சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/2/17

ப்ரிகால் போராட்டமும்; தாமதமான நீதியும்.







நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி டெல்லி முதல் நாட்டின் மூலை முடுக்கு வரை விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் நடைபெற்று வரும் பிற விஷயங்களில் நம் கவனங்கள் செல்வதில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படையான விஷயங்கள் என்றும் விவாதிக்க பட வேண்டியவை. அதிலும் நமது நீதி துறை அத்தைகைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய ஒன்று. கவனிக்க தவறிய அந்த விஷயம் வேறொன்றுமில்லை, ஒரு தொழிற்சங்கத்துக்கும் நீதி துறைக்கும் இடையே நம்காலத்தில் நடைபெற்று முடிந்த “நீண்ட” உரையாடலை தான் நாம் பார்க்க தவறியது.



ஜனவரி 17ம் தேதி, கோவை ப்ரிகால் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கான காரணமாக நிதிமன்றம் கூறியது “குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை” என. 


முன்னதாக 2012ம் ஆண்டு கோவை செஷன்ஸ் நீதி மன்றம் இபிகோ பிரிவு 302 மற்றும் 449 (கொலை குற்றம் மற்றும் குற்றம் புரிய முனைதல்) படி தொழிலார்கள் எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது இங்கு குறிப்பிட தக்கது.



                          ப்ரிகால்


கோவை- தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்”. 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்களை கொண்ட நாட்டின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்று. வாகனங்களுக்கான துணை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு பொரியியல் தொழிநுட்ப கருவி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ப்ரிகால், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உற்பத்தி நிர்வனம். 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு உற்பத்தி பிரிவுகளாக- உத்தரக்கண்டில் இரண்டு, புனே மற்றும் குர்கானில் தலா ஒன்று என- செயல்பட்டு வரும் ‘ப்ரிகால்’ வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தி பெரு நிறுவனங்களுக்கு இந்நிறுவனமே தொழில் நுட்ப சாதனங்களான வேக கணிப்புக் கருவி, உணர் திறன் கருவி ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. கோவையில் இரு உற்பத்தி பிரிவுகளாக (பிளான்ட் 1 மற்றும் பிளான்ட்3,4) இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் முதல்முறையாக ஒட்டு மொத்த வருவாயாக 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவித்து உள்ளது.





          ஊதிய உயர்வு – போராட்டம்


5100 ஊழியர்களை கொண்ட ப்ரிகால் நிறுவனத்தில் 650 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி புரிகின்றனர். 2007ம் ஆண்டு, நியாமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை முன்வைத்து ப்ரிகால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து “கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்” என்னும் பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தனர். ஆனால் அந்நிறுவன மனித வளப் பிரிவு மேலாளரான ராய் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு தான், இச்சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டது. தொழிற் சங்கத்தை ஆரம்பித்த நபர்களில் 6 பேர் உத்தரகண்டிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. 

தொழிற் சங்க தலைவரான குமாரசாமி கூறுகையில்,
 “ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான இடர்களை தாண்டி தான் வந்துள்ளோம். போராட்டம் ஆரம்பமாகிய காலத்திலும் எங்கள் மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்பட்டே வந்தன. மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் யூனியனை கைபற்றி தொழிற்சாலைக்கு ஆபத்து ஏற்படுத்துக் கின்றனர் என்றே நிர்வாகம் எங்கள் மீது பழி கூறியது” என்றார்.



           என்ன கோரிக்கைகள்



சங்கம் துவங்கிய 2007ம் ஆண்டு பணியாளர்களின் மாத ஊதியமாக இருந்த தொகை 8,522 ரூபாய். ஓய்வு தொகை 1,00,000 ரூபாய். 25 ஆண்டுகள் வேலை செய்து பணி ஓய்வு பெற்றாலும் இதே தொகை தான். வேலை பளு மிக அதிகம். வேலை நேரத்தில் இடைவேளை கூட அதிக நேரம் இல்லை. எனவே பணியாளர்கள் தங்கள் கால்கள் பக்கத்திலேயே தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். உற்பத்தி தேவை அதிகமாக இருக்கிற படியால், கிடைக்கிற குறைந்த இடைவேளையில் எழுந்து செல்லக் கூட நேரம் இருப்பதில்லை என தெரிவித்தனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே அடிப்படை உரிமைகளான நியாமான வேலை சூழலை வழங்க கோரியும், குறைவான ஊதியத்தை எதிர்த்தும், தற்காலிக பணி அல்லாது நிரந்தர பணி வழங்க கோரியும் 2009ம் ஆண்டு, கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். 



             ராய் ஜார்ஜ் கொலை



இப்படியான ஒரு சூழலில், இரும்பு தடிகளோடு நுழைந்த ஆட்களால் மூர்க்கமாக தனது அலுவலக அறையிலேயே அடித்து கொல்லப் பட்டார் ராய். கேரளம், எர்னாகுளத்தை சேர்ந்தவரான ராய் ஜார்ஜ் கோவை பெரியநாயக்கன்பாளையம் ப்ரிகால் மனிதவளப் பிரிவு துணை தலைவராக பணி புரிந்து வந்தார். அரசின் தலையீட்டால், நடைபெற்று வந்த போராட்டம் சமரச தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில் தான் இத்தைகைய கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை 11.40மணி அளவில் ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டு சரிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அலுவலக அறையில் இருந்த நான்கு பேரும் தாக்குதலுக்கு ஆளாயினர். உடன் மாலை 4.30மணிக்கு மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாலை 6.30க்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இரவு 10 மணிக்கு தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.



             முதல் கோணல்


குற்றம் சாட்டபட்ட அத்துனை பேரும் அடுத்த நாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சிலர் இணைக்கப் பட்டனர். வழக்கின் ஆரம்பத்தில் தொழிற்சங்க தலைவர் குமாரசாமி உட்பட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்ற அறிக்கையில் நிறைய “இடைசெருகல்கள்” இருப்பதாக நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. 42தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தொடர்ச்சியான போலிஸ் விசாரணைக்கு உள்ளாகப் பட்டனர். நான்கு பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு 2009ம் ஆண்டு ஜாமின் கிடைக்கும் வரை 130 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டனர். 2012ம் ஆண்டு வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், எட்டு பேரை குற்றவாளிகளாக அறிவித்து மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. தொழிலார்கள் எட்டு பேருக்கும் கடுங்காவலுடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கியமான வாதமாக அப்போது முன்வைக்கப் பட்டது,  ‘நடந்த கொலையை குற்றம் சாட்டப்பட்ட தொழிலார்கள் தான் செய்தார்களா’ என்பது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது 

“கொலை நடந்த சமயம் ராயின் கேபினில் இருந்த சிசிடிவி அந்த நாள் மட்டும் வேலை செய்யவில்லை. ஏன் சிசிடிவி கேமரா அன்று மட்டும் பழுதாகி போனது? ஆனால் கொலைக்கான சாட்சியமாக அவரது அறைக்கு வெளிய இருந்த சிசிடிவி’யில் பதிவான காணொளி சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கொலை நடந்த அறையில் ஆட்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளது, ஆனால் அது இந்த தொழிலாளர்கள் தான் என எப்படி சொல்ல முடியும்? நடந்தது கொலை என்பதை நிருபிக்க வேண்டுமானால் அந்த காணொளி பொருந்தலாம், ஆனால் யார் கொன்றார்கள் என அதை வைத்து எப்படி நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்”.



                  இரண்டாம் திருப்பம்


இந்த கொலை பற்றியும் அதற்கு முன்பிருந்தே நடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் தி-வயர் தளத்தில் எழுதிய செய்தியாளர் மதுமிதா தத்தா, இந்த ஒட்டுமொத்த ‘ப்ரிகால் நிகழ்வுகளையும்’ மாருதி நிறுவனத்தின் மானசர் தொழிற்சாலை சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ப்ரிகால் கொலை பற்றி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கொலை சம்பவம் 11.40க்கு நடந்ததாக குறிப்பிடப் படும் அதே வேளையில் “எதிர்பாரா விதமாக” வழக்கின் விசாரணை அதிகாரியான போலிஸ் ஒருவரும் 11.41 முதல் 11.46 வரை அதே தொழிற்சாலையினுள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடுகிறது. ‘சாதாரண உடையில்’ கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த அதிகாரியிடம் கொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டபோது, “தனக்கு நிர்வாகம் கொலை நடக்கிறதென எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் நடைபெற்று வந்த காலம் என்பதால் பந்தோபஸ்த்துகாக ப்ரிகால் ஆலைக்கு வெளியுலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருந்தும் கொலை நடக்கவிருந்தது எப்படி போலீசிற்கு தெரியாமல் போயிற்று என டிபன்ஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மாருதி மானசர் ஆலை சம்பவம் ஒத்துப் போவது இங்கேதான். மானசர் தொழிற்சாலை மேலாளர் அவ்னிஷ் தேவ் ஆலை உள்ளேயே வைத்து கொடூரமான முறையில் எரித்து கொல்லப் படுகிறார். தொழிற்சாலை முழுவதும் தீ வைக்கபடுகிறது. அடுத்த நாள் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நூற்று கணக்கில் தொழிலாளர்களை கைது செய்கின்றனர். ஏனெனில் அங்கும் வன்முறைக்கு முன்னர் ஊதிய உயர்வுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. மனாசர் தொழிற்சாலை தீக்கு இரையாக்கப்பட்ட அன்று 148க்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டனர். ஆனால் இறுதி வரை பதிலளிக்க முடியாத கேள்வியாக இருந்தது “யார் தீ வைத்தார்” என்பது தான். முதல் நாள் போலிஸ் பரிசோதனை போது எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் தடயவியல் அதிகாரிகள் தீப்பெட்டி ஒன்றை கண்டு எடுத்தாக தெரிவித்தனர். 

அப்போது தொழிலாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் க்ரோவர் வைத்த கேள்வி 
“எரிந்த நெருப்பில் மொத்த தொழிற்சாலையே சாம்பலாகி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீப்பெட்டி மட்டும் எரியாமல், எந்த வித சேதமும் இல்லாமல் எப்படி ‘கண்டு எடுக்கப் பட்டது’?”




                    முற்றும் கோணல்




கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் அறுவரை விடுதலை செய்து, இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து ஒற்றை ஆயுள் தணடனையாக தண்டனை குறைப்பு செய்துள்ளது. காரணம், ப்ரிகால் நிர்வாக தரப்பில் உதவி மேலாளர் அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை. மேலும் பலரது சாட்சியங்கள் ஆட்சேபனைக்கு உரியதாய் இருந்துள்ளது, பிறகு வழக்கின் ஆரம்பம் முதலே நீடித்து வந்த குழப்பங்களும் ஒரு காரணம். சாட்சியங்கள் யாவும் நம்பத்தகுந்தாக இல்லை என்றதோடு ‘பொய் சாட்சியங்களை’ கண்டித்த நீதிமன்றம், அதன் அடிப்படியிலேயே விடுதலையையும் பிறபித்து உத்தரவிட்டது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். இந்தியாவில் நீதி துறை மூலம் எளியவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. எனினும் முற்றும் முழுதாக முடியவும் இல்லை. இன்னும் இரு தொழிலாளர்கள் சிறை கம்பிகளுள் இருகிறார்கள். அவர்களுக்கான மேல் முறையீடு முயற்சியகள் முன்னெடுக்கப் படலாம். ‘கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்’ முன்னெடுத்த இந்த போராட்டம் துவங்கிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 8,522ரூபாய், ஓய்வு ஊதியம் 1 லட்சம், இப்போது வழங்கப்படும் மாத ஊதியம் 24,500 ரூபாய், ஓய்வு ஊதியம் 3.5 லட்சம் ரூபாய். 

சிறையில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நால்வரும் தங்களுக்காக அதுவரையிலும் போராடிய தொழிற்சங்க தோழர்களை ஆரத் தழுவி அழுத புகைப்படம் அடுத்த நாள் ஓரிரு நாளிதழ்களின் மாவட்ட செய்தி பிரிவில் ஒரு சிறு பெட்டி செய்தியாக இடம் பெற்று இருந்தது. ஆம், மாபெரும் பட்ஜெட் பற்றிய செய்திகளுக்கு இடம் வேண்டும் அல்லவா? 







- கபிலன். இல



***

18/8/16

சென்னை ஐஐடியில் மீண்டும் சாதி ஆதிக்கம்.




"உன்னயெல்லாம் வெட்டி பன்றிக்கு தான் போட வேண்டும்" 


"கீழ்த்தரமான உன்னை பார்க்கும்போது உன் தாயும் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள் என்றே தோன்றுகிறது"




இவைவெயல்லாம் எங்கோ இரு 'சமூக குழுக்களுக்கு' இடையே நடந்த சண்டையின் போது வெளிப்பட்டதல்ல. இந்தியாவின் Premier தலைசிறந்த கல்வி நிறுவனம் எனப் புகழப்படும் ஐஐடி'யில் (இந்திய தொழில்நுட்ப கழகம்) படிக்கும் மாணவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. ஆம் சாதிரீதியான வன்மம், கொலை மிரட்டல்கள் நேற்றிலிருந்து மாணவர் ஒருவருக்கு முகநூல் வழி இப்போதும் வந்த வண்ணம் உள்ளன. 


யார் அந்த மாணவர் ? அவர் செய்த தவறு என்ன? 


அந்த மாணவர் பெயர் அபினவ் சூர்யா. இத்தகைய சாதிரிதியான வெறுப்பு தாக்குதலுக்கு ஆளாக காரணம், ஒரு தலித் இயக்குநரை தனது முகப்புபடமாக சமூக வலைதளத்தில் வைத்தது. 
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை இதுதான். 




சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த சூர்யா இப்போது இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று சென்னை எக்மோரில் கபாலி திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்கள் சூழ பா.ரஞ்சித் உடன் செல்பி (தன்படம்) எடுத்துள்ளார். அந்த படத்தை அன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளார். அவ்வளவுதான்.







காலையில் எழுந்தவுடன் முழுக்க வெறுப்பு விஷம் தோய்ந்த மெஸேஜ்களால் தன் முகநூலில் நிரம்பி வழிவதை பார்த்துள்ளார். அத்தனையும் வன்மம். கொலை மிரட்டல்கள், வெறுப்பு. சாதியம். 
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தலைசிறந்த கல்லி நிலையத்தின் மாணவர்கள். நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்கள் (?). 


             யார் அபிநவ் சூர்யா ?


                     


இந்த சாதிய வன்ம தாக்குதலை எதிர்கொள்வதற்கு முன்பே ஊடக அறிமுகம் சூர்யாவிற்கு கிடைத்திருந்தது. அதுவும் மிகச் சமீபத்தில் - ஆகஸ்ட் 12. பெரிய கவனம் பெறாத அந்த சம்பவம் அபினவ் தனது கல்லூரி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தால் வாய்த்தது.

http://www.newindianexpress.com/cities/chennai/Trump-at-IIT-Madras-G-D-Bakshi%E2%80%99s-jingoistic-speech-prompts-open-letter-by-student/2016/08/12/article3576247.ece



சுதந்திர தினத்தை நினைவுகிறுகிற வகையில் ஆண்டுதோறும் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி ஆகஸ்ட் 11ம் தேதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜி.டி.பாக்ஸி அழைக்கப் பட்டிருக்கிறார். அரசு ஆதரவு கருத்துகளால் 'தேசியவாதம்' குறித்தும் தனது அதீத உணர்ச்சிமய பேச்சினால் ஊடகங்களில் ஏற்கனவே பல முறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியும் உள்ள பாக்ஸி சென்னை ஐஐடியிலும் சர்ச்சைகளுக்கு குறைவின்றி பேசியுள்ளார். இதனால் வேதனை அடைந்த மாணவர் அபினவ் சூர்யா கல்லூரி இயக்குநருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். அந்த கடிதம் அடுத்த நாளே சில ஊடகங்களில் வெளியாகவே, சூர்யா கவனம் பெற்றார். (முழுக் கடிதம் சுட்டியில்)



அப்படி என்ன தான் பாக்ஸி பேசினார். 





பேச்சின் ஒரு சில சாரம்சங்களாக அபினவ் குறிப்பிடுவது :


“பாகிஸ்தானுடன் சண்டையிடுங்கள், அது நம் நாட்டை உறுதியாக்கும்".

“எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம், உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்” 

மேலும் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ரானுவத்தால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றதோடல்லாமல் "அகிம்சை முட்டாள்தனமானது" என்றும் ஜெனரல் பாக்ஸி பேசியுள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் சூர்யா.

பாக்ஸின் இந்த பேச்சுக்கு பிறகு, அவரை "சென்னை ஐஐடியில் டிரம்ப்" என்றே ஊடகங்கள் அழைத்தன. அந்த அளவிற்கு சிறுபான்மை, விளிம்புநிலை மக்கள் மீது தனது பேச்சில் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.



               கடந்து வந்த பாதை


இதே சென்னை ஐஐடி'யில் தான் கடந்த வருடம் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக கிளர்ந்தெழுந்த போது, கல்லூரி நிர்வாகத்தால் தடை பின்வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் சாதி ஒடுக்குமுறை என்னும் விஷச் சுழலுக்கு ரோஹித் வெமுலா என்னும் தலித் பி.எச்.டி மாணவன் இரையாக்கப்பட்டார். சாதி இந்திய ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் நோய்க் கூறு. இதுவரையான காலக் கட்டங்களில் இந்திய கிராமங்களை பீடித்து இருந்த நோயான சாதி பாகுபாடு. சமீப வருடங்களில் பல்கலை கழகங்களை அதிகளவில் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஓர் கோர விளைவுதான் ரோஹித் வெமுலா, APSC விவகாரம்.

சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாறி வருகிறோம். அதனால் தான், இனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஓர் பிரபலமாய் இருந்த போதும், அவர் தலித் என்பதாலயே ஆதிக்க உணர்வு கொண்ட மாணவர்களுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வருகிறது. உண்மையில் ஐஐடிகள் உயர்கல்வி நிறுவனங்களா? அல்லது சாதி கூடாரமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. அடிப்படையில் அந்த மாணவர்கள் ஆகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும் இட ஒதுக்கீடு தான் அவர்கள் பிரச்சனையே. மண்டல் குழு அறிக்கை சமர்பித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது இந்த அவல நிலை. உயர்கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிகழ்வுகள், உரிமைக்களுக்கான பேராட்டங்கள் இனி எங்கு உரத்து ஒலிக்க வேண்டும் என நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன. 
ஒவ்வொரு காலத்திலும் ஒரு அரசியல் முழக்கம் வலுப்பெறும். 
இது "ஜெய் பீம்"கான காலகட்டம்.




***

நான் எழுதிய இதே கட்டுரை விகடனில் இன்னொரு விதமாய் வெளியாகி இருந்தது. 

11/6/15

யார் நீருக்கான உரிமை பெற்றவர்கள்? - அமெரிக்காவில் தொடரும் இனவாத கொடூரம்








கட்டுரையாளர்: பிரிட் பென்னட்ட் ( BRITT BENNETT) 10,June 2015
தமிழில் : கபிலன்.இல




1948'ம் ஆண்டு, தனது சகாக்களான தீக்ஸ்க்ராட்ஸ்(Dixicrats) இடையே உரையாற்றுகையில் ஸ்ட்ரோம் தர்மொண்ட் இவ்வாறு குறிப்பிட்டார், "அமெரிக்க ராணுவம் தெற்கத்திய வெள்ளையர்களான எங்களை, கருப்பின மக்களை ‘எங்கள் திரையரங்கினுள்ளோ, எங்கள் நீச்சல் குளத்தினுள்ளோ, எங்கள் வீடுகளினுள்ளோ, எங்கள் தேவாலயங்களினுள்ளோ’ அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது".


நீச்சல் குளங்களை இனப் பாகுபாடுகளுக்கான போர்க்களமாக அவர் எடுத்துக் கொண்டதை எண்ணி பலமுறை நான் பாதிப்பு அடைந்ததுண்டு, அத்தகையதோர் உணர்வு தேவை தேவையற்றிருந்த போதும். அனைத்துக்கும் பிறகு, பெரும் செல்வாக்கு செலுத்திய ஜிம் க்ரோவின்(Jim crow) பெரும்பாலான அடையாளங்களில் முக்கியமாக "நீர்"ம் அடக்கம், அது ஒதுக்கப்பட்ட நீறூற்றுக்கள், கழிப்பிடங்களிலிருந்து, நிச்சல்குளம் மற்றும் கடற்கரை வரை.


வெள்ளிக்கிழமையன்று, டெக்சாஸ் மாகாணத்தில் மெக்கின்னியில் நடைபெற்ற நீச்சல் குளக் கேளிக்கை பற்றிய யூடியூப் காணொளியில், ஓர் வெள்ளை போலிஸ் அதிகாரி, ஆர்ப்பரித்தும், அருகிலிருந்தோரை கைவிலங்கிட்டும், கருப்பின இளைஞர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டி மெரட்டியும் காட்சித் தருகிறார். ஒரு கருப்பின பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார், பின் அப்பெண்ணை தரையில் தள்ளுகிறார். அந்த பெண் அலறிக் கூச்சலிடும்போது, தன் முழுங்காலை அப்பெண்ணின் முதுகில் வைத்து அழுத்துகிறார். மெக்கின்னி காவல்துறையை பொருத்தவரை இச்செயல், "அங்கு வாழாத அல்லது அங்கு இருப்பதற்கு அனுமதியற்ற சில சிறார்களால் எழுந்த "தொந்தரவுகளுக்களை" தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.


இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டதும் அந்த அதிகாரி ராஜினாமா செய்துள்ளார், அவர்மேல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. கேளிக்கை நிகழ்வில் கலந்துகொண்ட கருப்பின இளைஞர்கள் அங்குள்ள செய்தியாளர்களிடம் போலீஸ் வருவதற்கு முன்பான நிகழ்வுகளை விளக்கியுள்ளனர், அதில் அங்குள்ள வெள்ளையின பெரியவர்கள் அவர்களை அணுகி கருப்பின குழந்தைகள் குளங்களை விட்டு வெளியேறுமாறும், தங்களது "பிரிவு 8 குடியிருப்பிற்கே" திரும்பும்மாறும் கூறியதாக தெரிவித்தனர்.




தாக்குதலில் ஈடுபடும் காவலாளி 

காவல்துறையால் தாக்கப்பட்ட பெண் 

  அதற்குபிறகு, இச்சம்பவம் பூதாகரமாகி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்ததும், உள்ளூர் செய்தியாளர் ஒருவர் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு முன் ஒட்டப்பட்டிருந்தத , "எங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நன்றி மெக்கின்னி காவல்துறை" எனும் சுவரொட்டியின் படத்தை பகிர்ந்திருந்தார். ஆயுதமேதுமற்ற இளைஞர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டும் அதிகாரியின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு சமூகத்தில், நீச்சல் குளத்தில் குளிக்க வந்த கருப்பின குழந்தைகளால் என்ன ஆபத்து விளைந்துவிடப் போகிறது?

அப்பகுதியுனுள் எழுதி வைக்கப்பட்டு இருந்த பதாகை 





நமக்கு இன்னும், அல்லது என்றும் கூட, அந்தக் குறிப்பிட்ட நீச்சல் குளத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்று தெரியாதிருக்கலாம், ஆனால் நீச்சல் உடையிலிருந்த கருப்ப்ன குழந்தைகள் மீதான அந்த அதிகாரியின் முரட்டுத்தனமான வெளிப்பாட்டால் நீருக்கான உரிமை மற்றும் அணுகல் யாருக்கு உரிமையுடையது; உரிமையற்றது குறித்து நடந்த நீண்ட நெடும் போராட்டத்தை நினைவுப் படுத்துகிறது.



இனவாதப் பதட்டத்துக்கான இடமாகவே நீர் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒருங்கிணைக்கப் பட்ட நகரக் குளங்கள் பல கலவரங்களுக்கு வழிவகுத்துள்ளது, 1931'ல் நடந்ததைப் போல. அப்போது போலிஸ் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கம் போதே, நீரினுள் இருந்த பிட்ஸ்பர்க்கின் கருப்பின ஆண், வெளியே இழுத்துவரப்பட்டு, வெள்ளையின நீந்துவோர்களால் அடிக்கப் பட்டான். மிஸிஸிப்பின் ஒருங்கிணைவுக்கு முந்தைய அடித்தள-களமாக விளங்கியது ஒதுக்கப்பட்ட கடற்கரைகள் தான். நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப் படுத்த நடைபயணம் சென்றபோது, நீளக் குச்சிகளாலும், ஈயக் குழாய்களாலும், சங்கிலியாலும் ஓர் வெள்ளை கும்பலால் தாக்கப் பட்டனர். அந்த தாக்குதல் செய்தி நிறுவனங்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிடும் போது "மிஸிஸிப்பி வரலாற்றில் நடந்த மிக மோசமான இனவாத கலகம்" எனப் பதிவு செய்தது.









ஒதுக்கப்பட்ட தண்ணீர் என்பது வெறும் தெற்கத்திய பாரம்பரியம் மட்டும் அல்ல. கலிஃபோர்னியாவில், "வெள்ளையர்க்கு மட்டுமே"யான உணவகங்களில், பள்ளிகளில், நீச்சல் வகுப்புகளில் மெக்ஸிக-அமெரிக்கர்களுக்கு இடமில்லை. 2010'ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்'கான நேர்காணலில், திரைப்பட இயக்குனர் சான்ரா ராபீ, ஆரஞ்சு நாடுகளின் சிவில் உரிமைக்களுக்கான வரலாற்றில் அவர் பார்த்த இடத்தில் இனப் பாகுபாடு எப்படி வளர்ந்து வருகிறது என விவரித்தார். "திங்கள்கிழமை மெக்ஸிகனுக்கானது", அவர் தொடர்ந்தார். "அதற்கு அடுத்த நாள் ஒட்டுமொத்த குளமும் வடித்து, சுத்தம் செய்யப் படும், எனவே அடுத்துவரும் வார நாட்களில் வெள்ளையர்கள் அதைப் பயன்படுத்த கூடியதாக இருக்கும்".



"போட்டியிட்ட தண்ணீர்: நீச்சல் குளங்களின் சமூக வரலாறு" எனும் தன் நூலில் ஜெஃப் விட்சே, ஒருங்கிணைக்கப் பட்ட நீச்சல் குளங்களால் உருவாக்கும் இனவாத உலைவுகள் இருவகையான பெரும் பதட்டத்தை உருவாகிறது: ஒன்று மாசு, மற்றொன்று இனக்கலப்பு என வாதிடுகிறார். முன்பெல்லாம் குளங்கள் வர்க்க வேறுபாடுகளால் தான் பிரிக்கப் பட்டிருந்தன, அங்கே வெள்ளை நடுத்தர வர்க்கத்தினர் புலம்பெயர் ஏழை ஐரோப்பியர்களுடன் நீச்சலை தவிர்த்தனர், அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் என்று காரணம் அளித்தனர். பெரும் புலம்பெயர்வுக்குப் பிந்தைய சூழலில், இந்த "நோய்" பயம் இனவாதமாக மாற்றப் பட்டது, இப்போது அனைத்து சமூக அடுக்குகளைச் சேர்ந்த வெள்ளையர்களும் கருப்பினத்தவருடன் சேர்ந்து நீச்சலிட்டால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பயந்தனர். பிட்ஸ்பர்க்கில் 1930'ஆம் ஆண்டு, நகர நீச்சல் குளத்தில் இருந்த கருப்பினத்தவர் மட்டும் வெளியேற்றப் பட்டு, அவர்கள் நோயற்றவற்றவர்கள் நிரூபிக்கும் வகையில் "நலச் சான்றிதழ்" சமர்பிக்குமாறு ஆணையிடப்பட்டனர். வெள்ளையர்களுக்கு அந்த விதி பின்பற்றப்படவில்லை.


மேலும் இதுகுறித்து தன்னுடைய அழுத்தமான கவலையாக திரு. வில்ட்சே குறிப்பிட்டது, நகரக் குளங்களில் பெண்களையும் ஆண்களையும் ஒன்றாக நீச்சலடிக்க அனுமதிப்பது பற்றியது. "பொதுவாக வடகத்திய வெள்ளையர்கள்" அவர் எழுதினார். "வெள்ளை பெண்களுடன் அத்தகைய நெருக்கமான மற்றும் சிற்றின்ப பொதுவெளியில் கருப்பின ஆண்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை கொண்டுள்ளதால் எதிர்ப்பார்கள்"

.

பால்டிமாரில், பிரவுன்.V கல்விவாரிய ஆட்சியான 1954'ல், நகர வழக்குறைஞர், நீச்சல் குளங்களில் இன, நிறப் பாகுபாடு என்பது தொடரவேண்டும், ஏனெனில் "நீச்சல், ஆண்களையும் பெண்களையும் உடல்சார்ந்த, நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் உள்ளன" என வாதிட்டார். நீதிபதி ரோசல் தாம்சென் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, நகரக் குளங்களில் பாகுபாட்டை தொடர அனுமதித்து உத்தரவிட்டார். அது குறித்து அவர் விளக்கமளிக்கையில், திரு. வில்ட்சே, நீச்சல் குளங்கள் அது வழங்கும் பயனடைவோரின் நேரிடை மற்றும் சரீர தொடர்புகளால், அது "கல்விக் கூடங்களை விட முக்கியமானது" என்றும் குறிப்பிட்டார்.


வெள்ளை மேலாதிக்கவாத கற்பனைகளில், இந்தக் கவலைகள் எல்லாம் ஒற்றை எண்ணம் கொண்டவை தான். அது, பாகுபாடற்ற இன நெருக்கம் என்பது மாசுத்தன்மையுடையது. இனக்கலப்பு என்பது பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

நான் கடற்கரை நகரத்தில் தான் வளர்ந்தேன், ஆனால் என்னால் நீந்த முடியாது. என் பெற்றோர் என்னை சிறுவயதிலேயே நீச்சல் வகுப்பில் சேர்த்தனர். ஆனால் நான் அதில் ஒவ்வொரு பகுதியையும் வெறுத்தேன்: நீருக்குள் தலைமூழ்குவது ஆகட்டும், க்ளோரினை முகர்வது ஆகட்டும், தலைமுடியை நினைத்து கொள்வது ஆகட்டும். தண்ணீர் எனக்கு எப்போதும் இயற்கையானதும், அன்னியமானது மாகவே இருந்திருக்கிறது, ஆபத்தான தாகவும், தவிர்க்க முடியததாகவும்.


என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- நீர்நிலைகள் தான்..அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றால், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த ஒதுக்கப்பட்ட ஜபக்கூட்டங்களில் தான் கலந்து கொண்டாள். அந்த ஒதுக்கப்பட்ட தேவாலயத்தின் மயானத்தில் வெள்ளை மற்றும் கருப்ப ஒதுக்கப்பட்ட பிரேதங்கள் சாம்பலாய் தூர்ந்து காய்ந்திருந்தது. என் தாயும் ஒதுக்கப்பட்ட கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள். கட்டி எழுப்பப்பட்ட கட்டுமானங்களை பிரிப்பது புரிந்து கொள்ள முடிகிறது„ ஆனால் நீரை, சமுத்திரத்தை நீங்கள் எப்படி தனியாக பிரித்து ஒதுக்குவீர்கள்?



“இது முட்டாள்தனமானது”, என் தாயார் சொல்வார். "ஏனெனில் தண்ணீர் கலக்கும். எந்த திசையில் செல்ல வேண்டுமென்று தண்ணீரால் முடிவு செய்ய முடியாது".


பல தசாப்தங்களாக, வெள்ளை இன நீந்துவோர் கருப்பின மக்களுடன் நீச்சல் குளத்தை பங்கிட்டுக் கொள்ள பயந்தனர், அது தங்களை நோய் பயக்கும் என்னும் கவலையை தெரிவித்தனர், இருந்தும் தங்களது உணவை சமைக்கவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதியாகவும் கருப்பினத்தவரைத் தான் பணி அமர்த்தினர். திரு.தர்மொண்ட் இனக்கலப்பை எதிர்த்து பேரணி சென்றார், ஆனால் அவரது மறைவு பிறகு தான் அவருக்கும் அவரது வீட்டில் வேலை செய்த கருப்பின பெண்ணிற்கும் உண்டான உறவில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.



ஸ்டார்ம் தர்மௌண்ட்'ன் மகள் (வயதான மூதாட்டி) 



 
இனவாதத்துக்கும், நீருக்கும் ஓர் விநோத தொடர்பு இருந்தே வந்திருக்கிறது, பின்னது இதன் தவிர்க்க முடியாத நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நீர் என்னை தொடுகிறது, பின் உன்னை தொடுகிறது.




"நியு யார்க் டைம்ஸில்" 10/06/15 புதனன்று வெளியான கட்டுரை.
New York Times c(Co-Ed) 10/06/15
(http://mobile.nytimes.com/2015/06/10/opinion/who-gets-to-go-to-the-pool.html?_r=1&referrer=)