6/7/14

டாலரை தவிர்க்கும் முயற்சிகள்! -பிரபாத் பட்நாயக் (05/07/2014ல் தீக்கதிரில் வெளியான கட்டுரை)




வளர்ச்சியடைந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தேவைப்படும் போதெல்லாம், பாசிச சக்திகளைப் பயன்படுத்துவது உண்டு. இன்று அதனை உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகச் செய்திருக்கின்றன. அத்தகைய சதிகளை எதிர்த்து ரஷ்யா நடவடிக்கையில் இறங்கிய போது, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதற்கு பதிலடியாக, ரஷ்ய அதிபர் புடின், உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். டாலர் என்ற ரிசர்வ் நாணயம் (உலகப் பொது நாணயம்) இல்லாமலேயே நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து கொள்வதே அவரது திட்டம்.
எந்தெந்த நாடுகளெல்லாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகி உள்ளனவோ, அல்லது அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்கின்றனவோ, அவற்றோடு அத்தகைய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. அத்தகைய ஒப்பந்தங்களில் பணப்பட்டுவாடா அமெரிக்க டாலரிலும் இருக்காது, ஐரோப்பிய யூரோவிலும் இருக்காது. மாறாக, இரு தரப்பு ஒப்பந்த நாடுகளின் நாணயங்களிலேயே இருக்கும். சீனா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளையுமே அதிபர் புடின் இதில் அதிகம்நம்புகிறார். அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு 400 பில்லியன் டாலர் அளவிலான எரிவாயுவினை சீனாவிற்கு சப்ளைசெய்வதென ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த மே மாதம் 21ம் நாள் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம், பணப்பரிவர்த்தனை டாலரில் இல்லை என்பதுதான்.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் புதிதல்ல!
‘இந்தியாவிற்கு இது போன்ற ஒப்பந்தங்கள் புதியவை அல்ல. பல ஆண்டு களாக முந்தைய சோவியத் யூனியனுடனும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளுடனும் இந்தியா செய்து கொண்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் இது போன்றவையே. ஒரு குறிப்பிட்ட செலாவணி மதிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையில் இந்தியா செய்து கொண்ட அத்தகைய ஒப்பந்தங்களில், பணப் பரிவர்த்தனையில் டாலரின் பங்கு எதுவுமில்லை. தற்போது புடின் சோவியத் யூனியன் காலத்திய அதேசெயல் முறையைத்தான் கையிலெடுத்துள்ளார்.

இதனால் லாபம் என்ன?
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், 30 டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு கொண்ட ‘ஏ’ என்ற ஒரு நாடு ‘பி’ என்ற மற்றொரு நாட்டிற்கு 100 டாலர் மதிப்பிற்கான பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது, அந்த ‘ஏ’ நாடு தனதுகையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணியான 30 டாலர், அத்துடன் தான் ஏற்றுமதி செய்த பண்டமதிப்பான 100 டாலர் என இரண்டையும் சேர்த்து, 130 டாலர் அளவிற்குத்தான் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். அதே நேரம் அவரவருடைய சொந்த நாணயங்களில் இந்த ஒப்பந்தம் நடைபெறும் என்றால், கூடுதலாக பண்டங்களை ‘ஏ’ நாட்டால் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். ஒரு வேளை அவை இரண்டும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி பொருளாதாரத் தடைகளின் காரணமாக டாலர் என்ற ரிசர்வ் நாணயத்தை பெற முடியாத நாடுகளாக இருந்தால், இது மாதிரியான இருதரப்பு ஒப்பந்தங்கள், அவர்களுடைய வர்த்தகத்தை கணிசமாக உயர்த்த உதவும்.

அரிதாகும் அந்நியச் செலாவணி!
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் காரணமாகவும் சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைக்காமல் போகலாம். அது தவிர, பொருளாதார மந்தம் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கிராக்கி குறையும் போது, அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைகின்றன. இதனாலும், சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைப்பது அரிதாகி விடக் கூடும். அந்தப் பிரச்சனையை இந்த ரஷ்ய பாணி இரு தரப்பு ஒப்பந்தங்கள் தீர்த்து வைக்கின்றன. இதில் ஈடுபடும் நாடுகள் பரஸ்பரம் மற்றவர்களின் நாணயங்களை ரிசர்வ் நாணயம் போன்றே ஏற்றுக் கொள்வதால், நடைமுறையில் இவர்களது அந்நியச் செலாவணி கையிருப்பும், வர்த்தகமும் விரிவடைகின்றன.

டாலரைத் தவிர்த்தல்!
இன்றைய உலகில் டாலரே ரிசர்வ் நாணயமாக இருக்கும் சூழலில் அதைவிடுத்து பிற நாட்டு நாண யங்களையும் ரிசர்வ் நாணயங்களாக ஏற்றுக் கொள்ளும் இந்த முறையினை ரஷ்யர்கள் பரிவர்த்தனையில் “டாலரைத் தவிர்த்தல்” (De-dollarisation) என்று அழைக்கின்றனர். இதனை ஊக்கப் படுத்துவதற்காக, ரஷ்யக் கம்பெனிகள் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு வர்த்தகத்தை ரஷ்ய நாணயமான ரூபிளிலேயே செய்ய வேண்டும் என்று, அண்மையில் ரஷ்யா சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

நீண்ட கால விளைவுகள்!
உலக ரிசர்வ் நாணயமான டாலர் அமெரிக்காவின் உள்நாட்டு நாணய மாகவும் இருப்பதால், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அதை எளிதில் அச்சிட்டுக் கொள்ள முடிகிறது. தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எவ்வளவு பெரிதானலும், டாலரை அச்சிட்டு அதனை ஈடு செய்து கொள்ள முடிகிறது. பின்னர் இப்படி அச்சடித்த டாலர்களை வைத்து அரசின் கருவூலப் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்கி, அதன் மூலம் பணத்தை பொருளாதாரத்திற்குள் புழக்கத்தில் விடுகிறது. பிற நாடுகள் அமெரிக்க டாலர் களைத் தவிர, வட்டி தரக் கூடிய டாலர் சொத்துக்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அந்தச் சொத்துக்களை அவர்களுக்கு விற்று, தான் அச்சடித்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஃபெடரல் ரிசர்வைப் பொறுத்த அளவில், இந்த இரண்டுமே ஒன்றுதான். பிற நாடுகள் விரும்புவது டாலர் என்றாலும், வட்டி தரும் வேறு நிதிச் சொத்து என்றாலும் அமெரிக்க நடப்புக் கணக்கிற்கு அதனால், எந்தப் பாதகமும் ஏற்படுவது இல்லை.

இரண்டு சூழல்களிலுமே
ஒரு வேளை நாம் ஏற்கனவே சொன்னபடி சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனைகளில் டாலர் தவிர்க்கப்படும் என்றால், அமெரிக்கா இப்படி டாலரை அச்சடித்து தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எளிதாகச் சரி செய்து கொள்ள முடியாது. டாலருக்கான கிராக்கி அவ்வாறு குறையும் போது, தேவைக்கு அதிகமாக டாலர் அச்சடிக்கப்பட்டால் டாலரின் மதிப்புமோசமாக வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அத்தகைய சூழலில் சொத்துடைமையளர்கள் தங்களுடைய சொத்துக்களை, தங்கம், வெள்ளி போன்ற பண்டங்களிலோ, பிற வடிவங்களிலோ மாற்றிக் கொள்ளவே விரும்புவார்கள்.
அதனை நோக்கியே செயல்படுவார்கள். அப்படி செய்யும்போது 1970களின் துவக்கத்தில் ஏற்பட்டது போன்று, பணவீக்கம் அதிகரித்து விடும். வேறு வழியில்லாமல் அமெரிக்கா தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைத்துக் கொண்டால், தனது மக்களின் நுகர்விற்காக அமெரிக்கா இன்று இறக்குமதி செய்யும் பண்டங்களின் அளவுகுறையும். அந்த அளவிற்கு அமெரிக்க மக்களின் வாழ்க்கைகத் தரமும் வீழ்ச்சியடையும். இராணுவச் செலவுகளையும் சுருக்க வேண்டிய தேவையின் காரணமாக, அமெரிக்காவின் இராணுவ பலமும் குறையும்.
அத்தகைய நிலை ஏகாதிபத்தியத்தின் தலைவனான அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இரண்டு சூழல்களிலும் நெருக்கடி கடுமையாகி, அதனால் முதலாளித்துவ உலகமும், அமெரிக்க மேலாதிக்கமும் ஆட்டம் காண நேரிடும். டாலர் ரிசர்வ் ஏற்பாட்டிலிருந்து எந்த நாடேனும் விலகி, வேறு நாணயங்களுக்குச் சென்றால், அமெரிக்கா அதை கடுமையாக எதிர்கொள்ளும் என்பது அறிந்ததே. இராக் தனது எண்ணெய் வர்த்தகப் பரிவர்த்தனையை டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றத் திட்டமிட்டதுதான் இராக் ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான காரணம் என்று இன்றைக்கும் ஒரு சந்தேகம் உள்ளது.

சீனாவின் தேவை!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவிற்கும், ஈரானுக்கும் டாலரைத் தவிர்க்கும் இயல்பான தேவை உள்ளது. சீனாவிற்கு அத்தகைய தேவை வேறு வகையில் உள்ளது. ஆனால், அதில் சிக்கலும் உள்ளது. பெருமளவிலான தனது நடப்புக் கணக்கு உபரியின் காரணமாக, சீனா ஆகப்பெருமளவில் டாலரையும், டாலர் மதிப்பிலான சொத்துகளையும் குவித்து வைத்திருக்கிறது. அனைத்தையும் டாலர் மதிப்பிலேயே வைத்துக் கொள்ளும் அபாயத் தினை மனதில் கொண்டு, மெள்ள மெள்ள அதை தங்கமாகவும், யூரோவாகவும் மாற்றிக் கொண்டு வருகிறது. அண்மைக் காலங்களில் யூரோவின் மதிப்பு சற்றுவலுப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தங்க இறக்குமதியில் இந்தியாவைப் போல தனியார் என்று இல்லாமல், சீன அரசாங்கமே அதைச் செய்கிறது.

சீனாவின் சங்கடம்!
டாலரைத் தவிர்க்கும் நடவடிக்கை, டாலரின் மதிப்பை வீழ்த்தி விடும். டாலர் மதிப்பில் சொத்துக்களைக் குவித்திருக்கும் சீனாவிற்கு இதனால், மூலதனஇழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. மரத்தில் தான் அமர்ந்திருக்கும் கிளையினையே வெட்டிய மகாகவி காளி தாசனின் கதையாக அது ஆகிவிடும். எனவே தான் சீனா சத்தமில்லாமல் இரகசியமாக, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாமல் டாலரிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறுகிறது. இந்தப்புரிதலுடன் தான், ரஷ்ய - சீன ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் நிலை!
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்ந்து அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்வதாகவே உள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறுவதற்கு நிர்ப்பந்தம் ஏற்படும் போது, இது தற்காலிக நடவடிக்கை தான் என்று கூறி, அமெரிக்காவின் அனுமதியைப் பெற்ற பின்னரே, இந்தியா அதைச் செய்கிறது. ஒருவேளை தடைகளை உடைத்து ஈரானுடன் வர்த்தகம் செய்வது என்று இந்தியா முடிவு செய்தால், தடை மீறிய வர்த்தகத்திற்கு காப்புறுதி வழங்க நம் நாட்டின் பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குக் கூட அதற்கான பலம் இல்லை.
ஏனெனில், அவையெல்லாம் இன்றைக்கு, மேற்கத்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள் தரும் மறு காப்பீட்டினை நம்பி நிற்க வேண்டிய நிலையில் உள்ளன. தடை மீறிய வர்த்தகம் என்று தெரிந்தால் மேற்கத்திய கம்பெனிகளிடமிருந்து அதற்கான மறு காப்பீடு கிடைக்காது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அதற்குத் தீர்வு காண முடியும். அப்போது தான் குறைந்தபட்ச தன்னதிகாரத்தினை காப்பாற்றிக் கொள்ள இயலும். மேற்கத்திய கம்பெனிகளை நாடி மறுகாப்பீடு செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனில், பொதுத் துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளின் வலிமையினை அதிகரிக்கும் வகையில், கணிசமான அரசு முதலீடு தேவைப் படுகிறது. ஆனால், அதையெல்லாம் செய்வதற்கு, அதாவது, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு அடிபணியும் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வதற்கு இந்தியா தயாரில்லை.

சோவியத் யூனியனும்
ரஷ்யாவும் ஒன்றல்ல!
ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு நாம் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. ரஷ்யச் செல்வந்தர்கள் மேற்கத்திய வங்கிகளில் அநேகமாக டாலர் வடிவிலேயே சொத்துக்களை வைத்திருக்கின்றனர். டாலரைத் தவிர்க்கும் முயற்சியினை ரஷ்யக் கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய வர்க்க எதிர்ப்பினை புடின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்க எதிர்ப்பு கொண்டதாக இருந்தாலும், புடினின் ரஷ்யாவும் சோவியத் யூனியனும் ஒன்றல்ல. நாளைக்கே புடின், மேற்கத்திய நாடுகளிடம் சரணடைந்து, டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

தமிழில் : ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி.