20/4/14

குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?- பயங்கரவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலம்; தெஹல்கா புலனாய்வின் முழுத் தொகுப்பு



 தோழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம், குறிப்பாக இன்றைய சூழலில்.

நேற்று நடுநிசியில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன், காலை வரை அதன் தாக்கம், வார்த்தகைகளின் வீரியம் என்னிலிருந்து மறையவில்லை. என்றும் மறையாது. 


‘நம் காலத்தில் நிகழ்ந்தேறிய ஒரு கொடூர நிகழ்வு, கோத்ரா இனப்படுகொலையைச் செய்தவர்களே பெருமிதத்துடன் அளித்த வாக்குமூலங்களின் பதிவே இந்நூல்’
தெகல்கா புலனாய்வின் முழு தொகுப்பு.

புத்தகத்தில் வர்ணிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்து நினைத்து நான் தூக்கத்தையே தொலைத்தேன்...

குறிப்பாக கவுசிர் பானு , அவரை நினைத்த பொழுதில் கண்ணீர் துளிர்த்தது. மனம் வலித்தது.

நிறைமாத கர்ப்பிணி, அவர் அனுபவித்த அந்த வலியை நினைக்கக் கூட மனம் மறுக்கிறது, பதைபதைக்கிறது.
இந்த நிகழ்வில், நண்பர்களாலேயே வேட்டையாடப்பட்டவர் பந்தூக்வாலா, வதோதராவில் வசிக்கும் பேராசிரியரான இவர், தனது நண்பர்களால் மூர்க்கமாக தாக்கப்பட்டார், அருகாமையில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தால் பாத்ரூமில் மறைத்துவைக்கப்பட்டு காப்பாற்றப்பற்ற இவர் பின்னாட்களில் அந்த கொடூர நிகழ்வை இவ்வாறு நினைவு கூர்கிறார், ‘ஓநாய்கள் துரத்த ஓடும் முயலைப் போல நான் ஊரை விட்டே வெளியேறினேன்’.

என்னால் மறக்கமுடியாத பெயர்களில் சிலர், நசீமா பானு, இஷான் ஜாப்ரி, காசிம் பாய்....இன்னும் ஏராளம்.
இவர்கள் யாவரும் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையில் பலியானவர்கள். கொடூரமாய் கொல்லப்பட்டவர்கள். காவி பயங்கரவாதிகளால் வேட்டையாடப்பட்டவர்கள். 

வரலாற்றின் கருப்பு மையால் குறிக்கப்பட்ட பிப்ரவரி28,2002 நாளின் அழியா சான்றுகள் இவர்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் மரண ஓலம், காற்றில் கலந்து ஒலித்தவாறு, இன்றும் குஜராத்தை பீடித்தே உள்ளது. சமூகத்தாலும், பொருளாதாரத்தாலும் ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டிருந்த அம்மக்கள், திட்டமிட்டு நசுக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டனர்.
மனித சமூகமே வெட்கித் தலை குனியும் வகையில், ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்ட அம்மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் அந்த வலி, ஆறாது, நிச்சயம் என்றும் ஓயாது...
மறுக்கப்பட்ட நீதியின் வலி என்றும் மறையாது.






இந்து பயங்கரவாதிகள், "பரிவார்" என அழைக்கப்படும் காவி பயங்கரவாதிகள், நரோடியா பாட்டியா, குல்பர்க் கூட்டுறவு குடியிருப்பு, மோடாசா, தன்சுரா என எல்லா இடங்களிலும் எதிர்படும் அனைத்து இஸ்லாமியர்களையும் தயவுதாட்சன்யமின்றி வெட்டி, எரித்துக் கொன்றனர்.
அடி, கொல்லு, வெட்டு, எரி என அரசும், காவல்துறையும் நாள்நெடுகவும் கொலைகாரர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிக் கொண்டே இருந்தன. அதில் முக்கியமானவர் மாயாபென் கோட்னானி.

இவை அனைத்தையும் விட தலையாயது எனின் அது நரேந்திரமோடியின் நேரடி ஊக்குவிப்பு தான்.

"நரேந்திர பாய் எங்களோடு இல்லையென்றால் எங்களால் இவ்வளவு பெரிய படுகொலையை நிகழ்த்தியிருக்க முடியாது" என்கிறான் முதன்மையான குற்றவாளி பாபு பஜ்ரங்கி. காவல்துறையும், நீதித்துறையும் மாறிமாறி கைகோர்த்துக் கொண்டு குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்தேறவும், அதனை நிகழ்த்தியவர்களை காப்பாற்றவும் பாடுபட்டது. இன்றைக்கு பெருமளவில் அதில் வெற்றியும் கண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிணையில் உள்ளனர், ஆம், இனப்படுகொலை நிகழத்தியோர் ஆசுவாசமாக சுதந்திரக் காற்றை சுவாசித்து வரும் ஒரு மயான பூமியே குஜராத்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான இப்புத்தகத்தின் மூன்றாவது பதிப்பு இது. இதை எளிய தமிழில் நமக்களித்தவர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்கள்.
வாசல் பதிப்பகம், தலித் முரசு இணைந்து வெளியிட்டுள்ளது.

தெகல்காவின் சார்பாக ஆறு மாத காலம் கடும் பயணம் மேற்கொண்டு, பல இன்னல்களைத் தாண்டி குஜராத்தின் உண்மைநிலையை உலகுக்கு வெளிக்கொணரந்த ஆஷிஷ் கேத்தன், இதற்கான ஆலோசனையும், உதவியும் புரிந்த தெகல்காவின் புலனாய்வு குழு ஆசிரியர் ஹரிந்திர பவேஜா, திரட்டப்பட்ட உண்மைகளை துணிச்சலாக சிறப்பு இதழாக வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்த தருண் தேஜ்பால்...இவர்கள் மூவரும் வரலாற்றில் தாங்கள் செய்த பணிக்கு என்றும் மதிக்கப்படுவர். தெகல்காவின் இப்பணி பரவலாக அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் இருள் சூழ்ந்த வாழ்வில் நம்பிக்கையின் எனும் வெளிச்சத்தின் சிறு கீற்றாய் வந்ததே இப்புத்தகம்.

இனப்படுகொலை குற்றவாளியான நரேந்திரமோடி இன்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர்....இது தான் இன்றைய அவலநிலை.
இந்த அவலமான காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவும் இருக்கிறோம். 






இயல்பாகவே எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி, எதற்காக பாஜக இந்த தேர்தலுக்காக இத்தனை கோடி ரூபாய்களை செலவு செய்கிறது.... இதற்கான எளிய விடை, அவர்கள் வளர்ச்சி எனும் போர்வையில் மறைக்க நினைப்பது ஒரு சாதாரண சிறு குற்றத்தை அல்ல, இனப்படுகொலையை!
இந்த புத்தகத்தின் மறுபதிப்பை மீண்டும் கொண்டுவந்தன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றை இளைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள பெரிதும் உதவிய, அண்ணன் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.