28/12/17

சிம்மாசனங்கள் - சிறுகதை




யாருமற்ற வகுப்பறையில் காலியாக இருந்தது ஆசிரியரின் நாற்காலி. அமைதி அடர்த்தியாக பரவி இருந்த அன்றைய காலை அவனுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. “ஏன் இன்னும் ஒருத்தரையும் காணோம்”, தனக்கு தானே பேசிக்கொண்டு வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் இருந்து பள்ளியை சுற்றி அமைந்திருந்த தீப்பெட்டிக் கட்டுகளைப் போல சிதறிக் கிடந்த வீடுகளைப் பார்த்தான். புழுக்கம் நிறைந்த இறுக்கமான வீடுகள். “இன்னும் இவங்களுக்கு விடியலை போல” கடிகாரத்தை பார்த்து முனகிய அடுத்த நொடி, வளாக சுற்றுச்சுவரின் இடது புறத்தில் இருந்த மஞ்சள் நிற தகரக் கூரை வீட்டில் இருந்து கணவன் மனைவி இருவர் சத்தமாக சண்டை இட்டுக்கொண்டு வீதிக்கு வந்தனர். “என்னைக் கேக்காம செய்வியா...செய்வியா, ஏன் செஞ்ச சொல்லு?”, கணீர் கணீரென மனைவியை அறைந்து கொண்டிருந்தார் கணவர். வீறிட்டு அழுதவாறே கூச்சலிட்டதால் மனைவி என்ன சொல்கிறாள் என விக்னேஷிற்கு கேட்கவில்லை. சற்று தள்ளி சென்று உற்று நோக்கினான். “ரெண்டு பேரையும் எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே”, அவனது யோசனை அவனுக்கே தொந்தரவாக இருந்தது.



விக்னேஷிற்கு ஒரு தங்கை. பெயர் தேவி. வீட்டிற்கு அருகிலேயே உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஒவ்வொரு நாளும் அரக்கப் பறக்க இவன் கிளம்பிய பிறகே அம்மா தங்கையின் பக்கம் திரும்புவாள். ‘கிர்ர் கிர்’ எனும் குட்டி குறட்டை சத்தம் போன்ற அவளது மூச்சொலி , வயோதிக நகரப் பேருந்து கக்கிச் செல்லும் கரும்புகை போன்ற பொறாமையை அவனுள் பரவச் செய்யும். நான்கு வருடம் பிந்தி சென்று வாழவேண்டும் எனும் ஆசை துளிர்க்கும். ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டி அம்மாவிற்கு டாட்டா சொல்லும்போது, தேவியின் நிம்மதியான தூக்கத்தைப் பார்க்க அவ்வளவு ஆசையாய் இருக்கும். அம்மா நகர்ந்த சமயம், சடுதியில் அவளை எழுப்பிவிட்டு ஓடி வந்து விடுவான்.


தூக்கம், ஆகப் பெரும் சந்தோசம். அதைவிட இந்த உலகத்தில் பெரிய தேவை என்ன இருக்க முடியும்?. விக்னேஷைப் பொறுத்தவரை மனிதனின் மகிழ்ச்சிகரமான தருணம், ஏன் பொக்கிஷம் தூக்கம் தான். அவன் தன் நிஜ வாழ்வின் சுவாரசியத்தை மிஞ்சும் அதி அற்புதமான பல வாழ்கையை கனவுலகில் தான் வாழ்ந்து இருக்கிறான். பல விநோதங்களை கண்டடைந்தும் இருக்கிறான். பெண்கள் அனைவரும் சிகரெட் பிடிப்பது அப்படியான விநோதங்களில் ஒன்று. ஆனால் நேற்றைய இரவு கடுமையான ஒன்று. அவனால் தூங்கவே முடியவில்லை. நடுயிரவிற்கு பிறகு அத்தனை சத்தம். திடீரென அப்பாவும் அம்மாவும் எதுக்கு இப்படி சண்டை போட்டு கொள்கிறார்கள், என சோம்பியவாரே எழுந்தான். கூச்சல் அதிகமாக அதிகமாக இவனுள் பயம் திரண்டது. “போலாமா வேணாமா”, என யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தங்கையை பார்த்தான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.




மணி ஆறு ஆகி இருந்தது. “இத்தன புஸ்தகங்களை எதுக்குப்பா தூக்கிட்டு போற, நாங்கெல்லாம் படிக்கறப்போ ஒரு நோட், ரெண்டு நோட்டு தான் எடுத்துட்டு போவோம். இவ்ளோ சுமைய தூக்கிட்டு போனா எப்டி படிக்க தோணும்”, பஸ் ஸ்டாப்பில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் இவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட்டது. ஏறி உட்கார்ந்ததும் திரும்பி பார்த்தான், இவனோடு சேர்த்து மூன்று பேர் தான் இருந்தார்கள். முதல் பேருந்து என்பதால் சற்று நேரம் நின்றது. வழக்கமாக ஆறே முக்காலுக்கு தான் ஏறுவான், எட்டு மணிக்கு பள்ளி சென்று சேர சரியாக இருக்கும். அன்று பத்தாம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் இருந்தால் மாணவர்கள் வருவார்கள் என நம்பிக்கை கொண்டான்.



விக்னேஷ் தன் வீட்டில் இருந்து இரு பேருந்துகள் மாறி தான் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறான். அடுத்த ஆண்டு பொது பரீட்சை என்பாதால் பள்ளியை மாற்றுவதில் அவனது பெற்றோருக்கும்ஆசிரியர்களுக்கும் உவப்பு இல்லை. பேருந்து நெரிசலில் தப்பி பிழைத்து மாலை வீடு திரும்பிய நொடியில் இருந்தே புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்துவிடுவான். கால் வலிக்கிது, சோர்வாக இருக்கிறது, பஸ்ஸில் சென்று வர சிரமமாக இருக்கிறது. அவனது புகார்கள் எதுவும் கண்டுகொள்ள படவில்லை. அனைத்திற்குமான ஒரே பதில், “பப்ளிக் முடியட்டும் அப்புறம் மாத்திரலாம்”.



என்றைக்குமில்லாது கூட்டமில்லாத பஸ் ஒன்றிற்குள் இருப்பது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. பக்கவாட்டிலும், வெளிப்புறத்திலும் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ போஸ்டர்கள் நிரம்பி வழிந்தன. ரேடியோவில் ‘சூரியோதயம்’ ஒலிக்க ஆரம்பித்தது, பஸ் கிளம்பி இருந்தது.



“இப்ப எல்லாம் வர வர மரியாதையே இல்லாம போயிட்டிருக்கு, என்ன நெனைச்சுட்டு இருக்க மனசுல”


“அப்டி என்ன குறைஞ்சு போச்சு, நீங்களே சாப்பாடு போட்டுகொங்கனு தான சொன்னேன், அதுக்கு அடிபீங்களா?”


“ஆமாடீ,அதென்ன நீ சொல்றது, ஒரு மனுஷன் அல்லோலப்பட்டு வீட்டுக்கு வந்தா இப்டிதான் நடந்துக்குவியா?”


“இந்த ஒரு முறை தான சொன்னேன், என்னை ஏன் இப்டி பாடாப்படுத்துறீங்க...அய்யோ ஆண்டவா”


“ஆமாடி இப்ப கால் மேல கால் போட்டுட்டு எனக்கு ஆர்டர் போடுவ, நாளைக்கு என் தலை மேல ஏறி உக்காருவ, அப்றம் நான் உனக்கு சேவகம் பண்ணனுமா?” 

சண்டை, அழுகை, கதறல், ஆத்திரம். இடையில் இரண்டு முறை அம்மாவிற்கு அறையும் விழுந்து இருந்தது. அப்பா இன்னும் பொருமிக்கொண்டு இருந்தார். கொட்டக் கொட்ட அதை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தங்கை எழுந்து அழத் தொடங்கி விட்டிருந்தால். அந்நொடி வீடே கண்றாவியாக இருந்தது. எங்காவது போய் விடலாமா எனத் தோன்றியது.


விக்னேஷின் அப்பா தாசில்தார் ஆபிஸில் வேலைப் பார்கிறார். என்ன வேலை எவ்வளவு சம்பளம், எதையும் தெளிவாக சொல்ல மாட்டார். தாசில்தாரரிடம் பெற வேண்டிய ஆவணங்கள் குறித்துப் பலரும் வீட்டிற்கு வந்து அப்பாவை பார்ப்பார்கள். சிலர் நேரம் காலம் தெரியாது பேசிக் கொண்டிருப்பார்கள். டீ, பக்கோடா என இடையிடையே அவருடைய அறைக்கு கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். சிரித்தவாறே, “அதெல்லாம் பண்ணிடலாம், சீக்கிரமே முடிச்சி கொடுத்தரலாம்” என சொல்லிக் கொண்டிருப்பார் அப்பா. ஒவ்வொரு நாள் இரவும் மேலதிகாரிகளை திட்டியே சாப்பிடத் தொடங்குவார். சில நாட்கள் எல்லைமீறி வசை காதைப் பொத்துமளவுக்கு வந்து விழும். ம்ம்’கொட்டிக் கொண்டே அம்மா ‘குழந்தைங்க, குழந்தைங்க’ என இறைஞ்சுவார்.



“அடி போடி, இவனுங்க முன்னாடி எப்பவும் கை கட்டி வாய்ப்பொத்தி நின்னுகிட்டே சேவகம் பண்ணனுமா... ஒரு நிமிஷம் உட்கார்ந்துற முடியலை, வெட்கமா இருக்கு. என்னை நெனைச்சா எனக்கே கேவலமா இருக்கு. இன்னைக்கு அந்தாளு வந்து பேசிட்டு இருக்கும்போது உக்காந்து இருந்துடேனாமா... ‘ஒரு சீனியர் ஆபிஸர் பேசிட்டு இருக்குரப்போ இப்டிதான் உக்காந்துட்டு இருப்பியாயா? இதான் மரியாதை கொடுக்கற லச்சணமா’னு அசிங்க படுத்திட்டான். இதெல்லாம் ஒரு பொழப்பா? இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்”. அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அம்மாவை பார்த்து மேலும் ஆத்திரத்துடன் “எல்லாம் உன்னால தான்டி, உன்னால எனக்கு பிடிச்ச சனியன் தான் எல்லாம்” என எரிந்து விழத் தொடங்குவார். “நீ இல்லாம இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பன். குடும்பம், நீ, ஆபீஸ்’னு எல்லத்துனாளையும் தான் நான் இப்டி சின்னப்பட்டுட்டு இருக்கேன்”. ஒவ்வொரு நாளும் இருள் கவியத் தொடங்கும் போது, எதற்கும் தயரானவளாக அம்மா இயல்பாக மாறுதை விக்னேஷ் கவனித்திருக்கிறான்.



பேருந்து ஜன்னல் கம்பிகளினூடே புலர்ந்து வரும் காலையை கவனிப்பதில் ஒரு அலாதி இருப்பதைப் பல முறை உணர்ந்து இருக்கிறான். வித்தியாச வித்தியாசமான முகங்கள், விசித்திரமான காட்சிகள். அதே இடம், அதே சாலை தான். ஆனால் காலை வேறு மாதிரியானது. சாலை வளைவுகளை கடக்கும்போது தொப்பலாக செய்திதாள்கள் குவிந்து இருப்பதை பார்ப்பான், கூடையை தூக்கிவிட ஆள் பார்த்து கொண்டு நிற்கும் பூக்கார பாட்டிகள் கேலியாக தோற்றமளிப்பார்கள். வீடுகளுக்கு முன் குனிந்து கூட்டுபவர்களை பார்த்ததும் பதற்றமாகி விடுவான். ஒரு சில முறை இவன் பார்த்ததை அவர்கள் கவனித்து விட்டால் தவித்துப்போவான். யார் எவரென தெரியாவிட்டாலும் தான் தப்பு செய்து விட்டதாக உணர்வான். குற்றவுணர்வுடனே அன்றைய நாள் தொடங்கும்.




கண்ணசந்து கம்பியில் லேசாக இடித்துக் கொண்டதும் தான் பிரக்ஞை ஏற்பட்டு தோன்றியது, இன்றைய நாள் அப்படியான நாள் இல்லை. வழக்கமான புத்துணர்வு மிக்க காலையாக இன்று இல்லை, சிறப்பு வகுப்பு எடுக்க வரும் ஆசிரியரின் முகம் போல சலனமற்று இருந்தது. விரக்தி வெதும்பி வெளிப்பட்டது. வயிற்றுனுள் ஈருருளை திணறுவது போன்று இருந்தது, நேரத்திற்கு சாப்பிடும் வழமை இன்று அனுசரிக்கப் படவில்லை. அழுது வீங்கிய கண்களும், கரகரத்த குரலுமாய் கையில் இருபது ரூபாயை திணித்து “இந்தா இவ்ளோ தான் இருக்கு, அங்க போய் டீ,பன் எதாவது வாங்கி சாப்ட்டுகோ” என்றால் அம்மா. சமைக்காததர்கான காரணம் விக்னேஷிற்கு தெரியாமலில்லை. ஆனால் அதை எதுவும் அவன் கேட்கவில்லை. அப்பா எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தான், காணவில்லை.



அம்மா’விற்கு வீட்டில் மட்டும் தான் வேலை. நினைவு தெரிந்த நாளிருந்து அவள் வெளியில் எங்கும் வேளைக்கு சென்றதில்லை. தன் நண்பர்களின் அம்மா’க்கள் பலர் வேலைக்கு போவது தெரிந்திருந்தும், அவனுக்கு அது ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. “அம்மாவும் வேளைக்கு போய்ட்டா அப்புறம் இன்னைக்கு மாறி தான் எப்பவும் சாப்பிடாம வர வேண்டி இருக்கும்”, யோசித்து கொண்டிருந்தவன் செவிப்பாரையில் வந்தறைந்தது பள்ளி வேனின் சத்தம். கடிகாரத்தை பார்த்தான், 7.42.




வந்ததில் இருந்து பத்து பதினைந்து நிமிடங்கள் அப்பிடியே வராண்டாவில் நின்று கொண்டு யோசனையில் மூழ்கி இருந்தது உணர்ந்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனது வகுப்பு அறைக்குள் மெளனமாக நுழைந்தான். சூழ்ந்திருந்த வெறுமை கலந்த அமைதி மேலும் பல நினைவுகளை தூண்டி அவனை துன்புறுத்தியது. கணக்கு தான் முதல் பீரியட், சார் வர இன்னும் நேரமாகும் என நினைத்தபடியே நாற்காலியை இழுத்து உட்கார்ந்தான். விக்னேஷிற்கு சார்’ரின் சேரில் உட்காருவது அதுவே முதல் முறை. மிகவும் சௌகரியமாக உணர்ந்தான். அங்கே உட்கார்ந்து கொண்டு அவனும் அவன் இரண்டு நண்பர்கள் உட்காரும் பெஞ்சை பார்க்கும் போது, அது மிகவும் சிறியதாக தெரிந்தது. இதனுடன் ஒப்பிடும்போது அந்த மரபெஞ்சின் விஸ்தீரணம் பத்தில் ஒரு வீதம் கூட இல்லை என உணர்ந்தான். அவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது, அது தான் உட்காரும் இடம் தானா? ஆசிரியர் நாற்காலியில் வீற்றிருக்கும் போதெல்லாம் அவர் தன்னையே பார்ப்பதாக விக்னேஷிற்கு தோன்றும். முரளி அவனை கூப்பிட்டு கூப்பிட்டு சலித்துவிடுவான். சார் பாத்துவிடுவார் என்னும் பயமே போதுமானதாக இருந்தது அவனுக்கு, திரும்பவே மாட்டான், அவர் இருக்கும் வரை யாருடனும் பேச மாட்டான். கணக்கை விடவும், அதன் ஆசிரியர் மீதே பயம் அதிகம். ஆனால் நாற்காலியில் உட்கார்ந்தால் மாணவர்கள் எதிரே வந்து அமர்ந்தாலும் இல்லாவிட்டாலும், பெரிய வித்தியாசம் இருக்காது என்றே விக்னேஷிற்கு இப்போது தோன்றியது. பரந்து விரிந்த அந்த வகுப்பை, அந்த ஒற்றை சேரில் இருந்து பார்ப்பது என்பது ஒரே நேரத்தில் ஒரு கழுகு பார்வையை போன்றும், விட்டத்தை வெறிப்பதாகவும் இருப்பதாக அவனுக்குப் பட்டது. மாணவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், ஆசிரியர் தன்னை பார்த்து விட கூடும் எனும் பிரக்ஞையால் மறைந்து மறைந்து பேச வேண்டிய நிலை. ஆனால் ஆசிரியர்க்கு அங்கிருந்து அனைவரும் ஒன்றுதான். மரபெஞ்சுகள் தான். தமிழ் ஆசிரியர் ஒருவர் மட்டுமே அனைவரையும் வட்டமாக குழுமச் செய்து தானும் சேர்ந்து அமர்ந்து வகுப்பை நடத்துகிறார் எனும் நினைவு தட்டியதும், சம்பந்தமின்றி ஏன் இது நினைவுக்கு வந்ததது என திகைப்படைந்தான். அந்த யோசனையை அப்படியே உதறிவிட்டு, ஒரு கணம் நிதானித்து நாற்காலியின் இரு கைப்பிடிகளையும் இறுகப் பற்றினான். மெல்ல வலது காலின் மேல் இடது காலை போட்டான். சிம்மாசனத்தில் இருப்பது போல உணர்ந்தான். சட்டென தலைமுடியை ஐந்து விரல்கள் இடுக்கி போல் பிடித்து தரதரவென இழுப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து எழுந்தான். மூர்ச்சை அடையும் அளவுக்கு வலி மிகுந்து “சார் சார்..சாரி சார்” எனக் கதறினான். அதுகாறும் அவர் வந்து நின்றுகொண்டு இருந்ததை அவன் கவனிக்கவில்லை. தலையில் இருந்த கையை எடுத்து சுளீரென கன்னத்தில் கனமாக பதித்தார் ஆசிரியர். “வாத்யார் உக்கார இடத்துல உக்காரலாமாடா?” என்றார் பற்களை கடித்தபடி, “போ, போய் உன் இடத்துல உக்காரு”.


தேம்பி வழிந்த கண்களை துடைத்துக் கொண்டு, வாத்யாரை பார்த்து நடுங்கியபடியே சென்று தனது பெஞ்சில் அமர்ந்தான்.


*** 
Thank You for the Inspiration Perumal Murugan Sir. I Hope for it to continue forever.

3/5/17



ஞகளும் மானெனே 

யானும் கதலல்லே சரீர்

பழஞம் மனவ தா நிசவ் யானிடனை 

கழிஞூஞ்னு மலபல்ல கந்தி யாய நஸ 

ஞர மய ஹசாயி கசத் லே ஹக் ஷ
சடக் சடக் 

நிவநவ யசத் கண மோ 

சடக் 

ஒழி கன் மதள யாழி ஆசே 

ஞணமே சுழிஞு பூங் ஞெரழே ஈ 

மயமே... கணானி ஞகத் யுண நநன 
ரஸ்ஸல்ழே. 

சடக் சடக் 


- அன்புள்ள வம்மூக்கு <3

23/3/17

மீண்டெழட்டும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் –யோகேந்திர யாதவ்



இந்த தேசம் நிச்சயமற்ற உருவில் “கருப்பு பணத்திற்கு எதிரான போரில்” ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஊழலுக்கு எதிரான நிலையில் இருந்தே விடுபட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் நாம். உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் பின்னோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை(PCA),1988 திருத்துவதற்கு தயாராகி விட்டது பாராளுமன்றம். கொடுமை என்னவென்றால், பெரும்பாலான அரசியல் அமைப்புகளுக்கும் சாதகமாக அமைவதால், பல கட்சிகளின் ஆதரவையும் இத்திருத்தம் பெட்டறுள்ளது. ஆம், எல்லாம் கருப்பு பணத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தான்.
நாடாளுமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் ஊழல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2013, சில திருத்தங்களை ஊழல் தடுப்பு சட்டத்திற்கு(PCA) முன்மொழிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட மிகப் பரவாலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் போது, 2013ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. சட்டரீதியாக ஊழலுக்கு கிடுக்கு பிடி போடுவதே அதன் நோக்கம். ஆனால் வருந்தத்தக்க சில அம்சங்கள் அதிலும் இருந்தன. எனினும் அதன் ஒட்டுமொத்த சீர்குலைவு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்க முனைந்த திருத்தங்களால் தான் ஆனது. கேபினெட் உட்பட, பல்வேறு கட்சிகளையும் உள்ளடக்கிய மாநிலங்களவையின் தேர்வு குழுவும் இந்த மாற்றங்களை ஏற்று கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான சட்டம் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேற்ற முடியாததால் தள்ளி போகும் நிலையிலுள்ளது. 


யோகேந்திர யாதவ்





சீர்குலைக்கும் திருத்தங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு குழுவால் அங்கீரிக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வழிகளிலும் ஊழல் தடுப்பு என்னும் அதன் அடிப்படையையே மழுங்கடிப்பதாக உள்ளது. ஊழலின் தற்போதைய வரையறையை குறுக்குவதோடு அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரத்தையும் அதை நிருபிப்பதற்கான தேவையையும் அதிகமாக வலியுறுத்துகிறது, இது “தகவல் தெரிவிப்பாளர்களின” (whistleblowers) நிலையை இன்னும் சிரமம் ஆக்குவதோடு, அதிகாரிகள் தங்களை மேலும் காத்துக் கொள்வதற்கும், ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் எந்த ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் உள்ளகாதவாரு பார்த்து கொள்ளவுமே பயன்படும். இந்த மசோதா சட்டமானால், ஏற்கனவே ஊழலுக்கு எதிராக பலவீனமாக உள்ள நமது அமைப்பு மேலும் பலத்த அடி வாங்கும்.
  
இப்போது மசோதாவின் முக்கியமான ஒவ்வொரு சரத்தும் ஊழலுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது என பாப்போம் 

மசோதாவில் முதல் அம்சமான ஊழலின் வரையறையும் பொருளும், அரசு (அ) பொதுப் பனியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறுக்கப் பட்டுளள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1)(d), ஊழலின் பல்வேறு மறைமுக அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளது, முறையற்ற உதவியாக “எந்த விலை மதிப்புள்ள பொருளோ அதற்கான முகாந்திரத்தை நிறுவும் செயலோ” அல்லது “பொது பணியாளராக தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தல்’ என்பது உட்பட. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவோ இந்த பிரிவையே நீக்க்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் மேலோட்டமான ஒரு வரையறையாக, பொது பணியாளர் குற்றச் செயலில் ஈடுபடுதல்: முறையற்ற வழியில் ஒருவர் கட்டுபாட்டில் சொத்துகளை வைத்து இருப்பது மற்றும் உள்நோக்கத்தோடு முறையற்ற வகையில் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவிப்பது என மாற்றப் பட்டுள்ளது. இந்த புது வரையறையின் படி , எந்த ஒரு பலனும் பொருளாதார ரீதியாயானதாக இல்லாமலோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அதை குற்றமாக கருதவோ தண்டிக்கவோ முடியாது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தை கவனமாக ஆராய்ந்த சட்ட ஆணையம் இந்த புது வரையறையை நிராகரித்துள்ளது. இன்னும் விரவானதொரு வரையறையை அது முன்மொழிந்தது. பொதுப் பணியாளரின் “ஒழுங்கற்ற பொதுச் செயல் மற்றும் நடவடிக்கை”, “முறையற்ற ஆதாயத்துக்கு வழி வகுத்தால்” அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டும் என சட்ட ஆணையம் கோரியது. இத்தனைக்கு பிறகும், அரசும் பாராளுமன்ற குழுவும் இந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு ஊழல் கூட்டாளிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மேஜை-அடியிலான பரிவர்த்தனை என ஏதும் இப்போது உயர்மட்ட அளவில் நடப்பதில்லை இருப்பினும், இப்போது இருக்கும் சட்டத்தில் 13(1)(d) பிரிவு மட்டுமே உயர்மட்ட இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு சற்றும் பொருந்தாத வகையிலேயே ஊழல் புரிந்த அரசு பணியாளர் பெரும் பலனானது, கடல் தாண்டிய பரிவர்தனையாகவும் நேரடி பணவடிவில் இல்லாமலும் இருக்கிறது உதரணத்திற்கு, பனி ஓய்வுக்கு பிந்தைய பலன்கள். போபர்ஸ் ஊழலில் இருந்து 2G வரை, காமன் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து மாபெரும் ஊழலும் குற்றங்களாக கருதப்பட்டது இந்த பிரிவின் உபாயத்தால் தான். அரசு அதிகாரிகளில் ஒரு சாரார் தொடர்ந்து இந்த பிரிவை மட்டும் நீக்க வலியுறுத்துவதும் இதனால் தான். அதற்கு அவர்களது வாதமாக அவர்கள் கூறுவது, நேர்மையான அதிகாரிகளின் நன்மதிப்பை இது பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே. ஆனால் இந்த வாதம் உண்மை அல்ல. நேர்மைக்கு பெயர்போன ஓய்வு பெற்ற கேபிநெட் செயலாளரான டி.எஸ்.சுப்பிரமணியம், நேர்மையான அதிகாரிகளுக்கு போதுமான வகையில் இப்போது இருக்கும் சட்டமே பாதுகாப்பை வழங்குகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். பதவியை தவறான வழியில் நிதி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தியது உறுதியாக நிரூபனமாகாத வரையில் பணியாளர்களின் நன்மதிப்பு எவ்வகையிலும் பாதிப்பு அடையாது. 


ஆரம்பநிலை அழுத்தம் 

இரண்டாவது, இந்த மசோதா தொடக்க நிலையிலேயே ஆதாரம் இல்லையென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்போரை குற்றவாளியாக கருத முடியாததாக ஆக்குகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி பொதுப் பணியாளர் ஒருவரின் அறியப்பட்ட வருவாய்க்கு மீறிய சொத்து அல்லது பணமே அவர் செய்த ஊழலை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் இப்போது வழக்கு தொடுப்பவரேதான், தவறான வழியில் அரசு அலுவலர் பெற்ற பணமே முறையற்ற ரீதியில் அவர் சொத்து குவிக்க பயன்பட்டது என்பதையும் நிரூபித்தாக வேண்டியதாக இருக்கும். மாநிலங்களவையின் தேர்வு குழு இவ்வாறு நோக்கம் கற்பிப்பது தேவையற்றது என கூறி இருந்தாலும் அரசாங்கத்தின் இறுதி முடிவு நமக்கு இன்னும் தெரியவில்லை. அதிலும் இப்போதைய சட்டத்தில் இருக்கும் “அறியப்பட்ட வருவாய்” என்பதற்க்கு “அரசு அல்லது பொதுப் பணியாளர் சட்டரீதியான அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தான் பணியாற்றும் காலத்தில் மட்டும் பெறப்படும்” என வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திருத்தம் 1988ம் ஆண்டு அதன் முந்தைய சட்ட வடிவத்தில் இருந்த ஓட்டைகளை அடைக்க கொண்டுவரப் பட்டது. ஆனால் சமூக தரப்பில் யாரிடமும் இருந்து எந்த பரிந்துரையும் பெறாது, மத்திய அரசு இப்போது இந்த சரத்தையே தூக்க இருக்கிறது. இது பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவைக்கும் செயலே ஆகும்.

மூன்றாவது, இந்த மசோதா லஞ்சம் கொடுப்பவரை லஞ்சம் வாங்கியவருக்கு எதிரான சாட்சியாக நிறுத்துவதை சிக்கலாகி உள்ளது. இப்போதிருக்கும் சட்ட படி, ஒரு நபர் தன்னிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என ஒருவர் மீது புகார் அளித்தார் என்றால், புகார் அளித்தவரே லஞ்சம் வாங்க தூண்டினார் என குற்றம் சாட்ட முடியாது. லஞ்சம் வாங்குவோரையும் கொடுப்பவரையும் ஒரே விதத்தில் நடத்தக் கூடாது. ஆனால் வரவிருக்கும் மசோதா அதை செய்கிறது. இது லஞ்சம் கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அரசு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியமாக மாறாமல் இருக்கவே செய்யும். மறைமுகமாக இது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்துவிடும். 

இப்படி முழுவதும் சிக்கலாக்குவதற்கு, வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பவருக்கு முழு விளக்கு அளிக்காமல் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கலாம். அரசுக்கு சிறப்பான வாய்ப்புக்கள் இருந்தன. இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை லஞ்சத்தை “தர விளைவது” மற்றும் “ரகசியமாக தருவது” என இருவகையாக பார்க்க பரிந்துரைத்தது. ஒருவர் லஞ்சம் லஞ்சம் தர முனைந்து, தந்த பின்பு உடனடியாக புகார் அளித்தார் எனில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் அரசு உதாசினப்படுத்தியதன்- அனைவரயும் தண்டிக்கும் யோசனயின்- மூலம் லஞ்சம் பெறக் கூடியவர்களுக்கே துணை புரிந்து உள்ளது என்பது உறுதி.

நான்காவது திருத்தம், ஊழல் புரிந்தவரை தண்டிக்கும் வாய்ப்பை குறைத்து உள்ளது. இப்போதிருக்கும் சட்டப் படி, பணியிலிருக்கும் ஒருவரை தண்டிக்க அவரது மூத்த அதிகாரி ஒருவரின் ஒப்புதல் தேவை. இதற்கான காரணம் எளிமையானது. அது நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கப் படுவதில் இருந்தும், துன்புறுத்தப் படுவதில் இருந்தும் காப்பது தான். இப்போது கொண்டு வந்திருக்கும் மசோதா, பனி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்து உள்ளது. அவர்கள் பணி ஆற்றிய காலத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் இந்த நீட்டிப்பு பொருந்தும். இது ஒரு வகையில் நியாமானதாக தோன்றினாலும், தேவையற்ற ஒரு சில சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அது என்னவெனில், ஒரு தனி நபர் ஊழல் குற்றச்சாட்டில் அரசு பணியாளர் ஒருவரை தண்டிப்பதற்கான ஒப்புதலை பெற அரசாங்கத்தை அணுகினால், அவர் இனி நீதி மன்றத்தை தான் நாட வேண்டி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட அரசு பணியாளருக்கு வழங்கப்படும் இந்த மேலதிகமான பாதுகாப்பு, ஊழலால் பாதிக்கபட்டவர்களையும், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்களையும் கை விடக் கூடிய ஒரு செயலாகவே இருக்கும். ஊழல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை காப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது இதில் தெளிவாகவே தெரிகிறது. 



முதலில் அனுமதி

இறுதியாக, மிக மோசமானதும் கொடுரமானதுமான இந்த திருத்தம் பொது மக்களின் எந்த ஒரு கருத்தையும் கேட்காது செய்யப்படுள்ளது. இந்த மசோதா பிரிவு 17A என்னும் புதுப் பிரிவை சேர்க்க கோருகிறது. அதன் சாராம்சம் இது தான்: இனி எந்த ஒரு விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டபட்ட பணியாளர் ஒருவரை விசாரிக்க அதிகாரபூர்வ அனுமதி முதலில் பெறுவது அவசியம். அந்த அனுமதி லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா மூலம் வழங்குவது அரசின் முடிவு. பாராளுமன்ற தேர்வுக் குழுவோ இதை இன்னும் மோசமாக்கி, குற்றம் சாட்டப்பட்டவரை நீக்க கூடிய உரிமை “தகுந்த உரிமை படைத்த ஒருவர் அல்லது அமைப்புக்கு தான்” உண்டு என முன்மொழிந்துள்ளது. எனவே இனி அரசியல் முதலாளிகளே ஊழல் தடுப்பு விசாராணையை அரசு பணியாளர் மீது நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்களாக இருப்பர். 

இது அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. முன்னமே குறிப்பிட்ட படி இப்போதிருக்கும் சட்டப் பிரிவு 19, அனைத்துவித போலி குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதிகாரிகளை காக்கும் விதமாக ஏற்கனவே ஏற்படுத்த பட்டுள்ளது. நேர்மையான, குற்றமற்ற அதிகாரியின் மீது புகார் வருமானால் விசாரித்து பார்த்து அரசாங்கம் அதற்கான ஒப்புதல் வழங்காது அந்த புகாரை நிராகரிக்கலாம். இந்த வசதி ஏற்கனவே இருக்கையில் எதற்கு இப்போது இதில் புதிய திருத்தம்? அதுவும் ஆரம்பகட்ட விசாரணைக்கே எதற்கு ஒப்புதல்? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விஷயம், விசாரணை இல்லை என்றால் நம்பகமான ஆதாரமும் கிடைக்க போவது இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஒரு புகாருக்கு ஒப்புதல் வழங்கும்? அல்லது ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாது ஒருவரால் எப்படி ஆதாரங்களை சமர்பித்து ஒப்புதலை பெற முடியும்? அப்படியே ஒப்புதலும் வழங்கபட்டாலும், அது தெரியவந்தால் விசாரணை நடப்பதற்கு முன்னரே அந்த ஊழல் புரிந்தவர் தனது ஆதாரங்களை மறைக்க உதவாதா? இந்த மோசமான திருத்தம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தப்பிக்க வைக்கவே பயன்பட போகிறது. ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஊழவாதி ஒருவரை தண்டனையில் இருந்து மாத்திரம் அல்ல ஆதாரங்கள் சேகரிப்பதில் இருந்தும் விசாரணையில் இருந்தும்கூட பாதுகாக்க முடியும். 



மீளட்டும் ஊழல் எதிர்ப்பு 

அரசின் இந்த முடிவு பழைய “ஒற்றை வழிமுறையை” மீண்டும் கொண்டு வந்துள்ளது. அந்த பழைய அரசாணையின் படி எந்த ஒரு மூத்த அதிகாரியையும் அரசின் அனுமதி இன்றி விசாரிக்க முடியாது. 1997ம் ஆண்டு புகழ் பெற்ற வினீத் நாராயண் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை சட்ட விரோதம் என அறிவித்தது. அரசாங்கம் அதையே திருத்த சட்டமாக 2003ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்தது. கடைசியாக சமீபத்தில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, “சமத்துவத்திற்கான உரிமையை” மீறுவதாக கூறி அதை நீக்கி தீர்ப்பளித்தது. ஆளும் வர்க்கத்தில் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை இப்போது மூன்றாவது முறையாக அரசு கொண்டு வந்திருக்கும் அதே கவச சட்டமே நிரூபிக்கிறது. 
குளிர் கால கூட்ட தொடர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், பட்ஜெட் கூட்டதொடருக்கு இந்த மசோதா தள்ளிபோகும் என தெரிகிறது. இது அக்கறையுள்ள பொதுமக்களுக்கு, ஊழலை பாதுகாக்கும் அரசின் இந்த மோசமான முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கும், அனைவரிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பாக ஓரிரு மாதங்கள் கிடைத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

The original article released in The Hindu Dec12,2016 - http://www.thehindu.com/opinion/lead/Time-to-blow-the-whistle/article16793830.ece

3/2/17

ப்ரிகால் போராட்டமும்; தாமதமான நீதியும்.







நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி டெல்லி முதல் நாட்டின் மூலை முடுக்கு வரை விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் நடைபெற்று வரும் பிற விஷயங்களில் நம் கவனங்கள் செல்வதில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படையான விஷயங்கள் என்றும் விவாதிக்க பட வேண்டியவை. அதிலும் நமது நீதி துறை அத்தைகைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய ஒன்று. கவனிக்க தவறிய அந்த விஷயம் வேறொன்றுமில்லை, ஒரு தொழிற்சங்கத்துக்கும் நீதி துறைக்கும் இடையே நம்காலத்தில் நடைபெற்று முடிந்த “நீண்ட” உரையாடலை தான் நாம் பார்க்க தவறியது.



ஜனவரி 17ம் தேதி, கோவை ப்ரிகால் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கான காரணமாக நிதிமன்றம் கூறியது “குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை” என. 


முன்னதாக 2012ம் ஆண்டு கோவை செஷன்ஸ் நீதி மன்றம் இபிகோ பிரிவு 302 மற்றும் 449 (கொலை குற்றம் மற்றும் குற்றம் புரிய முனைதல்) படி தொழிலார்கள் எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது இங்கு குறிப்பிட தக்கது.



                          ப்ரிகால்


கோவை- தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்”. 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்களை கொண்ட நாட்டின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்று. வாகனங்களுக்கான துணை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு பொரியியல் தொழிநுட்ப கருவி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ப்ரிகால், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உற்பத்தி நிர்வனம். 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு உற்பத்தி பிரிவுகளாக- உத்தரக்கண்டில் இரண்டு, புனே மற்றும் குர்கானில் தலா ஒன்று என- செயல்பட்டு வரும் ‘ப்ரிகால்’ வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தி பெரு நிறுவனங்களுக்கு இந்நிறுவனமே தொழில் நுட்ப சாதனங்களான வேக கணிப்புக் கருவி, உணர் திறன் கருவி ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. கோவையில் இரு உற்பத்தி பிரிவுகளாக (பிளான்ட் 1 மற்றும் பிளான்ட்3,4) இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் முதல்முறையாக ஒட்டு மொத்த வருவாயாக 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவித்து உள்ளது.





          ஊதிய உயர்வு – போராட்டம்


5100 ஊழியர்களை கொண்ட ப்ரிகால் நிறுவனத்தில் 650 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி புரிகின்றனர். 2007ம் ஆண்டு, நியாமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை முன்வைத்து ப்ரிகால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து “கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்” என்னும் பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தனர். ஆனால் அந்நிறுவன மனித வளப் பிரிவு மேலாளரான ராய் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு தான், இச்சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டது. தொழிற் சங்கத்தை ஆரம்பித்த நபர்களில் 6 பேர் உத்தரகண்டிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. 

தொழிற் சங்க தலைவரான குமாரசாமி கூறுகையில்,
 “ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான இடர்களை தாண்டி தான் வந்துள்ளோம். போராட்டம் ஆரம்பமாகிய காலத்திலும் எங்கள் மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்பட்டே வந்தன. மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் யூனியனை கைபற்றி தொழிற்சாலைக்கு ஆபத்து ஏற்படுத்துக் கின்றனர் என்றே நிர்வாகம் எங்கள் மீது பழி கூறியது” என்றார்.



           என்ன கோரிக்கைகள்



சங்கம் துவங்கிய 2007ம் ஆண்டு பணியாளர்களின் மாத ஊதியமாக இருந்த தொகை 8,522 ரூபாய். ஓய்வு தொகை 1,00,000 ரூபாய். 25 ஆண்டுகள் வேலை செய்து பணி ஓய்வு பெற்றாலும் இதே தொகை தான். வேலை பளு மிக அதிகம். வேலை நேரத்தில் இடைவேளை கூட அதிக நேரம் இல்லை. எனவே பணியாளர்கள் தங்கள் கால்கள் பக்கத்திலேயே தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். உற்பத்தி தேவை அதிகமாக இருக்கிற படியால், கிடைக்கிற குறைந்த இடைவேளையில் எழுந்து செல்லக் கூட நேரம் இருப்பதில்லை என தெரிவித்தனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே அடிப்படை உரிமைகளான நியாமான வேலை சூழலை வழங்க கோரியும், குறைவான ஊதியத்தை எதிர்த்தும், தற்காலிக பணி அல்லாது நிரந்தர பணி வழங்க கோரியும் 2009ம் ஆண்டு, கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். 



             ராய் ஜார்ஜ் கொலை



இப்படியான ஒரு சூழலில், இரும்பு தடிகளோடு நுழைந்த ஆட்களால் மூர்க்கமாக தனது அலுவலக அறையிலேயே அடித்து கொல்லப் பட்டார் ராய். கேரளம், எர்னாகுளத்தை சேர்ந்தவரான ராய் ஜார்ஜ் கோவை பெரியநாயக்கன்பாளையம் ப்ரிகால் மனிதவளப் பிரிவு துணை தலைவராக பணி புரிந்து வந்தார். அரசின் தலையீட்டால், நடைபெற்று வந்த போராட்டம் சமரச தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில் தான் இத்தைகைய கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை 11.40மணி அளவில் ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டு சரிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அலுவலக அறையில் இருந்த நான்கு பேரும் தாக்குதலுக்கு ஆளாயினர். உடன் மாலை 4.30மணிக்கு மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாலை 6.30க்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இரவு 10 மணிக்கு தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.



             முதல் கோணல்


குற்றம் சாட்டபட்ட அத்துனை பேரும் அடுத்த நாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சிலர் இணைக்கப் பட்டனர். வழக்கின் ஆரம்பத்தில் தொழிற்சங்க தலைவர் குமாரசாமி உட்பட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்ற அறிக்கையில் நிறைய “இடைசெருகல்கள்” இருப்பதாக நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. 42தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தொடர்ச்சியான போலிஸ் விசாரணைக்கு உள்ளாகப் பட்டனர். நான்கு பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு 2009ம் ஆண்டு ஜாமின் கிடைக்கும் வரை 130 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டனர். 2012ம் ஆண்டு வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், எட்டு பேரை குற்றவாளிகளாக அறிவித்து மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. தொழிலார்கள் எட்டு பேருக்கும் கடுங்காவலுடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கியமான வாதமாக அப்போது முன்வைக்கப் பட்டது,  ‘நடந்த கொலையை குற்றம் சாட்டப்பட்ட தொழிலார்கள் தான் செய்தார்களா’ என்பது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது 

“கொலை நடந்த சமயம் ராயின் கேபினில் இருந்த சிசிடிவி அந்த நாள் மட்டும் வேலை செய்யவில்லை. ஏன் சிசிடிவி கேமரா அன்று மட்டும் பழுதாகி போனது? ஆனால் கொலைக்கான சாட்சியமாக அவரது அறைக்கு வெளிய இருந்த சிசிடிவி’யில் பதிவான காணொளி சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கொலை நடந்த அறையில் ஆட்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளது, ஆனால் அது இந்த தொழிலாளர்கள் தான் என எப்படி சொல்ல முடியும்? நடந்தது கொலை என்பதை நிருபிக்க வேண்டுமானால் அந்த காணொளி பொருந்தலாம், ஆனால் யார் கொன்றார்கள் என அதை வைத்து எப்படி நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்”.



                  இரண்டாம் திருப்பம்


இந்த கொலை பற்றியும் அதற்கு முன்பிருந்தே நடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் தி-வயர் தளத்தில் எழுதிய செய்தியாளர் மதுமிதா தத்தா, இந்த ஒட்டுமொத்த ‘ப்ரிகால் நிகழ்வுகளையும்’ மாருதி நிறுவனத்தின் மானசர் தொழிற்சாலை சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ப்ரிகால் கொலை பற்றி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கொலை சம்பவம் 11.40க்கு நடந்ததாக குறிப்பிடப் படும் அதே வேளையில் “எதிர்பாரா விதமாக” வழக்கின் விசாரணை அதிகாரியான போலிஸ் ஒருவரும் 11.41 முதல் 11.46 வரை அதே தொழிற்சாலையினுள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடுகிறது. ‘சாதாரண உடையில்’ கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த அதிகாரியிடம் கொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டபோது, “தனக்கு நிர்வாகம் கொலை நடக்கிறதென எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் நடைபெற்று வந்த காலம் என்பதால் பந்தோபஸ்த்துகாக ப்ரிகால் ஆலைக்கு வெளியுலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருந்தும் கொலை நடக்கவிருந்தது எப்படி போலீசிற்கு தெரியாமல் போயிற்று என டிபன்ஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மாருதி மானசர் ஆலை சம்பவம் ஒத்துப் போவது இங்கேதான். மானசர் தொழிற்சாலை மேலாளர் அவ்னிஷ் தேவ் ஆலை உள்ளேயே வைத்து கொடூரமான முறையில் எரித்து கொல்லப் படுகிறார். தொழிற்சாலை முழுவதும் தீ வைக்கபடுகிறது. அடுத்த நாள் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நூற்று கணக்கில் தொழிலாளர்களை கைது செய்கின்றனர். ஏனெனில் அங்கும் வன்முறைக்கு முன்னர் ஊதிய உயர்வுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. மனாசர் தொழிற்சாலை தீக்கு இரையாக்கப்பட்ட அன்று 148க்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டனர். ஆனால் இறுதி வரை பதிலளிக்க முடியாத கேள்வியாக இருந்தது “யார் தீ வைத்தார்” என்பது தான். முதல் நாள் போலிஸ் பரிசோதனை போது எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் தடயவியல் அதிகாரிகள் தீப்பெட்டி ஒன்றை கண்டு எடுத்தாக தெரிவித்தனர். 

அப்போது தொழிலாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் க்ரோவர் வைத்த கேள்வி 
“எரிந்த நெருப்பில் மொத்த தொழிற்சாலையே சாம்பலாகி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீப்பெட்டி மட்டும் எரியாமல், எந்த வித சேதமும் இல்லாமல் எப்படி ‘கண்டு எடுக்கப் பட்டது’?”




                    முற்றும் கோணல்




கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் அறுவரை விடுதலை செய்து, இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து ஒற்றை ஆயுள் தணடனையாக தண்டனை குறைப்பு செய்துள்ளது. காரணம், ப்ரிகால் நிர்வாக தரப்பில் உதவி மேலாளர் அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை. மேலும் பலரது சாட்சியங்கள் ஆட்சேபனைக்கு உரியதாய் இருந்துள்ளது, பிறகு வழக்கின் ஆரம்பம் முதலே நீடித்து வந்த குழப்பங்களும் ஒரு காரணம். சாட்சியங்கள் யாவும் நம்பத்தகுந்தாக இல்லை என்றதோடு ‘பொய் சாட்சியங்களை’ கண்டித்த நீதிமன்றம், அதன் அடிப்படியிலேயே விடுதலையையும் பிறபித்து உத்தரவிட்டது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். இந்தியாவில் நீதி துறை மூலம் எளியவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. எனினும் முற்றும் முழுதாக முடியவும் இல்லை. இன்னும் இரு தொழிலாளர்கள் சிறை கம்பிகளுள் இருகிறார்கள். அவர்களுக்கான மேல் முறையீடு முயற்சியகள் முன்னெடுக்கப் படலாம். ‘கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்’ முன்னெடுத்த இந்த போராட்டம் துவங்கிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 8,522ரூபாய், ஓய்வு ஊதியம் 1 லட்சம், இப்போது வழங்கப்படும் மாத ஊதியம் 24,500 ரூபாய், ஓய்வு ஊதியம் 3.5 லட்சம் ரூபாய். 

சிறையில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நால்வரும் தங்களுக்காக அதுவரையிலும் போராடிய தொழிற்சங்க தோழர்களை ஆரத் தழுவி அழுத புகைப்படம் அடுத்த நாள் ஓரிரு நாளிதழ்களின் மாவட்ட செய்தி பிரிவில் ஒரு சிறு பெட்டி செய்தியாக இடம் பெற்று இருந்தது. ஆம், மாபெரும் பட்ஜெட் பற்றிய செய்திகளுக்கு இடம் வேண்டும் அல்லவா? 







- கபிலன். இல



***

24/1/17

சமூக வலைதளமும் மனித உளவியல் தேய்வும்



இது சமூக வலைதங்களின் காலம். தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்று கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம், பழகலாம், நட்பாகலாம். கண்ணனுக்கு புலப்படாத ஒரு இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வளைத் தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்ற ரசனை கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைதளங்களே தந்துள்ளது.

இவை தான் சமூக வலைத்தளங்கள் பற்றிய நமது பொதுவான அபிப்ராயம்.



இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றி பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம்.

ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதை பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

பிரிட்டன் கொலம்பியா பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வானது, ஐந்தில் ஒருவர் தனது நண்பர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினருடைய முக நூல் {facebook} கணக்கை அவர்களுக்கு தெரியாமல் அவர்களது திறன் பேசி {smartphone} வழியாகவோ, கணினி வழியாகவோ ரகசியமாக ஊடுருவி பார்கின்றனர் என்கிறது.

சமூக வலைதளங்களில் அதிகமாக பயனாளர்களை கொண்டுள்ளது பேஸ் புக். 2012ம் ஆண்டே 100 கோடி பயனாளர்களை தாண்டிவிட்ட பேஸ்புக் தளம், 2016ம் ஆண்டு இறுதி கணக்கின்படி 176 கோடி பயனாளர்களை தான் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி சமூக வலைதளங்களில் முதன்மையான பேஸ் புக்கில் தான் அந்தரங்க தகவல்களுக்கான பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகிறது. அதுவும் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே வெளியாகும் இந்த அத்துமீறல் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய வாஹ்லி அஹ்மத் உஸ்மானி “இது தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு செயல்பாடு தான். தங்களது மொபைல் போனிலோ அல்லது கணினியிலோ பேஸ் புக் பயன்படுத்தி விட்டு, வெளி வராமல் அப்படியே விட்டு செல்கின்றனர். அப்படியான சமயத்தில் உடன் இருப்பவர்களின் மூலமாக முதலில் இலக்காவது அவர்களின் தனி செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே ஆகும்”.



இதற்கான கணக்கெடுப்பு அமெரிக்க இளைஞர்கள் 1308 பேரிடம் எடுக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்தும் அவர்கள் யாவரும் தங்களது User ID, password எனப்படும் வருகை பதிவு மற்றும் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றியும் கூட பலன் இல்லை என்பதையும் சுட்டி காட்டுகின்றனர்.



பொறமை உணர்வு தான் இதில் முக்கிய பங்கு வகிக்கறது”, என்கிறார் ஆய்வில் முக்கிய பங்காற்றிய கணினி அறிவியல் பேராசியரர் இவான் பெஸட்னிக். அவர் மேலும் கூறுகையில் “அடிப்படையில் இந்த பொறமை தான் நெருங்கியவர்கள் என்று கூட பாராமல், அவர்களது அக்கவுன்ட்டை ஹேக் செய்யவும், ஊடுருவி பார்க்கவும் தூண்டுகிறது, சில சமயம் அந்த அக்கவுண்டையே பயன்படுத்தி அதன் உரிமையாளரை தொடர்ந்து கண்காணிக்கும் நிலைமை வரை இட்டுச் செல்கிறது” என்றார்.



இந்த ஆய்வில் பங்கெடுத்த சிலர், தங்களது குடும்பத்தினர் அல்லது விருப்பமானவர்களின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கவும், அவர்களது நிலைத் தகவலை அல்லது புகைப்படத்தை நகைப்புக்குரியதாக மாற்றி கலாட்டா செய்யவே இப்படியெல்லாம் செய்கிறோம் என ஒற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். ஆனால் வெறுப்புணர்வினாலும், பகை உணர்வினாலும் இதை செய்பவர்களின் எண்ணிகையும் சம அளவில் உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று.



மிகவும் முன்னேறிய, தொழில்நுட்பங்களை நமக்கு முன்னரே பயன்படுத்தி வரும் மேற்கத்திய நாடுகளிலேயே சமூக வலைத்தளங்களை அதிலும் குறிப்பாக பேஸ்புக்கை, கையாள்வதில் இவ்வளவு உளவியல் பூர்வ சிக்கல் இருக்கிற தென்றால், நம்முடைய நிலைமை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்று சமூக வலைதளத்தின் மூலம் இணையும் காதல், நாளை அதன் மூலமே முடிவும் பெறுகிறது. தன் காதலி யாருடன் பேசுகிறாள், யாருடைய நிலை தகவலுக்கு லைக் செய்கிறாள் என்பதை கவனிப்பதே இன்றைய ‘ஆண்’மகனின் பெருங் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் ஆண்களிடம் இதே கட்டுப்பெட்டி தனத்தை பெண்கள் காட்டுவதில்லை. மேற்கூறிய இந்த கூற்றுக்கு, இன்று பேஸ்புக்கில் காதலனின் “அன்பு” கட்டளையால் முகப்பு படம் வைக்க முடியாத பெண்களும், தனது பேஸ்புக் கடவுச்சொல்லை காதலனிடம் ஒப்படைத்து இருக்கும் பெண்களே சாட்சி.

**