5/6/23

'வாழ்வதாகச் சொல்கிறோம், வாழ்கிறோமா?' – பகுதி 1


ஜூன் மாத ஆரம்ப நாட்களின், இதுவரை வதைத்து வந்த கடும் வெயில்காலத்தின் கடைசிக் கட்டத்தின் அறிகுறியை உணர்வது போல, இதமான இரவு குளிரின் அரவணைப்பில் எழுதுகிறேன். இருபதுகளின் மத்திமத்தை கடக்கும்போது வாழ்க்கை இன்னும் இருக்கிறது; சொல்லப்போனால் இன்னும் எங்கோ இருக்கிறது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இதுவரை இருளினில் அடைபட்டுக்கிடந்த காலம் குறித்து கவலைக் கொள்ளாது, இனிவரும் நாட்களை உற்சாகத்துடன் எதிர்நோக்குவோம் என்பதே எண்ணமாக இருந்தது. மேலும் ஒருபடி சென்று விவரிப்பதென்றால், நாம் இனியும் விடலைகள் அல்ல, வளர்ந்து வருகிறோம், நம் கல்லூரிக் காலத்தில் தென்பட்ட சில சிறுமைகளில் இருந்தும்கூட விலகி, முழுக்க முதிர்ந்த நிலையில் வாழ்வை எதிர்கொள்வோம், நம் நண்பர்களும் அத்தகைய முதிர்ச்சியோடே நம்முடன் உடன் வருவர் என நினைத்து இருந்தேன். நாம் எதிர்பார்ப்பதில் இல்லை பிரச்சினை, நம் எதிர்பார்ப்பு எங்கிருந்து எழுகிறது என்பதை பெரும்பாலும் நாம் பொருட்படுத்தாது இருப்பதில் தான் இருக்கிறது பிரச்சினை.


சிறுவயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். குறிப்பாக பந்து வீசும் சமயம் எவ்வளவு தூரம் ரன்களை கட்டுப்படுத்த முடிகிறதோ அவ்வளவும் வெற்றிக்கு வித்திடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருப்போம். ஆட்டக்களத்தில் உள்ள பதினோரு பேரும் ஒற்றை தரப்பாக நின்று விளையாட உந்தப்படுவோம். அதன் காரணமாகவே யாரேனும் ஒருவரின் அலட்சியத்தால், பந்தை சரியாக தடுக்கவில்லை என்றால் கோபத்துக்கு உள்ளாவோம். நம் கோபத்தை, சக ஆட்டக்காரரான நம் நண்பரிடம் இயல்பாக வெளிப்படுத்துவோம்; உடனடியாக இல்லையென்றாலும் ஆட்டத்தின் முடிவிலாவது செய்வோம். இதில் கவனிக்கத்தக்க ஆச்சரியம் என்னவெனில், நமது கோபத்தின் நியாயத்தை அந்நண்பர் உணர்ந்திருப்பார். தன்னை தாழ்த்திவிட்டான் என்றோ, மற்றவர்கள் முன் வேண்டுமென்றே அவமானப்படுத்தி விட்டான் என்றோ, உள்ளிருந்து வெளிப்பட்ட தீய எண்ணத்தினால் தனது செயல்பாட்டை குறை கூறியோ அல்லது தனது தவறை உள்நோக்கத்துடன் பெரிதுப்படுத்தி சொன்னான் என்றோ ஒரு சலசலப்பும் இருக்காது. இத்தனைக்கும் யோசித்து பாருங்கள் அந்த ஆட்டத்தினால் என்ன முடிவாக கிடைத்து விடப்போகிறது? என்ன அதிகபட்சம் ஒரு கோப்பை கிடைக்குமா? ஆனால் பாருங்கள் ஒரு கோப்பை கூட வேண்டீராது நாம் பல ஆட்டங்கள் மகிழ்ச்சியாய் ஆடி இருப்போம். எது நம்மை இத்தைகைய ஒற்றுமைக்கும் (solidarity), சகோதரத்துவதுக்கும், மகிழ்ச்சிக்கும் உந்தியது? விளையாடிய யார் ஒருவருக்கும் salary கிடைக்கப்போவதில்லை, pay hike’ம் ஆகப் போவதில்லை, promotion’ம் கிட்டப்போவது இல்லை. இன்னும் இன்றைய காலத்து வழக்கத்தில் சொல்வதென்றால் இது வெறும் “நேர விரயம்” தானே? உடனடி பலாபலனை தராத, ஆனால் மகிழ்ச்சி தரக்கூடிய, கூட்டுச் செயல்பாட்டை நாம் எத்தனை பேர் இன்றைய நாட்களில் செய்ய விழைகிறோம்? நமக்கு வயதாகி விட்டதல்ல பிரச்சனை. கிழத்தன்மை (‘senelity’ or ‘psychological senelity’) வந்து விட்டது. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.    

 

வயதாவதால் கிழத்தன்மை வந்துவிடாது. கிழத்தன்மை வருவதற்கும், அது நிலைப்பதற்கும் வயது ஒரு பெரிய காரணி இல்லை. நாம் விளையாட்டை மறப்பதால் அல்ல, விளையாட்டின் விதிகளையும், norms’யையும்  மறப்பதால் தான் வாழ்வின் தொய்வை உணர்கிறோம், கிழத்தன்மையை பூணுகிறோம். அதனால் தான் இயல்பாக ஒரு சிறு விஷயத்தில் ஏற்பட்ட கோவத்தை நண்பன் ஒருவனிடம் வெளிப்படுத்தும் போது அவன் கடிந்து கொண்டதோடு, பதிலுக்கு சண்டையும் போட்டான்தோழி ஒருவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு surprise நிகழ்வில் இருந்து கடைசி நிமிடத்தில் அவர் தன்னை விடுவித்துக் கொள்கிறார். எனக்கு ஏற்பட்ட நல்ல செய்தியை தெரிவிக்க தொலைபேசியில் பலமுறை அழைத்தும் எதுவும் பதில் இல்லாததால் இன்றுவரை எனக்கு நேர்ந்த (வாழ்வில் எப்போதாவது தான் நிகழும்) நற்செய்தியை நண்பன் ஒருவனுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இதுக்கு எல்லாம், இவர்களுக்கு எல்லாம் ஏற்றார்போல, ஒரே பதில் நடவடிக்கை தான் இருக்கிறது. அது நாமும் இவர்களைப் போல கண்டும் காணமல், நமது காரியத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நமது கூட்டுக்குள்ளேயே அடைந்து விடுவது தான். கடைசில் நமது வாழ்-உலகம் திறந்தவெளி சிறைப்போல இருக்கும். அப்படி நானும் எதிர்விணை ஆற்றிவிடக்கூடாது என்று தான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்படி நடந்து கொள்வது வெகு சுலபம். தேவைப்படும் சமயத்தில் பேசினால் போதும், பார்க்கநேரும் தருவாயில் மட்டும் அலங்காரமாக வாழ்த்துகளை தெரிவித்தால் போதும். நமக்கு என்றோ வந்து சேர்ந்தது என்றாலும், திறக்கப்படாத அந்த message’ல், அதனுடன் வந்து இருக்கும் படத்தில் தெரியப்படுத்தும் செய்தி என்பது நமது நண்பர் ஒருவரின் திருமண அழைப்பாகவும் இருக்கலாம், அல்லது அவர் திடீர் விபத்தொன்றில் மரணித்ததைக் குறித்த செய்தியாகவும் இருக்கலாம். இரண்டு மாதம் கழித்து தெரியாத்தனமாக அந்த message’ஐ திறந்த பிறகு, வேண்டுமானால், busy’ஆக நாம் இல்லையென்றால், வேகவேகமாக ஒரு இரண்டு நிமிடம் நண்பனை நினைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வேறு காரியத்தைப் பார்க்கலாம்.

 

ஒரே கேள்வி தான்: நாம் நண்பர்கள் தானா? நட்பு என்பது நம் காலத்தில் என்னவாய் இருக்கிறது? நண்பன் ஒருவனைப் பார்ப்பதற்கு, பல ஆயிரம் மைல், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சென்று பார்த்து வந்தால், அவன் அதன்பிறகு பல முறை தமிழகம் வந்தும் எங்களைப் பார்ப்பதைக் குறித்து ஒருமுறைகூட பேசவில்லை. தோழி ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததைக் குறித்து பாராட்டுகள் தெரிவித்து செய்தி அனுப்பினால் மாதக்கணக்கில் எந்த பதிலும் இல்லை. விடுமுறை தினங்களில், புத்தாண்டைக் கொண்டாட நண்பர்கள் குழாமுடன் வெளியே சென்றிருந்தபோது, வேண்டுமென்றே குத்தும்படி ஒவ்வொருவருக்கும் இடையிலான நிதிநிலை வித்தியாசங்கள் குறிப்பிடப்பட்டது. நல்ல வேலை விளையாட்டும், கிரிக்கெட்டும் என் பால்ய காலத்தில் என் துணையாக இருந்தது. இல்லையென்றால் Close படத்தின் ரெமி சிறுவனின் கதி தான் எனக்கும் வாய்த்திருக்கும். முப்பதுகளை கடந்து, போலித்தனமையின் புகலிடமாய் விளங்கும் இத்தைகைய “நட்புகளை” எப்படி சமாளிப்பது? எப்படி இணங்கிப்போவது? இது ஒரு வழி. என் வழி. இவ்வாறாக எழுதுவதன் வழி எனக்கு கிடைக்கும் ஒரு திறப்பு, தெளிவு. இது போதுமானது. ஏன் எழுத்தாளர்கள் எல்லாம் சஞ்சலப் பேர்வழிகளாக இருக்கிறார்கள் என இன்று மீண்டும் புரிந்தது. சக மனிதர்களாலான இன்னல்களே அவர்கள் எழுத்தின் மூலக்காரணி எனும் போது, அதை எழுதி தீர்த்துவிடத்தான் முடியுமா! ஆனால் இப்போது எழுதிய இந்தக் குறிப்பு எனக்கானது. யாரையும் படிக்கச் சொல்லி நான் வலியுருத்தப்போவதில்லை. இதுவரை அப்படி படித்து, தங்களது விரிவான கருத்துகளால் விவாதத்தை செறிவாக்கியவர்கள் யாருமிலர். எனவே எனக்கு எதிர்ப்பார்ப்பும் இனி இல்லை. அன்புக்கான நிபந்தனை ஏதுமின்றி வாழ முயல்வேன். என் இப்போதைய கவலை எல்லாம் இப்படி எழுத்தின் வழியாக கூட தங்களின் மனக்கவலைகளை வெளிப்படுத்த, உற்றுநோக்க, தெளிவுபெற முயற்சிக்க முடியாதவர்களை எண்ணித்தான்.