30/12/16

நதியானவன் - வண்ணதாசன் உரை




எழுத்தாளர் ஜெயமோகனின் நாவலான விஷ்ணுபுரம் பேரில் அவரது வாசகர்களால் தமிழின் மூத்தப் படைப்பாளிகளை கவுரவிக்கும் விதமாக தொடங்கப் பட்டதுதான் விஷ்ணுபுரம் விருது. தொடர்ந்து ஆறு வருடமாக நடைபெற்று வரும் இவ்விழா வருடாவருடம் கோவையில் நடைபெற்று வருகிறது. இதுவரை இவ்விருதை ஆ.மாதவன், பூமணி, தெளிவத்தை ஜோசப், தேவதேவன், ஞாணக்கூத்தன், தேவதச்சன் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்தாண்டு வண்ணதாசனுக்கு இவ்விருது வழங்கப் பட்டுள்ளது. இம்மாதம் 24 மற்றும் 25- இரு நாட்கள் நிகழ்வு நடைபெற்றது. முதல் ஒன்றரை நாள் கலந்துரையாடலாகவும், ஞாயிறு மாலை விருது விழாவும் நடைபெற்றது. இறுதியாக விழாவில் அவரைப் பற்றிய ஆவணப்படம் "நதியின் பாடல்" திரையிடப்பட்டது. செல்வேந்திரன் இயக்கி இருந்தார். பவா செல்லத்துரை, நடிகர் நாசர், கண்ணட எழுத்தாளர் எச்.சிவப் பிரகாஷ், எழுத்தாளர் இரா.முருகன், மருத்துவர் கு.சிவராமன், ஜெயமோகன் ஆகியோர் விழாவில் முக்கிய உரையாற்றினர். இதை தொடர்ந்து வண்ணதாசன் தனது நெகிழ்ச்சியான நிறைவு உரையை நிகழ்த்தினார். விழாவில் அவரது சகப் படைப்பாளிகளால் "தாமிராபரணம்" தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.



விழாவில் பேசிய வண்ணதாசனின் முழுமையான உரை இங்கே



************************








பொதுவாக இப்படிதான் என்னுடைய பேச்சை நான் துவங்குவேன், எல்லோருக்கும் தான் மழை, எல்லோருக்கும் தான் வெய்யில், எல்லோருக்கும் தான் கலை, எல்லோருக்கும் தான் என் எழுத்து. அதையெல்லாம் விட இந்த விழாவின் துவக்கத்திலே எனைச் சார்ந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட அந்த நதி எல்லோருக்குமான நதி என்று நான் நினைக்கின்றேன். நான் அந்த ஆவணப்படத்தை பார்த்து இருக்க கூடாதோ என்று இப்போது நினைக்கின்றேன். அது என்னை சார்ந்ததால் நான் கலைந்து போக வில்லை, அது என்னுடைய நதியை சார்ந்ததால் நான் கலைந்து போனேன். நண்பர்களே நதிகள் எல்லாம் இப்பொழுது பாடுகின்றதா நண்பர்களே, அந்த ஆவணப்படத்திற்கு நதியின் பாடல் என்று படத்தை எடுத்த செல்வேந்திரன் தலைப்பு இட்டு இருக்கிறார். நதிகள் இப்போது பாடு கின்றனவா நண்பர்களே ? பாடலாம். பாடி கொண்டு இருக்கலாம். ஆனால் அது ஒருவேளை சோகப் பாடலாக இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது. அல்லது நாசர் அவர்கள் சொன்னது போல யாரிடமும் பாட முடியாத ஒரு பாட்டை இப்போது பாடி கொண்டு இருக்கிறதோ என்னுடைய தாமிரபரணி என்று நான் நினைத்து பார்க்கிறேன். அல்லது பவா செல்லதுரை சொன்னது போல நகர்ந்து நகர்ந்து அந்த நதி தொலைவில் தொலைவில் தொலைவில் போய் கொண்டு இருக்கிறதோ என்று நான் நினைக்கிறேன். நான் இந்த ஆவணபடத்தால் மிகவும் கலைந்து போய் இருக்கிறேன் நண்பர்களே. சொல்லப்போனால் காலையில் நடந்த கலந்துரையாடலில் இவ்வளவு கலகலப்பாக கலந்து கொள்வேன் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது இந்த அரங்கத்தில் நான் பேசும்போது அந்த கலகலப்பு இல்லையோ என்று கூட நான் நினைகின்றேன். சற்று அமைதியாக இரு, சற்று அமைதியாக இரு என்றே திரும்ப திரும்ப நான் எனக்குள் சொல்லி கொள்கிறேன். அமைதி ஒருவேளை ஒரு சொல்லோ என நான் எண்ணுகின்றேன் அல்லது எங்கோ நான் வாசித்தது போல அமைதி ஒரு குரல் என்று நான் நினைகின்றேன். அமைதி ஒரு சொல் எனில், அமைதி ஒரு குரல் எனில், நான் அந்த குரலை அந்த சொல்லை என்னிடம் வரும்படி அதே அமைதியிடம் நான் யாசிக்கிறேன்.



போதும். போதும். பேச்சு கூட அவசியமில்லை என்று தான் தோன்றுகிறது. என்னுடன் இருக்கிறவர்களை, என் எதிரில் இருப்பவர்களை சற்று அமைதியாக பார்த்துவிட்டு சென்று அமர்ந்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இந்த அமைதி என்ற குரல், இந்த அமைதி என்ற சொல் உங்களிடம் இருந்து யாசித்து நான் பெற்றது நண்பர்களே. அதை உங்களிடமே திருப்பி கொடுத்து விடலாமா என்று கூட நான் நினைக்கின்றேன். நான் இதுவரை இந்த ஐம்பத்தைந்து ஆண்டுகள் எழுதிய சொற்கள் எல்லா உங்களிடம் இருந்து பெற்றவை அல்லவா? நான் உள்ளபடியே கலைந்த மனதோடு சற்று அமைதியாக இந்த அரங்கத்தை பார்த்து கொண்டு இருக்கலாம் என்று நினைகின்றேன். இப்படி அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கும் கணத்தை நான் மிகவும் விரும்புகின்றேன். இந்த கணத்தில் எது என்னுடைய சொந்த கணம் என்று உணர்வதற்கு முன்னாலே அந்த கணம் என்னைவிட்டு நகர்ந்து போய்விடக் கூடாதே என்று நான் தவிக்கிறேன். ஒரு அமைதியான கணம் எனக்கு வாய்க்குமெனில் நான் ஏற்கனவே தயாரித்து எடுத்து கொண்ட வரிகளை சற்று விகாசப்படுத்தி அல்லது அந்த வரிகளின் மத்தியில் இருந்து -ஜெயமோகன் சொன்னது போல- சில மின்மினிகளை பறக்க விடலாம் என்று நான் நினைக்கின்றேன். அது தீயாக மேலெழும்பினால் எனக்கு மகிழ்ச்சி தான். ஜெயமோகன் அவர்களே எனக்கு மின்மினிப் பூச்சியாக பறக்க சம்மதம், எனக்கு தீயாக இருக்க சம்மதம். நான் இந்த மார்கழியிலே ஊர்ந்து கொண்டு இருக்கும் மரவட்டைகளைப் போலே நகர்ந்து கொண்டே இருக்கிறேன். ஏனெனில் என்னுடைய பழைய கவிதை ஒன்றில் நான் சொல்லி இருப்பது போல ஊர்ந்து கொண்டே இருப்பது தான் உயிரின் அழகு. முன்னமே சொன்னதை போல பொன் புள்ளிகள் இட்ட அந்த மரவட்டையாகத் தான் நான் இப்போது உங்கள் முன் நிற்கின்றேன் தோழர்களே.



நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பதைப் போல, “கலைக்க முடியாத ஒப்பனைகளில்” தான் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். அதில் வந்த “சபலம்” கதை தொடங்கி இப்போது சமீபத்திலே அமிர்தாவிலே எழுதி இருக்கிற கதை அல்லது அடுத்து நான் எழுதி இருக்கிற தொகுப்பு கதைகள் எல்லாம் என்னுடைய ஐம்பத்தைந்து ஆண்டுகளின் நகர்வை சொல்லி கொண்டே இருக்கிறது தோழர்களே. என் கதையில் வரும் விருத்தாவை போல நான் போய்க் கொண்டே இருப்பவன். நான் மட்டும் இல்லை தோழர்களே கலைஞன் அல்லது படைப்பாளி, இந்த அன்றாடத்தில் வாழ்பவன், போய்க் கொண்டே இருப்பவனாகத் தான் இருக்கிறான். நான் இன்னொரு கவிதையிலே எழுதி இருப்பேன், “நின்று கொண்டு இருப்பதை விட சென்று கொண்டு இருக்கலாம்”. நான் என்னுடைய இந்த எழுபதாவது வயதில், அல்லது விஷ்ணுபுரம் விருதுக்கு பிந்தைய நாட்களில் நின்று போகவே மாட்டேன் நண்பர்களே, சென்று கொண்டே தான் இருப்பேன். நான் சில வேளை புறக்கணிக்க பட்டவனாக இருந்து இருக்கலாம், எனக்கும் ஒன்றும் அதில் வருத்தம் இல்லை. ஆனால் வண்ணதாசனை தவிர்த்தாலும், வண்ணதாசனின் கதைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும். அப்பிடியே நான் இயங்கி கொண்டும் இருக்கிறேன் நண்பர்களே. ஒரு கலைஞன் செய்ய வேண்டிய காரியம் தன்னுடைய படைப்புகள் தவிர்க்க முடியாதவை என்பதை வாசிப்பவன் மனதில் ஏற்படுத்தி விட்டால், போதுமானது. அறிந்திருப்பீர்கள், கடந்த டிசம்பர் 20ம் தேதி சாகித்ய அகாடமி விருது எனக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றிருந்து என் கண்கள் கூசும் படியான வெளிச்சங்கள் என் மீது பட்டு என்னை எதோ செய்து கொண்டு இருந்தது. அந்த சாகித்ய அகாடமி விருது கொண்டாட்டங்களில் இருந்து, அந்த வெளிச்சத்தில் இருந்து வெளியேற விரும்பினேன். வெளியே வந்து இருக்கிறேன், எவ்வளவு அழகான வெளியேற்றம் தெரியுமா அது. அந்த 20 மற்றும் 21ம் நாட்களில் இருந்து வெளியேறி நான் இப்போது இந்த விஷ்ணுபுரம் விருது நாட்களான 24 மற்றும் 25ம் நாட்களில் நுணுக்கமான வாசகர்கள் நிரம்பிய இந்த அரங்கில் நான் பிரவேசித்துக் கொண்டேன் நண்பர்களே. அது மகத்தான வெளியேற்றம் என்றால் இது மகத்தான நுழைவு நண்பர்களே. இந்த நிகழ்வானது நிகழ்ச்சி நிரலான இந்த இரண்டு நாட்கள் நடந்து கொண்டு இருந்தாலும், ஜெயமோகன் மற்றும் அவரது அன்பர்கள் எப்போது எங்கள் பெருமாள்புரம் வீட்டுக்கு தெரிவிக்க வந்தார்களோ அப்போதே இந்த விருது எனக்கு வழங்கப் பட்டுவிட்டது நண்பர்களே. இப்போது இது வெறும் மீட்டுநிகழ்த்துதல் தான்.



முன்பெல்லாம் ஆற்றின் மேல பறப்பது போலே எனக்கு ஒரு கனவு வரும் நண்பர்களே. ஆறு கீழ ஓடி கொண்டிருக்கும் அதற்கு நேர் மேல நான் பறந்து கொண்டு இருப்பேன். அது கலைஞனுக்கு வரக்கூடிய ஒரு கனவு தான் என்று நண்பர்கள் பின்னல் சொன்னார்கள். திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்த அந்த கனவு தொலைந்து போனது நண்பர்களே. ஒரு கனவு தொலைவது என்பது எவ்வளவு துக்ககரமான காரியம் என்பதை படைப்பாளிகள் மட்டுமே அறிய முடியும். நாங்கள் கனவை உருவாக்குவதற்காகவும், கனவுகளை காப்பதற்காகவும், அந்த கனவின் அழகு நிஜத்தில் வந்து புழங்குவதற்குமே திரும்ப திரும்ப எழுதிக் கொண்டு இருக்கிறோம். அசைந்து அசைந்து ஆடி கொண்டு இருகிறோம் அல்லது எங்களது திரைச்சீலையிலே மிகுந்த வண்ணங்களை குழைந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் ஆற்றின் மேல் பறக்கற அந்த தொலைந்துபோன கனவு இந்த விஷ்ணுபுரம் மேடையில் இப்போது நனவாகி இருக்கிறது தோழர்களே. மறுபடியும் ஒரு ஆற்றின் மேல் பறந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு கதையில் எழுதி இருப்பேன், விலாப்புறத்தில் சிறகுகள் முளைகின்றன என்று, சொல்லப்போனால் இப்போது என் முழு தேகத்திலும் சிறகுகள் முளைத்தது போல நிற்கிறேன். இப்போது படைப்பாளிகள் மத்தியில் எனக்கு முன் விருது வாங்கிய படைப்பாளிகள் மத்தியில் வாங்கிய இவ்விருது என் சிறகுகளை விரிக்க செய்து இருக்கிறது. அந்த வகையில் விஷ்ணுபுரம் வழங்கிய விருதால் பழைய கனவுகளை மீட்டு கொண்டவனாக இருக்கிறேன்.



நான் ஆற்றின் மீது பறக்கிறவன் இல்லையா, அதுவும் ஆறு பாயும் ஊர்க்காரன் இல்லையா, ஆறு என்பது ஈரம் சார்ந்தது அல்லவா? என்னுடைய வாழ்வின், என்னுடைய படைப்பின் அடிநாதம் ஈரத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும் தோழர்களே. மனிதனுக்கு கண்ணீர் இருக்கும் வரை, மனிதன் வேர்வை கசியும் வரை அவன் நதியாக இல்லை என்றாலும் எப்படி ஈரம் ஆற்று போனவன் ஆவான். நான் ஈரமாக இருக்கிறேன் நண்பர்களே. என்னுடைய கதைகளும் ஈரமாகவே இருக்கும். வாழ்க்கை வரண்டது தான், ஆனால் நிலத்தடி நீராக நாங்கள் எல்லாம் பாய்ந்து கொண்டே இருப்போம் நண்பர்களே. ஜெயமோகன் இந்த விருதை அறிவிக்கும் போது என்னை பற்றி எழுதிய சிறு பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஈரம் சார்ந்தது என்பதால் அதை பகிர்கிறேன், “உள்ளே பெருமழைக்கு சற்றே நலுங்கும் கிணற்று நீரை போல அந்தரங்ககளை மட்டும் எழுதும் எழுத்தாளர்” என்கிறார் ஜெயமோகன். இதேபோல விகடன் தடம் இதழில் மனுஷ்ய புத்திரன் என்னை பற்றி கூறி இருந்ததையும் சரியான கணிப்பாக பார்கிறேன். அவர் சொல்கிறார், “மணலில் நிதானமாக இறங்கி செல்லும் தண்ணீர் போன்ற கவிதைகளை எழுதுகிறவர்” என்று. நண்பர்களே எனக்குச் சற்றே நலுங்கும் கிணற்ற்று நீராக இருக்க சம்மதம், மணலில் நிதானமாக இறங்கும் தண்ணீராக இருக்கச் சம்மதம். ஒரு கவிதை தொகுப்பின் இறுதி வரியிலே, “இன்னும் தீ தான் தெய்வம், நீர் தான் வாழ்வு” என நான் எழுதி இருப்பேன். அதை மிகச்சரியாக ஜெயமோகன் அவர்களும் மனுஷ்ய புத்திரன் அவர்களும் தங்களது வரையறையில் சொல்லி இருக்கிறார்கள் என்றே சொல்வேன். என்னுடைய எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால், என்னுடைய கதைகளில்யில் ஈரம் என்றொரு கதை உண்டு, அதில் லோகமதினி என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. அவளுடைய நீல விழித்திரை ஈரம் நிறைந்து இருக்கும். என்னுடைய கதைகள் லோகமதினியின் விழித்திரைப் போல இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நண்பர்களே. உங்கள் எல்லோருக்கும் நிலத்தடி நீரின் முதல் துளி எவ்வளவு குளிர்ந்து இருக்கும் என்று தெரியும். அந்த கதையில் வரும் அவளின் கணவன் பக்கத்து வீட்டில் நீருக்காக தோண்டி இருக்கும் குழியை பார்த்தபடி இருப்பான். ஏனெனில் அவனுக்கு விவசாயம் பொய்த்து போய், கிணறு வெட்டியும் நீர்வராத நிலையில், பக்கத்து வீட்டை பார்த்த படி இருப்பான். அப்படி இருந்த அவன் திடிரென அந்த குழியில் நிலத்தடி நீர் பீச்சி அடிப்பதை கண்டவுடன் சுற்றுசுவரை தாண்டி குதித்து அந்த கலங்களான நீரை அள்ளி அள்ளிக் குடிப்பான். அந்த வீட்டு அம்மா, “எதுக்கு கலங்கள் தண்ணியை குடிக்கறிங்க” என்பாள். இவன் அந்த தண்ணியை கையில் பிடித்தவாறு “இது சீம்பாலுங்களா இல்லை அமிர்தம்ங்களா” என்று சொல்லிக் கைகளில் ஏந்தி கொள்வான். இதற்காக ஒரு சுற்றுச்சுவரை அல்ல இன்னும் எதனை சுற்றுச்சுவரை வேண்டுமானாலும் தாண்ட தயாராக இருக்கிறேன். ஏன் என்றால் லோக மதினி என்னுடைய வீட்டிலே ஈரக் கண்ணுடன் எப்போதும் இருப்பால். என்னுடைய கதைகள் லோகமதினியின் ஈரக் கண்கள் போல இருந்து விட்டால் போதுமா? இலக்கியத்தில் அல்லது கலையில் போதும் என்பது உண்டா? போதும் என்றால் கலை அந்த இடத்திலேயே நின்று விடுகிறது என்று அர்த்தம்.



என்னுடைய “நடுவை” கதையை படித்தீர்கள் என்றால் அதில் ஒரு கிழவர் வருவார். 1995ம் காலகட்டம், எங்கு பார்த்தாலும் பார்த்தீனியம் முளைத்து இருக்கும். எங்கள் வீட்டுக்கு அருகே புழங்கி கொண்டிருந்த அந்த கிழவர் எங்கள் வீட்டின் அருகே பெருகியிருந்த பார்த்தீனியச் செடிகளை அவரே அகற்ற ஆரம்பித்தார். என்னுடைய பிள்ளைகள் வீட்டில் இருந்து அந்த கிழவரை பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வயது முதிர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உண்டாகும் நெருக்கம் பெற்றோரிடம் கூட உண்டாவது இல்லை நண்பர்களே. அவ்வளவு அலாதியான உறவது. “குட்டி இங்க வா, இதை அங்க வை” என குழந்தைகளை கூப்பிட்டு வேலை வாங்கி, மாலை பெரும்பாலான பார்தீனிய செடிகள் அகற்றப்பட்டு இருந்தது. முடிந்தவுடன் பிள்ளைகளிடம் “ஒரு வாலில தண்ணி கொண்டு வா” என்று சொன்னார். பிள்ளைகளால் தூக்க முடியாது அல்லவா. உடனே தாயார் கொண்டு வந்து வைக்கிறார். அப்போது என் வீட்டு சுவர் ஓரத்தில் தானாக வளர்ந்து இருந்த ஒரு செடியின் நாற்றை பிடுங்கி என் மகனின் கையில் கொடுத்து நடச் சொன்னார். அதற்கு அந்த மனிதர் சொன்னார் நண்பர்களே, “ஒன்ன பிடுங்குனா ஒன்ன நடணும் இல்லையா”. நான் எழுதுல சாமி, நான் எழுதுல. அந்த பெரியவர் சொல்லிட்டு போய்ட்டார். அந்த சிறுகதையின் கடைசி வரி இப்படி முடியும், “ஒன்ன பிடுங்குனா ஒன்ன நடணும் இல்லையா?” என் நண்பர் கந்தர்வன் கொண்டாடிய கதை இது, அவரை போல படைப்புகளை கொண்டாடிய இன்னொருவரை இதுவரை பார்த்தது இல்லை நண்பர்களே.




நடுகை கதையில உள்ள அந்த கிழவனை போல இருந்தால் போதுமா? எனது மற்ற கதை மாந்தர்களை போல இருக்க வேண்டாமா? நீங்கள் “எண்கள் தேவையற்ற ஒரு உரையாடல்” என்னும் விகடன் கதையை படித்திருக்க கூடும். ஏன் என்றால் பெரும்பாலான வாசர்கள் பார்வையில் இருந்த ஒரு கதை அது. அந்த கதையில் வரும் ஒருவன் செல்பேசியில் உள்ள எண்களை அழிக்க மனமின்றி தனது இறந்த சிநேகிதியுடன் உரையாட விரும்புவதைப் போல என் கதைகள் இருக்க விரும்புகிறேன் நண்பர்களே. அல்லது என மிகச் சமீபத்து கதையான "இன்னொரு அர்த்தத்தின்" சந்தானம் போல, உறவுகளின் ஆழத்தை, ஒவ்வொரு சொல்லுக்கும் இருக்கும் அர்த்தத்தை என் கதைகள் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் நண்பர்களே.



அநேகமாக என்னுடைய உரையின் இறுதி கட்டத்துக்கு வந்து விடலாம் என நினைக்கிறேன். சம்பிரதாயமாக ஆனால் மனப்பூர்வமாக நான் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கியிருக்கிற இந்த விருதுக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.மாதவன், தெளிவத்தை ஜோசப், தேவதேவன், தேவதச்சன், பூமணி, ஞாணக்கூத்தன் இவர்களுடன் அல்லது இவர்களுக்கு மத்தியில் நானும் ஒருவனாக உங்களுடன் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நண்பர்களே. ஜெயமோகன் இணைய தளத்தில் விஷ்ணுபுரம் விருது சார்ந்து கடிதம் எழுதியிருந்த அத்துனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயமோகன் என்னிடம் கூட சொன்னார் எழுதுவதை நிறுத்த சொல்லி விடலாமா என்று. அந்தளவிற்கு கடிதங்கள் வந்தபடி இருந்துள்ளன. அதில் ஒரு கடிதமான எஸ்.செல்வராஜின் கடிதத்தை வாசித்தீர்களா வண்ணதாசன், எனக் கேட்டார். நான் அவரின் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நண்பர்களே எல்லா படைப்பாளிக்கும் அப்படி ஒரு செல்வராஜ் தேவை என்றே நினைக்கிறேன். இந்த கூட்டத்தின் மத்தியிலே நிச்சயமாக அந்த எஸ.செல்வராஜ் இருக்க மாட்டார். ஏனென்றால் அந்தக் கடிதத்திலேயே அவர் சொல்கிறார் "நான் உங்களுக்கு அறிமுகமாக மாட்டேன், இப்படியே இருந்து கொண்டு செத்துப் போவேன்" என்கிறார். ஏன் செல்வராஜ் இப்படியே இருங்கள் ஆனால் என்னுடன் சேர்ந்து வாழ கூடாதா. செல்வராஜ் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு நாடாச்சி உங்களிடம் வந்து "எந்த ஊரு நீ, எத்தன புள்ளைங்க?" எனக் கேட்டார் என்று, அவள் கை நரம்புகள் புடைத்து இருந்தன என்று. ஏன் செவ்வராஜ், என் கதைகள் எல்லாம் படித்திருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியவில்லையா உங்களுடன் ரயிலில் வந்த அந்த நாடாச்சி நான்தானென்று. என்னுடைய கைகளில் நரம்புகள் புடைத்ததை நீங்கள் கவனிக்க வில்லையா. நான் தான் அந்த மூதாட்டி. அது ஜான் சுந்தர் சொல்வது போல அது நமது சொந்த ரயில். நான் உங்களுடனே இருக்கிறேன் செல்வராஜ், அறிந்து கொள்ளுங்கள்.



இறுதியாக மறுபடியும் ஆவணப்படத்திற்கு வருகிறேன். ஏனென்றால் துவங்கிய இடத்தில் முடியும் முடிகிற இடத்தில் துவங்கும் அல்லவா. இந்த டிசம்பர் மாதத்திற்கு அல்லது இந்த கிருஸ்துமஸிற்கு ஏற்ற, மிகச்சிறிய நான் மிக நல்லதாக உணர்கிற அந்த கவிதையை செல்வந்திரன் ஆவணப்படத்தின் துவக்கமாக வைத்து இருந்தார்.



"என் தந்தை தச்சன் இல்லை


எழுதுகிறவன்



எனக்கு மரச்சிலுவை அல்ல



காகிதச் சிலுவை



உயிர்தெழுதல் மூன்றாம் நாளல்ல



அன்றாடம்"



ஆம் நண்பர்களே, இந்த விருதால் நான் இன்று உயிர்தெழுந்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய காகிதச் சிலுவையை நாற்காலியில் அமர்ந்த உடனே அதில் என்னை அறைந்து கொள்பவனாகவும் இருக்கிறேன்.



நன்றி தோழர்களே!

14/12/16

பொம்மையானவள்



என் பெண்கள் என் பொம்மைகள்

பொத்தல் நிலத்தின்

நிவாரணியாக

பொழியும் மழைபோல

என் வடுக்களின்

இருண்மைகளின்

மீட்சிக்கான

கடைசிப் புகலிடங்கள்.

ஒரு வகையில் தாதிக்கள்.




அவைகளை வைத்து நான்

விளையாடுவேன்

தூக்கியெறிவேன், பூட்டி வைப்பேன்

தண்ணீரில் மிதக்கச் செய்வேன்,

தொலைத்துவிட்டால் அழுவேன் ஒரு

குழந்தை போல.

பிள்ளை குணத்தின் சாயலென கடிந்தாலும்

யாருடனும் பகிரத் துணியமாட்டேன்

என் பொம்மைகளை.

ஏனெனில்

இங்கே

பொம்மைகளானவர்கள் வெறும்

பொம்மைகள் அல்லவே