18/8/16

சென்னை ஐஐடியில் மீண்டும் சாதி ஆதிக்கம்.




"உன்னயெல்லாம் வெட்டி பன்றிக்கு தான் போட வேண்டும்" 


"கீழ்த்தரமான உன்னை பார்க்கும்போது உன் தாயும் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள் என்றே தோன்றுகிறது"




இவைவெயல்லாம் எங்கோ இரு 'சமூக குழுக்களுக்கு' இடையே நடந்த சண்டையின் போது வெளிப்பட்டதல்ல. இந்தியாவின் Premier தலைசிறந்த கல்வி நிறுவனம் எனப் புகழப்படும் ஐஐடி'யில் (இந்திய தொழில்நுட்ப கழகம்) படிக்கும் மாணவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. ஆம் சாதிரீதியான வன்மம், கொலை மிரட்டல்கள் நேற்றிலிருந்து மாணவர் ஒருவருக்கு முகநூல் வழி இப்போதும் வந்த வண்ணம் உள்ளன. 


யார் அந்த மாணவர் ? அவர் செய்த தவறு என்ன? 


அந்த மாணவர் பெயர் அபினவ் சூர்யா. இத்தகைய சாதிரிதியான வெறுப்பு தாக்குதலுக்கு ஆளாக காரணம், ஒரு தலித் இயக்குநரை தனது முகப்புபடமாக சமூக வலைதளத்தில் வைத்தது. 
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை இதுதான். 




சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த சூர்யா இப்போது இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று சென்னை எக்மோரில் கபாலி திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்கள் சூழ பா.ரஞ்சித் உடன் செல்பி (தன்படம்) எடுத்துள்ளார். அந்த படத்தை அன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளார். அவ்வளவுதான்.







காலையில் எழுந்தவுடன் முழுக்க வெறுப்பு விஷம் தோய்ந்த மெஸேஜ்களால் தன் முகநூலில் நிரம்பி வழிவதை பார்த்துள்ளார். அத்தனையும் வன்மம். கொலை மிரட்டல்கள், வெறுப்பு. சாதியம். 
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தலைசிறந்த கல்லி நிலையத்தின் மாணவர்கள். நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்கள் (?). 


             யார் அபிநவ் சூர்யா ?


                     


இந்த சாதிய வன்ம தாக்குதலை எதிர்கொள்வதற்கு முன்பே ஊடக அறிமுகம் சூர்யாவிற்கு கிடைத்திருந்தது. அதுவும் மிகச் சமீபத்தில் - ஆகஸ்ட் 12. பெரிய கவனம் பெறாத அந்த சம்பவம் அபினவ் தனது கல்லூரி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தால் வாய்த்தது.

http://www.newindianexpress.com/cities/chennai/Trump-at-IIT-Madras-G-D-Bakshi%E2%80%99s-jingoistic-speech-prompts-open-letter-by-student/2016/08/12/article3576247.ece



சுதந்திர தினத்தை நினைவுகிறுகிற வகையில் ஆண்டுதோறும் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி ஆகஸ்ட் 11ம் தேதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜி.டி.பாக்ஸி அழைக்கப் பட்டிருக்கிறார். அரசு ஆதரவு கருத்துகளால் 'தேசியவாதம்' குறித்தும் தனது அதீத உணர்ச்சிமய பேச்சினால் ஊடகங்களில் ஏற்கனவே பல முறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியும் உள்ள பாக்ஸி சென்னை ஐஐடியிலும் சர்ச்சைகளுக்கு குறைவின்றி பேசியுள்ளார். இதனால் வேதனை அடைந்த மாணவர் அபினவ் சூர்யா கல்லூரி இயக்குநருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். அந்த கடிதம் அடுத்த நாளே சில ஊடகங்களில் வெளியாகவே, சூர்யா கவனம் பெற்றார். (முழுக் கடிதம் சுட்டியில்)



அப்படி என்ன தான் பாக்ஸி பேசினார். 





பேச்சின் ஒரு சில சாரம்சங்களாக அபினவ் குறிப்பிடுவது :


“பாகிஸ்தானுடன் சண்டையிடுங்கள், அது நம் நாட்டை உறுதியாக்கும்".

“எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம், உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்” 

மேலும் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ரானுவத்தால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றதோடல்லாமல் "அகிம்சை முட்டாள்தனமானது" என்றும் ஜெனரல் பாக்ஸி பேசியுள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் சூர்யா.

பாக்ஸின் இந்த பேச்சுக்கு பிறகு, அவரை "சென்னை ஐஐடியில் டிரம்ப்" என்றே ஊடகங்கள் அழைத்தன. அந்த அளவிற்கு சிறுபான்மை, விளிம்புநிலை மக்கள் மீது தனது பேச்சில் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.



               கடந்து வந்த பாதை


இதே சென்னை ஐஐடி'யில் தான் கடந்த வருடம் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக கிளர்ந்தெழுந்த போது, கல்லூரி நிர்வாகத்தால் தடை பின்வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் சாதி ஒடுக்குமுறை என்னும் விஷச் சுழலுக்கு ரோஹித் வெமுலா என்னும் தலித் பி.எச்.டி மாணவன் இரையாக்கப்பட்டார். சாதி இந்திய ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் நோய்க் கூறு. இதுவரையான காலக் கட்டங்களில் இந்திய கிராமங்களை பீடித்து இருந்த நோயான சாதி பாகுபாடு. சமீப வருடங்களில் பல்கலை கழகங்களை அதிகளவில் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஓர் கோர விளைவுதான் ரோஹித் வெமுலா, APSC விவகாரம்.

சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாறி வருகிறோம். அதனால் தான், இனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஓர் பிரபலமாய் இருந்த போதும், அவர் தலித் என்பதாலயே ஆதிக்க உணர்வு கொண்ட மாணவர்களுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வருகிறது. உண்மையில் ஐஐடிகள் உயர்கல்வி நிறுவனங்களா? அல்லது சாதி கூடாரமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. அடிப்படையில் அந்த மாணவர்கள் ஆகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும் இட ஒதுக்கீடு தான் அவர்கள் பிரச்சனையே. மண்டல் குழு அறிக்கை சமர்பித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது இந்த அவல நிலை. உயர்கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிகழ்வுகள், உரிமைக்களுக்கான பேராட்டங்கள் இனி எங்கு உரத்து ஒலிக்க வேண்டும் என நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன. 
ஒவ்வொரு காலத்திலும் ஒரு அரசியல் முழக்கம் வலுப்பெறும். 
இது "ஜெய் பீம்"கான காலகட்டம்.




***

நான் எழுதிய இதே கட்டுரை விகடனில் இன்னொரு விதமாய் வெளியாகி இருந்தது.