் பெறக் கூடியவர்களுக்கே துணை புரிந்து உள்ளது என்பது உறுதி.

நான்காவது திருத்தம், ஊழல் புரிந்தவரை தண்டிக்கும் வாய்ப்பை குறைத்து உள்ளது. இப்போதிருக்கும் சட்டப் படி, பணியிலிருக்கும் ஒருவரை தண்டிக்க அவரது மூத்த அதிகாரி ஒருவரின் ஒப்புதல் தேவை. இதற்கான காரணம் எளிமையானது. அது நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கப் படுவதில் இருந்தும், துன்புறுத்தப் படுவதில் இருந்தும் காப்பது தான். இப்போது கொண்டு வந்திருக்கும் மசோதா, பனி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்து உள்ளது. அவர்கள் பணி ஆற்றிய காலத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் இந்த நீட்டிப்பு பொருந்தும். இது ஒரு வகையில் நியாமானதாக தோன்றினாலும், தேவையற்ற ஒரு சில சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அது என்னவெனில், ஒரு தனி நபர் ஊழல் குற்றச்சாட்டில் அரசு பணியாளர் ஒருவரை தண்டிப்பதற்கான ஒப்புதலை பெற அரசாங்கத்தை அணுகினால், அவர் இனி நீதி மன்றத்தை தான் நாட வேண்டி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட அரசு பணியாளருக்கு வழங்கப்படும் இந்த மேலதிகமான பாதுகாப்பு, ஊழலால் பாதிக்கபட்டவர்களையும், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்களையும் கை விடக் கூடிய ஒரு செயலாகவே இருக்கும். ஊழல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை காப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது இதில் தெளிவாகவே தெரிகிறது. 



முதலில் அனுமதி

இறுதியாக, மிக மோசமானதும் கொடுரமானதுமான இந்த திருத்தம் பொது மக்களின் எந்த ஒரு கருத்தையும் கேட்காது செய்யப்படுள்ளது. இந்த மசோதா பிரிவு 17A என்னும் புதுப் பிரிவை சேர்க்க கோருகிறது. அதன் சாராம்சம் இது தான்: இனி எந்த ஒரு விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டபட்ட பணியாளர் ஒருவரை விசாரிக்க அதிகாரபூர்வ அனுமதி முதலில் பெறுவது அவசியம். அந்த அனுமதி லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா மூலம் வழங்குவது அரசின் முடிவு. பாராளுமன்ற தேர்வுக் குழுவோ இதை இன்னும் மோசமாக்கி, குற்றம் சாட்டப்பட்டவரை நீக்க கூடிய உரிமை “தகுந்த உரிமை படைத்த ஒருவர் அல்லது அமைப்புக்கு தான்” உண்டு என முன்மொழிந்துள்ளது. எனவே இனி அரசியல் முதலாளிகளே ஊழல் தடுப்பு விசாராணையை அரசு பணியாளர் மீது நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்களாக இருப்பர். 

இது அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. முன்னமே குறிப்பிட்ட படி இப்போதிருக்கும் சட்டப் பிரிவு 19, அனைத்துவித போலி குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதிகாரிகளை காக்கும் விதமாக ஏற்கனவே ஏற்படுத்த பட்டுள்ளது. நேர்மையான, குற்றமற்ற அதிகாரியின் மீது புகார் வருமானால் விசாரித்து பார்த்து அரசாங்கம் அதற்கான ஒப்புதல் வழங்காது அந்த புகாரை நிராகரிக்கலாம். இந்த வசதி ஏற்கனவே இருக்கையில் எதற்கு இப்போது இதில் புதிய திருத்தம்? அதுவும் ஆரம்பகட்ட விசாரணைக்கே எதற்கு ஒப்புதல்? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விஷயம், விசாரணை இல்லை என்றால் நம்பகமான ஆதாரமும் கிடைக்க போவது இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஒரு புகாருக்கு ஒப்புதல் வழங்கும்? அல்லது ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாது ஒருவரால் எப்படி ஆதாரங்களை சமர்பித்து ஒப்புதலை பெற முடியும்? அப்படியே ஒப்புதலும் வழங்கபட்டாலும், அது தெரியவந்தால் விசாரணை நடப்பதற்கு முன்னரே அந்த ஊழல் புரிந்தவர் தனது ஆதாரங்களை மறைக்க உதவாதா? இந்த மோசமான திருத்தம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தப்பிக்க வைக்கவே பயன்பட போகிறது. ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஊழவாதி ஒருவரை தண்டனையில் இருந்து மாத்திரம் அல்ல ஆதாரங்கள் சேகரிப்பதில் இருந்தும் விசாரணையில் இருந்தும்கூட பாதுகாக்க முடியும். 



மீளட்டும் ஊழல் எதிர்ப்பு 

அரசின் இந்த முடிவு பழைய “ஒற்றை வழிமுறையை” மீண்டும் கொண்டு வந்துள்ளது. அந்த பழைய அரசாணையின் படி எந்த ஒரு மூத்த அதிகாரியையும் அரசின் அனுமதி இன்றி விசாரிக்க முடியாது. 1997ம் ஆண்டு புகழ் பெற்ற வினீத் நாராயண் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை சட்ட விரோதம் என அறிவித்தது. அரசாங்கம் அதையே திருத்த சட்டமாக 2003ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்தது. கடைசியாக சமீபத்தில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, “சமத்துவத்திற்கான உரிமையை” மீறுவதாக கூறி அதை நீக்கி தீர்ப்பளித்தது. ஆளும் வர்க்கத்தில் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை இப்போது மூன்றாவது முறையாக அரசு கொண்டு வந்திருக்கும் அதே கவச சட்டமே நிரூபிக்கிறது. 
குளிர் கால கூட்ட தொடர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், பட்ஜெட் கூட்டதொடருக்கு இந்த மசோதா தள்ளிபோகும் என தெரிகிறது. இது அக்கறையுள்ள பொதுமக்களுக்கு, ஊழலை பாதுகாக்கும் அரசின் இந்த மோசமான முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கும், அனைவரிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பாக ஓரிரு மாதங்கள் கிடைத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

The original article released in The Hindu Dec12,2016 - http://www.thehindu.com/opinion/lead/Time-to-blow-the-whistle/article16793830.ece

3/2/17

ப்ரிகால் போராட்டமும்; தாமதமான நீதியும்.







நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி டெல்லி முதல் நாட்டின் மூலை முடுக்கு வரை விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் நடைபெற்று வரும் பிற விஷயங்களில் நம் கவனங்கள் செல்வதில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படையான விஷயங்கள் என்றும் விவாதிக்க பட வேண்டியவை. அதிலும் நமது நீதி துறை அத்தைகைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய ஒன்று. கவனிக்க தவறிய அந்த விஷயம் வேறொன்றுமில்லை, ஒரு தொழிற்சங்கத்துக்கும் நீதி துறைக்கும் இடையே நம்காலத்தில் நடைபெற்று முடிந்த “நீண்ட” உரையாடலை தான் நாம் பார்க்க தவறியது.



ஜனவரி 17ம் தேதி, கோவை ப்ரிகால் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கான காரணமாக நிதிமன்றம் கூறியது “குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை” என. 


முன்னதாக 2012ம் ஆண்டு கோவை செஷன்ஸ் நீதி மன்றம் இபிகோ பிரிவு 302 மற்றும் 449 (கொலை குற்றம் மற்றும் குற்றம் புரிய முனைதல்) படி தொழிலார்கள் எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது இங்கு குறிப்பிட தக்கது.



                          ப்ரிகால்


கோவை- தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்”. 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்களை கொண்ட நாட்டின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்று. வாகனங்களுக்கான துணை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு பொரியியல் தொழிநுட்ப கருவி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ப்ரிகால், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உற்பத்தி நிர்வனம். 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு உற்பத்தி பிரிவுகளாக- உத்தரக்கண்டில் இரண்டு, புனே மற்றும் குர்கானில் தலா ஒன்று என- செயல்பட்டு வரும் ‘ப்ரிகால்’ வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தி பெரு நிறுவனங்களுக்கு இந்நிறுவனமே தொழில் நுட்ப சாதனங்களான வேக கணிப்புக் கருவி, உணர் திறன் கருவி ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. கோவையில் இரு உற்பத்தி பிரிவுகளாக (பிளான்ட் 1 மற்றும் பிளான்ட்3,4) இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் முதல்முறையாக ஒட்டு மொத்த வருவாயாக 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவித்து உள்ளது.





          ஊதிய உயர்வு – போராட்டம்


5100 ஊழியர்களை கொண்ட ப்ரிகால் நிறுவனத்தில் 650 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி புரிகின்றனர். 2007ம் ஆண்டு, நியாமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை முன்வைத்து ப்ரிகால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து “கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்” என்னும் பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தனர். ஆனால் அந்நிறுவன மனித வளப் பிரிவு மேலாளரான ராய் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு தான், இச்சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டது. தொழிற் சங்கத்தை ஆரம்பித்த நபர்களில் 6 பேர் உத்தரகண்டிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. 

தொழிற் சங்க தலைவரான குமாரசாமி கூறுகையில்,
 “ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான இடர்களை தாண்டி தான் வந்துள்ளோம். போராட்டம் ஆரம்பமாகிய காலத்திலும் எங்கள் மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்பட்டே வந்தன. மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் யூனியனை கைபற்றி தொழிற்சாலைக்கு ஆபத்து ஏற்படுத்துக் கின்றனர் என்றே நிர்வாகம் எங்கள் மீது பழி கூறியது” என்றார்.



           என்ன கோரிக்கைகள்



சங்கம் துவங்கிய 2007ம் ஆண்டு பணியாளர்களின் மாத ஊதியமாக இருந்த தொகை 8,522 ரூபாய். ஓய்வு தொகை 1,00,000 ரூபாய். 25 ஆண்டுகள் வேலை செய்து பணி ஓய்வு பெற்றாலும் இதே தொகை தான். வேலை பளு மிக அதிகம். வேலை நேரத்தில் இடைவேளை கூட அதிக நேரம் இல்லை. எனவே பணியாளர்கள் தங்கள் கால்கள் பக்கத்திலேயே தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். உற்பத்தி தேவை அதிகமாக இருக்கிற படியால், கிடைக்கிற குறைந்த இடைவேளையில் எழுந்து செல்லக் கூட நேரம் இருப்பதில்லை என தெரிவித்தனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே அடிப்படை உரிமைகளான நியாமான வேலை சூழலை வழங்க கோரியும், குறைவான ஊதியத்தை எதிர்த்தும், தற்காலிக பணி அல்லாது நிரந்தர பணி வழங்க கோரியும் 2009ம் ஆண்டு, கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். 



             ராய் ஜார்ஜ் கொலை



இப்படியான ஒரு சூழலில், இரும்பு தடிகளோடு நுழைந்த ஆட்களால் மூர்க்கமாக தனது அலுவலக அறையிலேயே அடித்து கொல்லப் பட்டார் ராய். கேரளம், எர்னாகுளத்தை சேர்ந்தவரான ராய் ஜார்ஜ் கோவை பெரியநாயக்கன்பாளையம் ப்ரிகால் மனிதவளப் பிரிவு துணை தலைவராக பணி புரிந்து வந்தார். அரசின் தலையீட்டால், நடைபெற்று வந்த போராட்டம் சமரச தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில் தான் இத்தைகைய கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை 11.40மணி அளவில் ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டு சரிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அலுவலக அறையில் இருந்த நான்கு பேரும் தாக்குதலுக்கு ஆளாயினர். உடன் மாலை 4.30மணிக்கு மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாலை 6.30க்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இரவு 10 மணிக்கு தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.



             முதல் கோணல்


குற்றம் சாட்டபட்ட அத்துனை பேரும் அடுத்த நாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சிலர் இணைக்கப் பட்டனர். வழக்கின் ஆரம்பத்தில் தொழிற்சங்க தலைவர் குமாரசாமி உட்பட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்ற அறிக்கையில் நிறைய “இடைசெருகல்கள்” இருப்பதாக நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. 42தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தொடர்ச்சியான போலிஸ் விசாரணைக்கு உள்ளாகப் பட்டனர். நான்கு பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு 2009ம் ஆண்டு ஜாமின் கிடைக்கும் வரை 130 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டனர். 2012ம் ஆண்டு வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், எட்டு பேரை குற்றவாளிகளாக அறிவித்து மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. தொழிலார்கள் எட்டு பேருக்கும் கடுங்காவலுடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கியமான வாதமாக அப்போது முன்வைக்கப் பட்டது,  ‘நடந்த கொலையை குற்றம் சாட்டப்பட்ட தொழிலார்கள் தான் செய்தார்களா’ என்பது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது 

“கொலை நடந்த சமயம் ராயின் கேபினில் இருந்த சிசிடிவி அந்த நாள் மட்டும் வேலை செய்யவில்லை. ஏன் சிசிடிவி கேமரா அன்று மட்டும் பழுதாகி போனது? ஆனால் கொலைக்கான சாட்சியமாக அவரது அறைக்கு வெளிய இருந்த சிசிடிவி’யில் பதிவான காணொளி சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கொலை நடந்த அறையில் ஆட்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளது, ஆனால் அது இந்த தொழிலாளர்கள் தான் என எப்படி சொல்ல முடியும்? நடந்தது கொலை என்பதை நிருபிக்க வேண்டுமானால் அந்த காணொளி பொருந்தலாம், ஆனால் யார் கொன்றார்கள் என அதை வைத்து எப்படி நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்”.



                  இரண்டாம் திருப்பம்


இந்த கொலை பற்றியும் அதற்கு முன்பிருந்தே நடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் தி-வயர் தளத்தில் எழுதிய செய்தியாளர் மதுமிதா தத்தா, இந்த ஒட்டுமொத்த ‘ப்ரிகால் நிகழ்வுகளையும்’ மாருதி நிறுவனத்தின் மானசர் தொழிற்சாலை சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ப்ரிகால் கொலை பற்றி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கொலை சம்பவம் 11.40க்கு நடந்ததாக குறிப்பிடப் படும் அதே வேளையில் “எதிர்பாரா விதமாக” வழக்கின் விசாரணை அதிகாரியான போலிஸ் ஒருவரும் 11.41 முதல் 11.46 வரை அதே தொழிற்சாலையினுள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடுகிறது. ‘சாதாரண உடையில்’ கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த அதிகாரியிடம் கொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டபோது, “தனக்கு நிர்வாகம் கொலை நடக்கிறதென எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் நடைபெற்று வந்த காலம் என்பதால் பந்தோபஸ்த்துகாக ப்ரிகால் ஆலைக்கு வெளியுலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருந்தும் கொலை நடக்கவிருந்தது எப்படி போலீசிற்கு தெரியாமல் போயிற்று என டிபன்ஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மாருதி மானசர் ஆலை சம்பவம் ஒத்துப் போவது இங்கேதான். மானசர் தொழிற்சாலை மேலாளர் அவ்னிஷ் தேவ் ஆலை உள்ளேயே வைத்து கொடூரமான முறையில் எரித்து கொல்லப் படுகிறார். தொழிற்சாலை முழுவதும் தீ வைக்கபடுகிறது. அடுத்த நாள் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நூற்று கணக்கில் தொழிலாளர்களை கைது செய்கின்றனர். ஏனெனில் அங்கும் வன்முறைக்கு முன்னர் ஊதிய உயர்வுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. மனாசர் தொழிற்சாலை தீக்கு இரையாக்கப்பட்ட அன்று 148க்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டனர். ஆனால் இறுதி வரை பதிலளிக்க முடியாத கேள்வியாக இருந்தது “யார் தீ வைத்தார்” என்பது தான். முதல் நாள் போலிஸ் பரிசோதனை போது எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் தடயவியல் அதிகாரிகள் தீப்பெட்டி ஒன்றை கண்டு எடுத்தாக தெரிவித்தனர். 

அப்போது தொழிலாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் க்ரோவர் வைத்த கேள்வி 
“எரிந்த நெருப்பில் மொத்த தொழிற்சாலையே சாம்பலாகி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீப்பெட்டி மட்டும் எரியாமல், எந்த வித சேதமும் இல்லாமல் எப்படி ‘கண்டு எடுக்கப் பட்டது’?”




                    முற்றும் கோணல்




கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் அறுவரை விடுதலை செய்து, இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து ஒற்றை ஆயுள் தணடனையாக தண்டனை குறைப்பு செய்துள்ளது. காரணம், ப்ரிகால் நிர்வாக தரப்பில் உதவி மேலாளர் அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை. மேலும் பலரது சாட்சியங்கள் ஆட்சேபனைக்கு உரியதாய் இருந்துள்ளது, பிறகு வழக்கின் ஆரம்பம் முதலே நீடித்து வந்த குழப்பங்களும் ஒரு காரணம். சாட்சியங்கள் யாவும் நம்பத்தகுந்தாக இல்லை என்றதோடு ‘பொய் சாட்சியங்களை’ கண்டித்த நீதிமன்றம், அதன் அடிப்படியிலேயே விடுதலையையும் பிறபித்து உத்தரவிட்டது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். இந்தியாவில் நீதி துறை மூலம் எளியவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. எனினும் முற்றும் முழுதாக முடியவும் இல்லை. இன்னும் இரு தொழிலாளர்கள் சிறை கம்பிகளுள் இருகிறார்கள். அவர்களுக்கான மேல் முறையீடு முயற்சியகள் முன்னெடுக்கப் படலாம். ‘கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்’ முன்னெடுத்த இந்த போராட்டம் துவங்கிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 8,522ரூபாய், ஓய்வு ஊதியம் 1 லட்சம், இப்போது வழங்கப்படும் மாத ஊதியம் 24,500 ரூபாய், ஓய்வு ஊதியம் 3.5 லட்சம் ரூபாய். 

சிறையில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நால்வரும் தங்களுக்காக அதுவரையிலும் போராடிய தொழிற்சங்க தோழர்களை ஆரத் தழுவி அழுத புகைப்படம் அடுத்த நாள் ஓரிரு நாளிதழ்களின் மாவட்ட செய்தி பிரிவில் ஒரு சிறு பெட்டி செய்தியாக இடம் பெற்று இருந்தது. ஆம், மாபெரும் பட்ஜெட் பற்றிய செய்திகளுக்கு இடம் வேண்டும் அல்லவா? 







- கபிலன். இல



***

7/10/15

நயன்தாரா சாகலின் கடிதம்



நயன்தாரா சாகல்- புகழ்பெற்ற எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் சகோதரி மகளுமான இவர் தனது நேரடியான, வெளிப்படையான அரசியல் கருத்துக்களால் அறியப்பட்டவர். இந்திரா காந்தி அமலாக்கிய அவசர நிலைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த இவர், அண்மைக் காலமாக பண்பாடுட்டுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த தொடர்பு குறித்தும் பேசி வந்துள்ளார்.











இன்று அக்டோபர் 6, 2015- இந்திய பண்பாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் தோல்வியுற்ற அரசைக் கண்டித்தும், ஆளும் ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு மாறான மாற்றுக் கருத்தாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அதற்கெதிரான போராட்டமாக 1986’ம் ஆண்டு தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். அவருடைய அறிக்கை பின்வருமாறு :




                                    பிளவுபடுத்தப்படும் இந்தியா




தனது சமீபத்திய உரையில், இந்திய துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களுக்கும் “கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கான முழு சுதந்திரத்தையும்” உறுதியளித்துள்ளது என்பதை நமக்கு நினைவுபடுத்துவது தேவை என கருதியிருக்கிறார். அதற்கு காரணமேதும் இல்லாமல் இல்லை.






ஏனெனில் இந்திய பண்பாட்டின் பன்முகத் தன்மையும், அது சார்ந்த விவாதங்களும் கொடூரமான தாக்குதலுக்கு தற்போது ஆளாகி வருகின்றது.



மூடத்தனத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவாளரனாலும், இந்து மதத்தின் ஆபாசமும், ஆபத்தும் நிரம்பிய பகுதியான ஹிந்துத்துவாவின் ஏதேனும் ஒரு அம்சத்தை கேள்விக்கு உட்படுத்தும் யாராயினும் – அது அறிவுத் தளமாயினும், கலைத்துறையாயினும் சரி அல்லது உணவு பழக்கத்தை பற்றியதானாலும், வாழ்கை முறையைப் பற்றியதானாலும் சரி – ஒதுக்கப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.

தனித்துவமிக்க கன்னட எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான எம்.எம்.கல்புர்கி, மஹாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என மூடத்தனத்தனங்களுக்கு எதிரான செயல்பாட்டாளர்களான மூவரும் துப்பாக்கிகளுக்கு இரையாகியுள்ளனர்.

மேலும் பலர் “அடுத்து அவர்கள்தான்” எனும் அச்சத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். மிகச் சமீபமாக, டெல்லிக்கு வெளியே பிசாரா எனும் கிராமத்தில், மொஹம்மத் அக்லக் எனும் அந்தக் கிராம கொல்லர், தனது வீட்டில் மாட்டுக் கறி சமைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தால், விசாரனையின்றி மூர்க்கமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.


இந்த எல்லா வழக்குகளிலும், நீதி தன் நிலை தவறி விட்டது. இத்தகைய தொடர்ச்சியான பயங்கர செயல்கள் குறித்து பிரதமரும் அமைதி காத்து வருகிறார். அவரது சித்தாந்தத்தை ஆதரிப்போரில் இத்தகைய தீய செயல் புரிவோரை அவர் விலக்கி விடப் போவதில்லை என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

எனினும், துக்கமளிக்க கூடிய விஷயமென்பது சாகித்ய அகாடமியின் மௌனம் தான். இந்த அமைப்பு நிறுவப்பட்டதே, படைப்பாக்கத்தின் பாதுகாவலராக செயல்படவும், கலை,இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் சிறந்த படைப்புகளை ஊக்கப் படுத்துவதற்காகவுமே ஆகும்.


கல்புர்கி கொலைக்கு எதிரான போராட்டத்தில் ஹிந்தி எழுத்தாளர், உதய் சங்கர் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆறு கன்னட எழுத்தாளர்களும் தங்களது விருதுகளை கன்னட சாகித்ய பரிஷத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.

கொலையுண்ட இந்தியர்களின் நினைவாகவும், கருத்துரிமைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து இந்தியர்களுக்காகவும், அச்சத்திலும் நிலையாமையிலும் வாழ்ந்து வரும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் ஆதரவாக, நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறேன்.

- நயன்தாரா சாகல் 

***


6/7/14

டாலரை தவிர்க்கும் முயற்சிகள்! -பிரபாத் பட்நாயக் (05/07/2014ல் தீக்கதிரில் வெளியான கட்டுரை)




வளர்ச்சியடைந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தேவைப்படும் போதெல்லாம், பாசிச சக்திகளைப் பயன்படுத்துவது உண்டு. இன்று அதனை உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகச் செய்திருக்கின்றன. அத்தகைய சதிகளை எதிர்த்து ரஷ்யா நடவடிக்கையில் இறங்கிய போது, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதற்கு பதிலடியாக, ரஷ்ய அதிபர் புடின், உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். டாலர் என்ற ரிசர்வ் நாணயம் (உலகப் பொது நாணயம்) இல்லாமலேயே நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து கொள்வதே அவரது திட்டம்.
எந்தெந்த நாடுகளெல்லாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகி உள்ளனவோ, அல்லது அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்கின்றனவோ, அவற்றோடு அத்தகைய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. அத்தகைய ஒப்பந்தங்களில் பணப்பட்டுவாடா அமெரிக்க டாலரிலும் இருக்காது, ஐரோப்பிய யூரோவிலும் இருக்காது. மாறாக, இரு தரப்பு ஒப்பந்த நாடுகளின் நாணயங்களிலேயே இருக்கும். சீனா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளையுமே அதிபர் புடின் இதில் அதிகம்நம்புகிறார். அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு 400 பில்லியன் டாலர் அளவிலான எரிவாயுவினை சீனாவிற்கு சப்ளைசெய்வதென ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த மே மாதம் 21ம் நாள் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம், பணப்பரிவர்த்தனை டாலரில் இல்லை என்பதுதான்.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் புதிதல்ல!
‘இந்தியாவிற்கு இது போன்ற ஒப்பந்தங்கள் புதியவை அல்ல. பல ஆண்டு களாக முந்தைய சோவியத் யூனியனுடனும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளுடனும் இந்தியா செய்து கொண்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் இது போன்றவையே. ஒரு குறிப்பிட்ட செலாவணி மதிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையில் இந்தியா செய்து கொண்ட அத்தகைய ஒப்பந்தங்களில், பணப் பரிவர்த்தனையில் டாலரின் பங்கு எதுவுமில்லை. தற்போது புடின் சோவியத் யூனியன் காலத்திய அதேசெயல் முறையைத்தான் கையிலெடுத்துள்ளார்.

இதனால் லாபம் என்ன?
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், 30 டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு கொண்ட ‘ஏ’ என்ற ஒரு நாடு ‘பி’ என்ற மற்றொரு நாட்டிற்கு 100 டாலர் மதிப்பிற்கான பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது, அந்த ‘ஏ’ நாடு தனதுகையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணியான 30 டாலர், அத்துடன் தான் ஏற்றுமதி செய்த பண்டமதிப்பான 100 டாலர் என இரண்டையும் சேர்த்து, 130 டாலர் அளவிற்குத்தான் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். அதே நேரம் அவரவருடைய சொந்த நாணயங்களில் இந்த ஒப்பந்தம் நடைபெறும் என்றால், கூடுதலாக பண்டங்களை ‘ஏ’ நாட்டால் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். ஒரு வேளை அவை இரண்டும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி பொருளாதாரத் தடைகளின் காரணமாக டாலர் என்ற ரிசர்வ் நாணயத்தை பெற முடியாத நாடுகளாக இருந்தால், இது மாதிரியான இருதரப்பு ஒப்பந்தங்கள், அவர்களுடைய வர்த்தகத்தை கணிசமாக உயர்த்த உதவும்.

அரிதாகும் அந்நியச் செலாவணி!
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் காரணமாகவும் சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைக்காமல் போகலாம். அது தவிர, பொருளாதார மந்தம் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கிராக்கி குறையும் போது, அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைகின்றன. இதனாலும், சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைப்பது அரிதாகி விடக் கூடும். அந்தப் பிரச்சனையை இந்த ரஷ்ய பாணி இரு தரப்பு ஒப்பந்தங்கள் தீர்த்து வைக்கின்றன. இதில் ஈடுபடும் நாடுகள் பரஸ்பரம் மற்றவர்களின் நாணயங்களை ரிசர்வ் நாணயம் போன்றே ஏற்றுக் கொள்வதால், நடைமுறையில் இவர்களது அந்நியச் செலாவணி கையிருப்பும், வர்த்தகமும் விரிவடைகின்றன.

டாலரைத் தவிர்த்தல்!
இன்றைய உலகில் டாலரே ரிசர்வ் நாணயமாக இருக்கும் சூழலில் அதைவிடுத்து பிற நாட்டு நாண யங்களையும் ரிசர்வ் நாணயங்களாக ஏற்றுக் கொள்ளும் இந்த முறையினை ரஷ்யர்கள் பரிவர்த்தனையில் “டாலரைத் தவிர்த்தல்” (De-dollarisation) என்று அழைக்கின்றனர். இதனை ஊக்கப் படுத்துவதற்காக, ரஷ்யக் கம்பெனிகள் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு வர்த்தகத்தை ரஷ்ய நாணயமான ரூபிளிலேயே செய்ய வேண்டும் என்று, அண்மையில் ரஷ்யா சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

நீண்ட கால விளைவுகள்!
உலக ரிசர்வ் நாணயமான டாலர் அமெரிக்காவின் உள்நாட்டு நாணய மாகவும் இருப்பதால், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அதை எளிதில் அச்சிட்டுக் கொள்ள முடிகிறது. தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எவ்வளவு பெரிதானலும், டாலரை அச்சிட்டு அதனை ஈடு செய்து கொள்ள முடிகிறது. பின்னர் இப்படி அச்சடித்த டாலர்களை வைத்து அரசின் கருவூலப் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்கி, அதன் மூலம் பணத்தை பொருளாதாரத்திற்குள் புழக்கத்தில் விடுகிறது. பிற நாடுகள் அமெரிக்க டாலர் களைத் தவிர, வட்டி தரக் கூடிய டாலர் சொத்துக்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அந்தச் சொத்துக்களை அவர்களுக்கு விற்று, தான் அச்சடித்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஃபெடரல் ரிசர்வைப் பொறுத்த அளவில், இந்த இரண்டுமே ஒன்றுதான். பிற நாடுகள் விரும்புவது டாலர் என்றாலும், வட்டி தரும் வேறு நிதிச் சொத்து என்றாலும் அமெரிக்க நடப்புக் கணக்கிற்கு அதனால், எந்தப் பாதகமும் ஏற்படுவது இல்லை.

இரண்டு சூழல்களிலுமே
ஒரு வேளை நாம் ஏற்கனவே சொன்னபடி சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனைகளில் டாலர் தவிர்க்கப்படும் என்றால், அமெரிக்கா இப்படி டாலரை அச்சடித்து தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எளிதாகச் சரி செய்து கொள்ள முடியாது. டாலருக்கான கிராக்கி அவ்வாறு குறையும் போது, தேவைக்கு அதிகமாக டாலர் அச்சடிக்கப்பட்டால் டாலரின் மதிப்புமோசமாக வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அத்தகைய சூழலில் சொத்துடைமையளர்கள் தங்களுடைய சொத்துக்களை, தங்கம், வெள்ளி போன்ற பண்டங்களிலோ, பிற வடிவங்களிலோ மாற்றிக் கொள்ளவே விரும்புவார்கள்.
அதனை நோக்கியே செயல்படுவார்கள். அப்படி செய்யும்போது 1970களின் துவக்கத்தில் ஏற்பட்டது போன்று, பணவீக்கம் அதிகரித்து விடும். வேறு வழியில்லாமல் அமெரிக்கா தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைத்துக் கொண்டால், தனது மக்களின் நுகர்விற்காக அமெரிக்கா இன்று இறக்குமதி செய்யும் பண்டங்களின் அளவுகுறையும். அந்த அளவிற்கு அமெரிக்க மக்களின் வாழ்க்கைகத் தரமும் வீழ்ச்சியடையும். இராணுவச் செலவுகளையும் சுருக்க வேண்டிய தேவையின் காரணமாக, அமெரிக்காவின் இராணுவ பலமும் குறையும்.
அத்தகைய நிலை ஏகாதிபத்தியத்தின் தலைவனான அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இரண்டு சூழல்களிலும் நெருக்கடி கடுமையாகி, அதனால் முதலாளித்துவ உலகமும், அமெரிக்க மேலாதிக்கமும் ஆட்டம் காண நேரிடும். டாலர் ரிசர்வ் ஏற்பாட்டிலிருந்து எந்த நாடேனும் விலகி, வேறு நாணயங்களுக்குச் சென்றால், அமெரிக்கா அதை கடுமையாக எதிர்கொள்ளும் என்பது அறிந்ததே. இராக் தனது எண்ணெய் வர்த்தகப் பரிவர்த்தனையை டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றத் திட்டமிட்டதுதான் இராக் ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான காரணம் என்று இன்றைக்கும் ஒரு சந்தேகம் உள்ளது.

சீனாவின் தேவை!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவிற்கும், ஈரானுக்கும் டாலரைத் தவிர்க்கும் இயல்பான தேவை உள்ளது. சீனாவிற்கு அத்தகைய தேவை வேறு வகையில் உள்ளது. ஆனால், அதில் சிக்கலும் உள்ளது. பெருமளவிலான தனது நடப்புக் கணக்கு உபரியின் காரணமாக, சீனா ஆகப்பெருமளவில் டாலரையும், டாலர் மதிப்பிலான சொத்துகளையும் குவித்து வைத்திருக்கிறது. அனைத்தையும் டாலர் மதிப்பிலேயே வைத்துக் கொள்ளும் அபாயத் தினை மனதில் கொண்டு, மெள்ள மெள்ள அதை தங்கமாகவும், யூரோவாகவும் மாற்றிக் கொண்டு வருகிறது. அண்மைக் காலங்களில் யூரோவின் மதிப்பு சற்றுவலுப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தங்க இறக்குமதியில் இந்தியாவைப் போல தனியார் என்று இல்லாமல், சீன அரசாங்கமே அதைச் செய்கிறது.

சீனாவின் சங்கடம்!
டாலரைத் தவிர்க்கும் நடவடிக்கை, டாலரின் மதிப்பை வீழ்த்தி விடும். டாலர் மதிப்பில் சொத்துக்களைக் குவித்திருக்கும் சீனாவிற்கு இதனால், மூலதனஇழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. மரத்தில் தான் அமர்ந்திருக்கும் கிளையினையே வெட்டிய மகாகவி காளி தாசனின் கதையாக அது ஆகிவிடும். எனவே தான் சீனா சத்தமில்லாமல் இரகசியமாக, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாமல் டாலரிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறுகிறது. இந்தப்புரிதலுடன் தான், ரஷ்ய - சீன ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் நிலை!
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்ந்து அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்வதாகவே உள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறுவதற்கு நிர்ப்பந்தம் ஏற்படும் போது, இது தற்காலிக நடவடிக்கை தான் என்று கூறி, அமெரிக்காவின் அனுமதியைப் பெற்ற பின்னரே, இந்தியா அதைச் செய்கிறது. ஒருவேளை தடைகளை உடைத்து ஈரானுடன் வர்த்தகம் செய்வது என்று இந்தியா முடிவு செய்தால், தடை மீறிய வர்த்தகத்திற்கு காப்புறுதி வழங்க நம் நாட்டின் பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குக் கூட அதற்கான பலம் இல்லை.
ஏனெனில், அவையெல்லாம் இன்றைக்கு, மேற்கத்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள் தரும் மறு காப்பீட்டினை நம்பி நிற்க வேண்டிய நிலையில் உள்ளன. தடை மீறிய வர்த்தகம் என்று தெரிந்தால் மேற்கத்திய கம்பெனிகளிடமிருந்து அதற்கான மறு காப்பீடு கிடைக்காது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அதற்குத் தீர்வு காண முடியும். அப்போது தான் குறைந்தபட்ச தன்னதிகாரத்தினை காப்பாற்றிக் கொள்ள இயலும். மேற்கத்திய கம்பெனிகளை நாடி மறுகாப்பீடு செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனில், பொதுத் துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளின் வலிமையினை அதிகரிக்கும் வகையில், கணிசமான அரசு முதலீடு தேவைப் படுகிறது. ஆனால், அதையெல்லாம் செய்வதற்கு, அதாவது, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு அடிபணியும் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வதற்கு இந்தியா தயாரில்லை.

சோவியத் யூனியனும்
ரஷ்யாவும் ஒன்றல்ல!
ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு நாம் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. ரஷ்யச் செல்வந்தர்கள் மேற்கத்திய வங்கிகளில் அநேகமாக டாலர் வடிவிலேயே சொத்துக்களை வைத்திருக்கின்றனர். டாலரைத் தவிர்க்கும் முயற்சியினை ரஷ்யக் கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய வர்க்க எதிர்ப்பினை புடின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்க எதிர்ப்பு கொண்டதாக இருந்தாலும், புடினின் ரஷ்யாவும் சோவியத் யூனியனும் ஒன்றல்ல. நாளைக்கே புடின், மேற்கத்திய நாடுகளிடம் சரணடைந்து, டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

தமிழில் : ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி.

5/6/14

மாற்றம் அல்ல, தொடர்ச்சியே!

அக்கீல் பில்கிராமி கொலம்பியா பல்கலைக்கழகத் தத்துவத் துறை அறிஞர் 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களின் பின்னணியில், புதிய பிரதமர் மோடி “இந்தியாவின் அரசியல் பிரபஞ்சத்தினையே முற்றிலும் மாற்றி அமைக்கப் போகிறார்” என ‘கார்டியன்’ ஏட்டில் அஷூதோஷ் வர்ஷினி என்ற விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலப் பாசாங்கு வார்த்தைகள் கூட அரசியல்வாதிகளுக்கு இத்தகைய தொரு மலிவான வழியில் புகழ் தோற் றத்தினைக் கொடுத்து விடுகின்றன. தேர்தல் காலத்தில் அச்சிலும், திரை யிலும் மோடியும் அவரது பாசாங்குப் பேச்சுக்களும் இல்லாமல் எந்த ஊடகஇருந்தது? மாறிவரும் இன்றைய நவீனகால பொது வாழ்க்கையின் பிரதிபலிப் பின் ஒரு பகுதியே இது. இந்தத் தோற் றத்தினைப் பெறுவதற்கு மோடி எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சிகள், கார்ப் பரேட்டு நிறுவனங்களும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் இதற்காக செலவிட்ட நிதி என அனைத் தும் சேர்ந்து மோடிக்கு நாடு முழுவதும் இத்தகைய தோற்றத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்டது என்னவோ உண்மை.



தன்னடக்கப் பாசாங்கு


மோடியின் தந்திரம் பலித்து விட்டது. நாட்டின் மிக உயர்ந்த பதவியினை அவர் அடைந்து விட்டார். ஆனால், அவர் இப்போது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தனது இயல்பான தன்மையினை மறைத்து, மிகவும் தன்னடக்கப் பாசாங்குடன், ஏழை மக்களைப் பற்றியும், உழைக்கும் மக்களைப் பற்றியும் மிகவும் அக்கறையுடன் பேசத் தொடங்கியுள்ளார். இவர் தொடரப் போகும் கொள்கைகளால் எந்த மக்கள் மேலும் வறுமைக்குள்ளும் பாதுகாப்பற்ற வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படப் போகின்றனரோ, அந்த மக்கள் குறித்து இப்போது மிக்கப் பரிவுடன் பேசி வருகிறார். தேர்தலுக்கு முன்பு மோடியை எதிர்த்தவர்களில் சிலர் கூட, அவர் ஏதாவது நல்லது செய்யக் கூடும் என்று நம்புகின்ற இன்றைய நிலையில், இதைச் சற்று அழுத்தமாக கூற வேண்டியத் தேவை உள்ளது எனக் கருதுகிறேன்.

மெத்தனம் கூடாது

ஒரு ஜனநாயகத்தில் தேர்தல்கள் குறித்து இரண்டு விஷயங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு, அந்த முடிவுகள் ஒருவருக்கு அச்சமளிப்பதாக இருப்பினும், எந்த காரணத்தைக் கொண்டும் வாக்களித்த மக்கள் மீது குற்றம் சொல்லக் கூடாது. இதைத் தாண்டி பெருந்தன்மையுடன் பேசுவதற்கு இதில் வேறொன்றுமில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து விமர்சனபூர்வமாக கணிப்புகளைச் செய்யும் அம்சத்தில் மட்டும் அசட்டையாக இருந்து விடக் கூடாது. அவப்பெயர் கொண்ட ஒருவர் வெற்றி பெற்று விட்டதனாலேயே, அந்த வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் தனது சித்தாந்த நம்பிக்கைகளையும், இயல்புக் குணாதிசயங்களையும் மாற்றிக் கொள்வார் என்று முடிவுக்கு வந்து விடக் கூடாது. அத்தகைய மெத்தனப் போக்கு தீயது. அது நமது நம்பிக்கைகளையும் போராட்டங்களையும் பாழ்படுத்தி விடும்.

பாசிசம் என்பது என்ன?

1930-40களில் ஐரோப்பாவில் இருந்த நிலைமைகளை மனதில் கொண்டு, அந்த அடிப்படையில், இன்று காலத்திற்குப் பொருந்தாத வகையில், மோடியை ‘பாசிஸ்ட்’ என்று அழைப்பது அறிவீனம் என, மோடி எதிர்ப்பாளர்கள் குறித்து சில அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். அப்படியானால், பாசிசம் என்பது தான் என்ன? பாசிசத்திற்கு இரண்டு முக்கிய குணாம்சங்கள் உண்டு. ஒன்று, தனது நாட்டிற்குள்ளேயே அந்நிய எதிரிகள் என்று ஒரு பகுதியினரை அடையாளப்படுத்துவது. (ஜெர்மனியில், யூதர்கள், நாடோடிஜிப்சிகள் இவ்வாறு அடையாளப்படுத்தப் பட்டனர்). இரண்டு, தேசத்தின் நலன்களையும், கார்ப்பரேட் நலன்களையும் இரண்டறக் கலப்பது. பாசிசம் என்பது அது தான் என்று பாசிசத்திற்கு முசோலினி அளித்த அந்த புகழ் பெற்ற விளக்கம் அந்தவிமர்சகர்களுக்கு நினைவுக்கு வரவில்லை போலும். முஸ்லிம்கள் குறித்த விஷயத்தில் மோடியின் கடந்த கால வரலாறு, அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் என இவ்விரண்டையும் பொருத்திப் பார்த்தால் மோடி யார் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?.

பசப்பல்கள்!


மாற்றம் குறித்தும், இந்தியாவின் புதிய எதிர்காலம் குறித்தும் மோடி விடுக்கும் அறிக்கைகளை பசப்பல்கள் என்று நான் கூறுவதற்கு அழுத்தமான காரணங்கள் உண்டு. மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் பின்பற்றிய கொள்கைகளைத் தான் மோடியும் தொடரவுள்ளார். ஒரேஒரு மாற்றம் என்னவெனில், பி.ஜே.பிஅந்தக் கொள்கைகளை சற்று சாமர்த்தியமாக நிறைவேற்றும். தற்போதைக்கு, பொருளாதார அரங்கினை விட்டு விடுங்கள். உதட்டளவில் மதச்சார்பின்மை பேசிக் கொண்டாலும், இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் இந்திய அரசியலில் பெரும்பான்மைவாத, வகுப்புவாத அம்சங்களை நுழைத்தனர். பின்னர் பி.ஜே.பி அதை எவ்வாறு அவற்றின் தர்க்கரீதியான எல்லைக்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்றது என்பது நாம் அறிந்தது தானே?

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், உணவுப் பாது காப்புத் திட்டம் என்பனவெல்லாம் ஐ.மு.கூ அரசின் திட்டங்களே எனினும், அதனைச் சரியாக நிறைவேற்றாமல், அது அவற்றைக் கிடப்பில் போட்டு விட்டது. ஆனால், பி.ஜே.பி இது போன்ற விஷயங்களில் சாதுரியமாக நடந்து கொள்ளும். மோடியின் ‘குஜராத் மாடலுக்கும்’, சந்திரபாபு நாயுடுவின் ‘ஆந்திரா மாட லுக்கும்’ இடையில் என்ன வேறுபாடு? சென்ற முறை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் முடிவில் என்ன ஏற்பட்டது? பெருநகர் அடிப்படியிலான வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களின் நலன்களைக் காவு கொடுத்ததன் விளைவாக ஆந்திராவில் அன்று சந்திரபாபு நாயுடுவின் கட்சி தோற்றது மட்டுமல்ல, அந்த மாநிலமே இன்று இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்பட்டு விட்டதே?.

ஊழல் ஒழிந்து விடுமா?

காங்கிரஸ் ஆட்சியில் உருவான பெரும் ஊழல்களை எல்லாம் ஒழித்து விடுவோம் என பி.ஜே.பி கூறுவதும் மற்றொரு பசப்பலேயாகும். இதற்கு முந்தைய கால கட்டத்தில் இதே பி.ஜே.பி ஊழல் குறித்த அம்சத்தில் எப்படி நடந்து கொண்டது என்பது நாம் அறிந்தது தானே? கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல் இந்திய முதலாளித்துவத்தின் உள்கட்டுமானமாக மாறியிருக்கும் நிலையில், அதை ஒழிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதைப் பொறுத்த மட்டில், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல.

முஸ்லிம் இளைஞர்கள்!

இந்தத் தேர்தல் காலத்தில், படித்த முஸ்லிம் இளைஞர்களின் மனநிலை, பிற பொதுவான முஸ்லிம் மக்களின் மன நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது என, ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ (22.05.2014) ஏட்டில் ஒரு விமர்சகர் எழுதியிருக்கிறார். மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு சாதகமான மனநிலையில் அவர்கள் இருந்தனர் என்றும் கூறுகிறார். இது ஏறக்குறைய ஜின்னா காலத்தில் இருந்தே, அதாவது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடர்கிற நிலைமை தான். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள், குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் படித்த இளைஞர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவர்களாக இருந்தனர்என முன்பு மௌலானா ஆசாத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். இப்போதும் கூட, மோடி பெரும்பான்மை வாதத்தில் நம்பிக்கை கொண்டவர் எனினும், பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்று வரும் போது வேலை வாய்ப்புக்கள் உருவாகலாம் என்ற நப்பாசை அவர் களுக்கு இருந்திருக்கக் கூடும். 

இது என்ன புதிதா?

பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்பது ஒன்றும் புதிதல்ல. இதைத்தானே முந்தைய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கூறி வந்தார்? 2008 மே மாதம் டெஹல்கா ஏட்டிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய நாட்டின் 85 சதவீதத்தை நகரங்களாக மாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்திய நாட்டில், ஆயிரக்கணக்கான வருடங்களாக விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையினை ஒரேயடியாக மாற்றி விடுவது அவ்வளவு எளிதா என்ன? வறுமையில் வாடும் அந்த மக்களின் வாழ்நிலையினை மேலும் மோசமாக்குவதன் மூலம் தான், இந்தச் சீர்திருத்தத்தினை இன்று அவர்கள் தொடங்க முடியும்.

நவீன தாராளவாதமும், அதிருப்தியும்!

மாற்றம் குறித்த வாக்குறுதிகள் ஒன்றும் புதிதல்லவே. 2004 தேர்தல் களை சற்று நினைத்துப் பாருங்கள். ‘ஒளிரும் இந்தியா’ என பி.ஜே.பி கூறிய பசப்பல் வார்த்தைகளை எவரும் அன்று நம்பவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளாக நடைபெற்ற மோசமான ஆட்சியின் பின்னணியில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் அவ்வளவு வலு வாகவும் இல்லை. அது மக்களிடம் எடுபடவுமில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளே அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்ற உண்மையினை மக்கள் புரிந்து கொள்ளாதவாறு தடுக்கும் வகையில் ஊடகங்களின் செயல்பாடுகள் அமைந்து விட்டன. அந்த நோக்கில் செயல்படும் பல பண்டிதர்கள், விமர்சகர்களின் சேவகமும் இதன் பின்னணியில் இருந்தது. நாட்டு நடப்புக்கள் குறித்த குறைந்தபட்ச விவரங்களும், நேர்மையான பரிசீலனையும் இருந்தால் இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

நேர்மையான அரசியல் கட்சிகள்!

அதே வேளையில், இந்த நிலைமை தான் எப்போதும் தொடரும் என விரக்தி அடையத் தேவையில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளை எதிர்க்கும் நேர்மையான அரசியல் கட்சிகள் தங்களது பலவீனத்தைக் களைந்து, தங்களது அரசியல் சக்தியினையும், அரசியல் உறுதியினையும் ஒன்று திரட்டிப் போராடும் நிலை தோன்றினால் அது சாத்தியமானதே. இன்றைய சூழலில், அது உடனடியாக சாத்தியமில்லை என்பது போலத் தோன்றக் கூடும். ஆனால், இன்று வரை கடைப்பிடிக்கப் பட்டிருக்கும் கொள்கைகளும், நாளையும் மோடி தொடரவிருக்கிற மேலும் கடுமையான நவீன தாராளவாதக் கொள்கைகளும், உண்மையான மாற்றத்திற்கான சூழ்நிலையினையும், அதற்காகப் போராடும் உத்வேகத்தினையும் கண்டிப்பாக உருவாக்கி விடும்.

வழி காட்டும் அரசியல் எது?

இது ஒன்றும் நடக்க முடியாதது அல்ல. உலகின் சில பகுதிகளில் இது ஏற்கனவே தொடங்கி விட்டது. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் அது எழுச்சி பெற்று வருகிறது. ஆனாலும், சர்வதேச ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. கடுமையான எதிர்மறைச் சூழலுக்கிடையிலும் அந்நாடுகளின் மக்கள் நடத்தும் இயக்கங்களின் பின்னணியில், இன்று மாற்றுக் கொள்கைகளை அமலாக்கும் அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரு கின்றன. அந்த அரசுகள், சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களையும் மீறி, எளிய மக்களின் வாழ்நிலையை சிறிது சிறிதாக உயர்த்தி வருகின்றன. இந்தப் பின்னணி சில கேள்விகளை எழுப்புகிறது. மக்கள் அத்தகைய அரசு களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிகாட்டிய அரசியல் எது? மக்களை அணிதிரட்டும் வகையில் மக்கள் மத்தியில் அந்த அரசியல் எவ்வாறு கட்ட மைக்கப்படுகிறது? நவீன தாரளவாதக் கொள்கைகளின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகாமல், அதை அந்த அரசுகள் எப்படி எதிர்த்து நிற்கின்றன? அத்த கைய அரசியலையும், அரசியல் பொரு ளாதாரத்தையும் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், மேற்கண்ட கேள்வி களுக்கான உரிய விடைகளையும் தேடிக் கண்டுணர்தல் இன்று மிகவும் அவசியம்.

தொகுப்பு:இ.எம். ஜோசப் நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 30.05.2014