12/4/16

சமகால அரசியல் - தமிழக தேர்தல் - அதன் போக்கு- நீட்சி

(2016-2017'ஆம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முதல்கட்டத்தில் தேர்வான எனது கட்டுரை. அடுத்த கட்ட எழுத்து தேர்வு 17.04.16. தலைப்பு: தமிழக அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தலில் நிகழும் மாற்றங்கள், கருத்தியல் சார்ந்த பார்வையை முன்வைத்தல்)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அரசியல் பங்கேற்பின்மையால் ஏற்படும் மிகப்பெரிய மோசமான விளைவு என்னவென்றால் கீழ்மையாளர்களால் நாம் ஆளப்படுவது தான் – பிளேட்டோ




"அரசியல் எதுக்குப்பா நமக்கு" என்னும் கேள்வி தான் நம்மையும் சூழந்து கொண்டு இருந்தது சில ஆண்டுகள் முன்புவரை. ஆனால் நிலைமை இன்று வேறு. ஆம், போன தலைமுறைகளின் டீக்கடை பெஞ்சு'களை விஞ்சிவிட்டது இன்றைய சமூக வலைதள அரசியல் பேச்சுகள். கழுத்தை சுற்றும் பாம்புகள் போல தலைவர்களை "மீம்ஸ்"கள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.




அதிகாரத்தின் மமதை


“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை", தனது தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியின் களிப்பில் வெளியானவை. ஆனால் ஓராண்டுக்குள் சென்னை பேரிடரின் போதான அவரது அரசின் கையாளாகத் தனம், இந்த மிதப்பை முற்றிலும் புரட்டிப் போடும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் பேரிடரால் நிகழ்ந்த இழப்புக்கு நிகரானது அரச நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டும் அவலம் வேறு. எளிய மக்கள் மனதில் பதிந்த இந்த கசப்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது.




"இலவசங்களின்" அரசியல்



2006'ம் ஆண்டு சட்டசபை தேர்தல். கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் மூழ்கி இருந்தன. அப்போது பிரதான எதிர்கட்சி தலைவரான கருணாநிதி தன்னுடைய தேர்தல் அறிக்கையுடன் வந்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: இலவச நிலம், இலவச வீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச கணினி. ஜெயலலிதா முதல் பெரும்பாலான கட்சிகள் வரை, கருணாநிதி அரசியலை கேலிக்கூத்தாக்குகிறார் என சாடின. தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2011'ம் ஆண்டு தேர்தல். இப்போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்: விலையில்லா மிக்சி, விலையில்லா மின்விசிறி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வீடு. பெருவெற்றி பெற்றது அதிமுக. இடைப்பட்ட இந்த இரண்டு ஆட்சியிலும் நடந்திருக்கும் மாற்றம் என்பது "இலவசம்" என்பதிலிருந்து "விலையில்லா" என்னும் வார்த்தை வேறுபாடு அளவிலான மாற்றம் மட்டுமே. அடிப்படை தேவைகள், உரிமைகளை வழங்க மற்றும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதாண்டி ஆடம்பரங்களை இலவசமாக ஏற்றுக்கொள்ள மக்கள் இப்போது தயாரில்லை. நிலையான வேலையும் நிரந்தரமான வருமானமுமே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




கருத்துக்களே தலைமை


2014'ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தொடங்கிய சமயம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முதல் பரப்புரையில் சொன்னார்: "இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி". அன்று அவர் கோடிட்டு காட்டிய அந்த கருத்தியல் மோதல் இன்று அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த வருடம் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை "மதச்சார்பின்மையாக" இருக்குமென்றால், இந்த ஆண்டு அது "கருத்து சுதந்திரமாக" இருக்கும். இந்தப் போக்கு எதேச்சையானது அல்ல. நேற்றைய பெருமாள் முருகனிலிருந்து இன்றைய கண்ணையா குமார் வரையான நிகழ்வுகளின் மூலம் அரசின் அதிகாரம் எவ்வளவு மூர்க்கமானது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்து வருகின்றனர் ஆட்சியாளர்கள். இனி "வளர்ச்சி" கோஷங்கள் புளித்துவிட்ட நிலையில், மதச்சார்பின்மை பற்றிய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும். அனைவருக்கும் 15 லட்சம் என்பதை தாண்டி, உணவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்னும் கருத்து வலுப்பெறும். புல்லட் ரயில் என்றைக்கோ வரட்டும், இன்றைக்கு நான் சாப்பிடும் உணவு நாளை நான் கொல்லப்பட காரணமாக இருக்கக்கூடாது தானே?




நிகழும் மாற்றம்


அறிவியல் ரீதியாக எந்த ஒரு கருத்தும் ஒரே வடிவத்திலேயே நெடுநாள் உயிர்ப்போடு இருக்க முடியாது. 40"க்களில் சுதந்திரமும், 60"களில் சமத்துவச் சிந்தனையும், 70'களின் பிற்பகுதியில் ஜனநாயகம் நசுக்கப்பட்ட போது அதற்கு எதிரான கருத்தும், 80களில் சமூகநீதி அரசியலும் என அது தொடர்ந்தது. பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டிய அந்த அரசியல் சூழல் மத துவேஷ சக்திகளால் பின்னாட்களில் சிதறடிக்கப்பட்டது. அதேபோலவே ஒரு துருவ அரசியலும் இனி மாறப்போகும் சூழல் வலுத்து வருகிறது. ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி என்றல்லாமல், எந்த கொள்கைக்கு எது மாற்று கொள்கை என்னும் கேள்வி எழும் நிலை வெகுதொலைவில் இல்லை. அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த அரசியலும் தமிழ்நாட்டில் வீரியம் பெற்று வருகிறது. திராவிட அரசியல், அதன் வழி வந்த கட்சிகளால் நீர்த்துப்போனதே இதற்கு காரணம். வாச்சாந்தி வழக்கிலிருந்து பரமக்குடி துப்பாக்கி சூடு வரை பொறுத்திருந்து பார்த்து அடைந்த ஏமாற்றத்திற்கு பிறகே தங்களுக்கான அரசியல் பாதையை தலித் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இன்று தமிழ்நாட்டில் ஒரு தலித், முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்னும் கருத்து வலுப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.


மக்களே இறுதி எஜமானர்கள்


இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல். அதில் பெரும் பேசுபொருளாக இருக்கப்போவது ஊழலும், மதுப்பிரச்சனையும். ஊழலை பொறுத்தவரை இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்னவென்றால், அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை என்பதை தாண்டி ஊழல் அரசில்வாதிகள் அதை நியாயப்படுத்தும் போக்கு தான். இரண்டாவது மது விலக்கு. இன்று இது குறித்து திமுகவும், அதிமுகவும் பேசுவதற்கு கூட தார்மீகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த தேர்தல் அசாதாரணமான ஒன்று. ஆட்சியிலிருக்கும் கட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி. ஆனால் அந்த அதிருப்தியை பாரம்பரிய எதிர்க் கட்சியான திமுகவால் பயன்படுத்தவோ ஒருங்கிணைக்கவோ முடியவில்லை. கிட்டதட்ட ஆறுமுனைப் போட்டி. உடனடி அரசியல் லாபத்தையும் கணக்கெடுக்காது எது மற்ற அரசியல் கட்சிகளை இந்த இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து விலக்கி வைக்கிறது. கணக்கு 2016'ஐ பற்றியல்ல, 2021 பற்றி. மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது ஒரு நீண்ட காலப் பயணம். இதற்கான முயற்சியில் எண்ணிக்கை பலத்தில் இன்று சரிவு ஏற்பட்டாலும், நாளை நம்பிக்கை மிக்க மாற்றாக வளர முடியும் என்னும் ஒரே நோக்கம்தான் இதில் அடங்கி இருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளில் இருந்து கிரானைட் ஊழல் வரை மக்கள் பார்த்து சலித்தாகி விட்டது. இவர்கள் சுற்று முடிந்தது, இனி அவர்களுக்கு தரலாம் என்னும் நிலையை இனிமேலும் மக்கள் எடுக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் முதல்முறை முழுமையான லகான் மக்கள் கைகளில். மார்க்ஸின் கூற்றுப்படி, வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறது. முதல்முறை துன்பியலாகவும். இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும். இனிமேலும் அரசியலை கேலிக்கூத்தாக்க தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.




– கபிலன் இல.

(clkabilan@gmail.com).