3/2/17

ப்ரிகால் போராட்டமும்; தாமதமான நீதியும்.







நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி டெல்லி முதல் நாட்டின் மூலை முடுக்கு வரை விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் நடைபெற்று வரும் பிற விஷயங்களில் நம் கவனங்கள் செல்வதில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படையான விஷயங்கள் என்றும் விவாதிக்க பட வேண்டியவை. அதிலும் நமது நீதி துறை அத்தைகைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய ஒன்று. கவனிக்க தவறிய அந்த விஷயம் வேறொன்றுமில்லை, ஒரு தொழிற்சங்கத்துக்கும் நீதி துறைக்கும் இடையே நம்காலத்தில் நடைபெற்று முடிந்த “நீண்ட” உரையாடலை தான் நாம் பார்க்க தவறியது.



ஜனவரி 17ம் தேதி, கோவை ப்ரிகால் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கான காரணமாக நிதிமன்றம் கூறியது “குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை” என. 


முன்னதாக 2012ம் ஆண்டு கோவை செஷன்ஸ் நீதி மன்றம் இபிகோ பிரிவு 302 மற்றும் 449 (கொலை குற்றம் மற்றும் குற்றம் புரிய முனைதல்) படி தொழிலார்கள் எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது இங்கு குறிப்பிட தக்கது.



                          ப்ரிகால்


கோவை- தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்”. 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்களை கொண்ட நாட்டின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்று. வாகனங்களுக்கான துணை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு பொரியியல் தொழிநுட்ப கருவி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ப்ரிகால், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உற்பத்தி நிர்வனம். 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு உற்பத்தி பிரிவுகளாக- உத்தரக்கண்டில் இரண்டு, புனே மற்றும் குர்கானில் தலா ஒன்று என- செயல்பட்டு வரும் ‘ப்ரிகால்’ வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தி பெரு நிறுவனங்களுக்கு இந்நிறுவனமே தொழில் நுட்ப சாதனங்களான வேக கணிப்புக் கருவி, உணர் திறன் கருவி ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. கோவையில் இரு உற்பத்தி பிரிவுகளாக (பிளான்ட் 1 மற்றும் பிளான்ட்3,4) இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் முதல்முறையாக ஒட்டு மொத்த வருவாயாக 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவித்து உள்ளது.





          ஊதிய உயர்வு – போராட்டம்


5100 ஊழியர்களை கொண்ட ப்ரிகால் நிறுவனத்தில் 650 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி புரிகின்றனர். 2007ம் ஆண்டு, நியாமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை முன்வைத்து ப்ரிகால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து “கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்” என்னும் பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தனர். ஆனால் அந்நிறுவன மனித வளப் பிரிவு மேலாளரான ராய் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு தான், இச்சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டது. தொழிற் சங்கத்தை ஆரம்பித்த நபர்களில் 6 பேர் உத்தரகண்டிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. 

தொழிற் சங்க தலைவரான குமாரசாமி கூறுகையில்,
 “ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான இடர்களை தாண்டி தான் வந்துள்ளோம். போராட்டம் ஆரம்பமாகிய காலத்திலும் எங்கள் மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்பட்டே வந்தன. மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் யூனியனை கைபற்றி தொழிற்சாலைக்கு ஆபத்து ஏற்படுத்துக் கின்றனர் என்றே நிர்வாகம் எங்கள் மீது பழி கூறியது” என்றார்.



           என்ன கோரிக்கைகள்



சங்கம் துவங்கிய 2007ம் ஆண்டு பணியாளர்களின் மாத ஊதியமாக இருந்த தொகை 8,522 ரூபாய். ஓய்வு தொகை 1,00,000 ரூபாய். 25 ஆண்டுகள் வேலை செய்து பணி ஓய்வு பெற்றாலும் இதே தொகை தான். வேலை பளு மிக அதிகம். வேலை நேரத்தில் இடைவேளை கூட அதிக நேரம் இல்லை. எனவே பணியாளர்கள் தங்கள் கால்கள் பக்கத்திலேயே தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். உற்பத்தி தேவை அதிகமாக இருக்கிற படியால், கிடைக்கிற குறைந்த இடைவேளையில் எழுந்து செல்லக் கூட நேரம் இருப்பதில்லை என தெரிவித்தனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே அடிப்படை உரிமைகளான நியாமான வேலை சூழலை வழங்க கோரியும், குறைவான ஊதியத்தை எதிர்த்தும், தற்காலிக பணி அல்லாது நிரந்தர பணி வழங்க கோரியும் 2009ம் ஆண்டு, கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். 



             ராய் ஜார்ஜ் கொலை



இப்படியான ஒரு சூழலில், இரும்பு தடிகளோடு நுழைந்த ஆட்களால் மூர்க்கமாக தனது அலுவலக அறையிலேயே அடித்து கொல்லப் பட்டார் ராய். கேரளம், எர்னாகுளத்தை சேர்ந்தவரான ராய் ஜார்ஜ் கோவை பெரியநாயக்கன்பாளையம் ப்ரிகால் மனிதவளப் பிரிவு துணை தலைவராக பணி புரிந்து வந்தார். அரசின் தலையீட்டால், நடைபெற்று வந்த போராட்டம் சமரச தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில் தான் இத்தைகைய கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை 11.40மணி அளவில் ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டு சரிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அலுவலக அறையில் இருந்த நான்கு பேரும் தாக்குதலுக்கு ஆளாயினர். உடன் மாலை 4.30மணிக்கு மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாலை 6.30க்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இரவு 10 மணிக்கு தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.



             முதல் கோணல்


குற்றம் சாட்டபட்ட அத்துனை பேரும் அடுத்த நாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சிலர் இணைக்கப் பட்டனர். வழக்கின் ஆரம்பத்தில் தொழிற்சங்க தலைவர் குமாரசாமி உட்பட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்ற அறிக்கையில் நிறைய “இடைசெருகல்கள்” இருப்பதாக நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. 42தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தொடர்ச்சியான போலிஸ் விசாரணைக்கு உள்ளாகப் பட்டனர். நான்கு பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு 2009ம் ஆண்டு ஜாமின் கிடைக்கும் வரை 130 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டனர். 2012ம் ஆண்டு வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், எட்டு பேரை குற்றவாளிகளாக அறிவித்து மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. தொழிலார்கள் எட்டு பேருக்கும் கடுங்காவலுடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கியமான வாதமாக அப்போது முன்வைக்கப் பட்டது,  ‘நடந்த கொலையை குற்றம் சாட்டப்பட்ட தொழிலார்கள் தான் செய்தார்களா’ என்பது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது 

“கொலை நடந்த சமயம் ராயின் கேபினில் இருந்த சிசிடிவி அந்த நாள் மட்டும் வேலை செய்யவில்லை. ஏன் சிசிடிவி கேமரா அன்று மட்டும் பழுதாகி போனது? ஆனால் கொலைக்கான சாட்சியமாக அவரது அறைக்கு வெளிய இருந்த சிசிடிவி’யில் பதிவான காணொளி சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கொலை நடந்த அறையில் ஆட்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளது, ஆனால் அது இந்த தொழிலாளர்கள் தான் என எப்படி சொல்ல முடியும்? நடந்தது கொலை என்பதை நிருபிக்க வேண்டுமானால் அந்த காணொளி பொருந்தலாம், ஆனால் யார் கொன்றார்கள் என அதை வைத்து எப்படி நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்”.



                  இரண்டாம் திருப்பம்


இந்த கொலை பற்றியும் அதற்கு முன்பிருந்தே நடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் தி-வயர் தளத்தில் எழுதிய செய்தியாளர் மதுமிதா தத்தா, இந்த ஒட்டுமொத்த ‘ப்ரிகால் நிகழ்வுகளையும்’ மாருதி நிறுவனத்தின் மானசர் தொழிற்சாலை சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ப்ரிகால் கொலை பற்றி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கொலை சம்பவம் 11.40க்கு நடந்ததாக குறிப்பிடப் படும் அதே வேளையில் “எதிர்பாரா விதமாக” வழக்கின் விசாரணை அதிகாரியான போலிஸ் ஒருவரும் 11.41 முதல் 11.46 வரை அதே தொழிற்சாலையினுள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடுகிறது. ‘சாதாரண உடையில்’ கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த அதிகாரியிடம் கொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டபோது, “தனக்கு நிர்வாகம் கொலை நடக்கிறதென எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் நடைபெற்று வந்த காலம் என்பதால் பந்தோபஸ்த்துகாக ப்ரிகால் ஆலைக்கு வெளியுலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருந்தும் கொலை நடக்கவிருந்தது எப்படி போலீசிற்கு தெரியாமல் போயிற்று என டிபன்ஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மாருதி மானசர் ஆலை சம்பவம் ஒத்துப் போவது இங்கேதான். மானசர் தொழிற்சாலை மேலாளர் அவ்னிஷ் தேவ் ஆலை உள்ளேயே வைத்து கொடூரமான முறையில் எரித்து கொல்லப் படுகிறார். தொழிற்சாலை முழுவதும் தீ வைக்கபடுகிறது. அடுத்த நாள் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நூற்று கணக்கில் தொழிலாளர்களை கைது செய்கின்றனர். ஏனெனில் அங்கும் வன்முறைக்கு முன்னர் ஊதிய உயர்வுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. மனாசர் தொழிற்சாலை தீக்கு இரையாக்கப்பட்ட அன்று 148க்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டனர். ஆனால் இறுதி வரை பதிலளிக்க முடியாத கேள்வியாக இருந்தது “யார் தீ வைத்தார்” என்பது தான். முதல் நாள் போலிஸ் பரிசோதனை போது எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் தடயவியல் அதிகாரிகள் தீப்பெட்டி ஒன்றை கண்டு எடுத்தாக தெரிவித்தனர். 

அப்போது தொழிலாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் க்ரோவர் வைத்த கேள்வி 
“எரிந்த நெருப்பில் மொத்த தொழிற்சாலையே சாம்பலாகி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீப்பெட்டி மட்டும் எரியாமல், எந்த வித சேதமும் இல்லாமல் எப்படி ‘கண்டு எடுக்கப் பட்டது’?”




                    முற்றும் கோணல்




கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் அறுவரை விடுதலை செய்து, இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து ஒற்றை ஆயுள் தணடனையாக தண்டனை குறைப்பு செய்துள்ளது. காரணம், ப்ரிகால் நிர்வாக தரப்பில் உதவி மேலாளர் அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை. மேலும் பலரது சாட்சியங்கள் ஆட்சேபனைக்கு உரியதாய் இருந்துள்ளது, பிறகு வழக்கின் ஆரம்பம் முதலே நீடித்து வந்த குழப்பங்களும் ஒரு காரணம். சாட்சியங்கள் யாவும் நம்பத்தகுந்தாக இல்லை என்றதோடு ‘பொய் சாட்சியங்களை’ கண்டித்த நீதிமன்றம், அதன் அடிப்படியிலேயே விடுதலையையும் பிறபித்து உத்தரவிட்டது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். இந்தியாவில் நீதி துறை மூலம் எளியவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. எனினும் முற்றும் முழுதாக முடியவும் இல்லை. இன்னும் இரு தொழிலாளர்கள் சிறை கம்பிகளுள் இருகிறார்கள். அவர்களுக்கான மேல் முறையீடு முயற்சியகள் முன்னெடுக்கப் படலாம். ‘கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்’ முன்னெடுத்த இந்த போராட்டம் துவங்கிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 8,522ரூபாய், ஓய்வு ஊதியம் 1 லட்சம், இப்போது வழங்கப்படும் மாத ஊதியம் 24,500 ரூபாய், ஓய்வு ஊதியம் 3.5 லட்சம் ரூபாய். 

சிறையில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நால்வரும் தங்களுக்காக அதுவரையிலும் போராடிய தொழிற்சங்க தோழர்களை ஆரத் தழுவி அழுத புகைப்படம் அடுத்த நாள் ஓரிரு நாளிதழ்களின் மாவட்ட செய்தி பிரிவில் ஒரு சிறு பெட்டி செய்தியாக இடம் பெற்று இருந்தது. ஆம், மாபெரும் பட்ஜெட் பற்றிய செய்திகளுக்கு இடம் வேண்டும் அல்லவா? 







- கபிலன். இல



***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக