22/9/14

பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும், போர்னோ கிராஃபி குறித்த ஒரு பார்வை - காலச்சுவடு (உரிமை)

காலச்சுவடு வலைப்பக்கத்தில் வெளியான, பாலியல் சமத்துவமின்மை குறித்த, போர்னோ கிராஃபி ஏற்படுத்தியுள்ள பாலுறவு குறித்த இந்தியர்களின் பார்வையின் மாற்றத்தை, இறுக்கமான சமூக-குடும்ப சூழலால் பாலுறவு உடனான இயல்பான பிணைப்பை, அழகாக வெளிப்படுத்தும் ஒரு பதிவு. எழுதிய தேவிபாரதிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!


http://kalachuvadu.com/issue-158/page33.asp

4/9/14

தன்னறிதல்



பொழுதுகள் புலர்ந்தன

மெல்ல நகர்ந்தன நாட்கள்

கனவுகளைத் தொலைத்து

இலக்கற்று, கையறுநிலையில்

கழியும் நாட்களில்

கசியும் கண்ணீரோடு

அணுநிமிடமும் அரூபமாய்

வாழ்வை நோக்கிய ஏக்கமுமாய்

எழுந்திருக்க நினைக்கும்

எண்ணத்தோடு

சலனமற்று கிடக்கிறது

வீழ்ந்தவனின் மனது
 

தாய் நாவல் #மக்சீம் கார்க்கி - என் பார்வை



                                                             

                                                                 







உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மக்ஸிம் கார்க்கியின் மகத்தான படைப்பு தாய் நாவல் என்றால் அது மிகையாகாது.

உலக இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை நாம் வரிசைப் படுத்துவோமானால், அதில் கார்க்கியின் 'தாய்' கட்டாயம் இடம் பெறும்.

நேற்றிலிருந்தே இந்நாவல் குறித்து ஒரு சிறு பதிவையேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் சற்றும் குறையாது அதிகரித்தபடியே சென்றதன் விளைவே இப்பதிவு.


















------நாவலின் வரலாறு------




1904 ஆம் வருடம் கார்க்கியின் எண்ணத்தில் ‘தாய்’ உருப்பெற்றது. அவருடைய வாழ்க்கைத் துணைவியாகிய ஏகடரினா பவ்லோவ்னா வோல்ழினா, நல்ல இலக்கியவாதி.

"சமரஸ்கயா கெசட்டா" என்னும் இதழின் அச்சுப்பிழை திருத்துபவராகத் திருமணத்திற்கு முன் பணிசெய்தவர். கருத்தில் உருப்பெற்ற “தாய்’ புதினத்தை குடும்பத்தினருக்கு விளக்கிச் சொன்னார்.

1906 ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் "ஆப்பிள்டன்" இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும், 1907 ஆம் ஆண்டு தாய் நாவல் முழுதும் வெளிவந்தன. கார்க்கியின் “தாய்” முதலில் வெளிவந்தது அமெரிக்காவில் தான். ரஷ்ய முற்போக்காளர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.


-----------எனது பார்வை-----------


பெலகேயா நீலவ்னா, பாவல் விலாசவ் எனும் தாய்-மகனுக்கு இடையேயான அன்பின் அற்புதப் பிணைப்பின் உணர்வுபூர்வ உள்ளடக்கமே இந்நாவல்.

ஒரு தாயின் பாச உணர்வு, தன் மகன் மீதான அளப்பரிய அன்பால், கொள்கையின் மேல் ஏற்பட்ட பிடிப்பால், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது ஒரு ஈடுபாடு உருவாகி, அதை உழைக்கும் மக்களிடத்திலும் பாகுபாடு நிறைந்த சமூகத்திலும் தழைத்தோங்க, வீரியம் பெற, தாமே விதையாக வீழ்வதை தேர்ந்த இலக்கிய நடையுடன் விவரிக்கும் படைப்பே இந்த அற்புத காவியம்.


-----------தோழர்களுக்கு----------


நண்பர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த கலைப்படைப்பு. குறிப்பாக கம்யூனிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர்கள் அனைவரும் வாசிக்க, அள்ளி அள்ளிப் பருக வேண்டிய ஒரு அருமையானப் புத்தகம்.


------புத்தகம் குறித்து தோழர் லெனின்----


‘இதுவரை, புறத்தூண்டுதலின்றி உள்ளுணர்வு உந்தப் புரட்சிப் போராட்டத்தில் தாமாகவே தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுது தமக்குப் பயன்படும்படி “தாய்” படிக்கலாம்’.


------------ புத்தக வெளியீட்டு விபரம்-----------

மக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல்.

ஆசிரியர்: மக்ஸிம் கார்க்கி.

தமிழாக்கம்: தொ.மு.சி.ரகுநாதன்

பதிப்பகத்தார்: என்.சி.பி.எச்(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

முதல் பதிப்பு: மே, 2003

நான்காம் பதிப்பு : அக்டோபர், 2013. விலை: ₹350



அன்னா கரினினா- என் பார்வை




அன்னா கரீனினா - வாழ்வில் மறக்க முடியா ஓர் அற்புதப் படைப்பு. கடந்த பதினைந்து நாட்களாக தொடர் வாசிப்பில், ஆழ்ந்த ஈடுபாட்டோடு, என்னை நான் இந்த இலக்கிய கடலில் மூழ்கடித்துக்கொண்டேன். அதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்றேன்.

ஆசிரியர் லியோ தால்ஸ்டாய் பெருநாவல்களில், நான் வாசித்த இரண்டாவது நாவல் இது!
ஆனால் உண்மையில் அன்னாகரீனினா எனக்குள் ஏற்படுத்திய ஒரு பாதிப்பைப் போல #போரும்அமைதி இல் நான் உணரவில்லை. போரும் அமைதியையும் பொருத்தவரை அதன் கதை களம், சூழல், கதாபாத்திரங்களின் உணர்வு தன்மை, மிக நுட்பமாக உணர, நாவலினுள் ஊடுருவி, மையக் கருவை தொட்டு நுகர அதிகப்படியான மறுவாசிப்பு தேவை. ஆனால் அன்னா கரீனினா அவ்வாறு அல்லாது முதல் வாசிப்புலேயே மனதை முழுவதும் கவரக் கூடியது. இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பு தேவை, ருஷ்ய படைப்புகள் என்றாலே இலக்கிய சுவையும், நயமும் ததும்ப இருக்கும். அத்தகைய ஒரு அதீத இலக்கிய சுவை நிரம்பிய நாவலே அன்னா கரீனினா.

ஒரு பெண்ணின் பல பரிமாணத்தை, வாழ்க்கை வெளியில் அவளை தன்னிச்சையாக எடைபோடும் ஒரு ஏதேச்சதிகார சமூகத்தை, உளவியல் ரீதியாக அன்னா அனுபவிக்க நேரும் துன்பங்களை, தன்னுடைய ஆதிக்க அதிகார நற்பெயருக்கு பங்கம் வராதவரை யார் புண்பட்டாலும் சரி என கவலையற்றவனாய் அன்னாவின் கணவன் கரீன், நாவலை படைத்த ஆசிரியர் டால்ஸ்டாய் தனது குணாதிசயங்களை மையமாக வைத்து கதையின் ஊடாக பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக லெவினை படைத்திருந்தது, குடும்பம், மதம், சமூகம் என பல கட்டமைப்புக்குள் இந்த உலகம் பெண்களுக்கு என பிரத்யேகமாக ஏற்படுத்தியிருக்கும் பல எல்லைகளையும், தடைகளையும், வேலிகளையும், அதனை உடைத்து எறிய முற்படும் ஒரு பெண்ணின் மனவலிமையும், இறுதியில் தார்மீக துணையென யாருமின்றி ஆற்றாமையால் வெடித்து பொங்கும் அன்னா தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வரை, என உலக இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாய் தனது தனித்துவமான நயமிக்க இலக்கியசுவையுடன் அழகாகவும் கவித்துவமாகவும் நாவலை வார்த்திருக்கிறார் என்றே சொல்லலாம்... சுமார் 150 வருடங்களுக்கு முன் வெளியான
இந்நாவலில் நிலவும் சமூக சூழலானது இன்றைய, நமது சமகால-சமூகத்திற்கும் அப்படியே பொருந்தக்கூடியவை என்பதிலிருந்தே உலகப் புகழ் பெற்ற இந்நாவலின் தனித்தன்மையை எளிதில் உணரமுடியும்..!








இப்படைப்பை வாசித்து முடித்ததில் இருந்தே, ஒரு எண்ணம் இருக்கமாய் நெஞ்சை நெருடியவாறே உள்ளது, ஆம், நாம், நம் சமூகம் இன்னும் கடக்க வேண்டிய தூரம், இன்னும் வெகு தொலைவில் உள்ளது...