புதுமைப்பித்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமைப்பித்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5/4/20

புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதைக் குறித்த ஒரு வாதம்- கட்டுரை

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).



                     சிறுகதைக்கான இணைப்பு 


இந்த பதிவை எழுதுவதற்கு முன் சற்றேறக்குறைய ஒரு மணி நேரமாக இந்தியாவில் நடந்த முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சுபகுணராஜன் எழுதிய பழைய வலைப்பதிவை தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தப்பாடில்லை. நினைவில் இருந்ததிலிருந்து குறிப்பிட வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் ஜாதிய படிநிலை சார்ந்து மக்கள் பெரும்பிரிவாக முதன்முதலாக வகுக்கப்பட்டதை குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டின் அரசியல் பண்பாட்டு தனித்தன்மைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஒரு சிறிய நிலப்பரப்பில்- வரலாறு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சின்னங்களுக்கு அப்பாற்பட்டு- பல்வேறு சமூக குழுக்கள் "ஆண்ட பரம்பரை" பதாகையை கோருவதையும், சிலர் அதற்கு ஏகபோகம் கோருவதையும் எப்படி புரிந்துகொள்வது? சமூக குழுக்களின் அரசியல் கோரலால், போட்டியால், அதிகாரம் தமிழகத்தில் சமூகப் பரவலாக்கம் கண்டுள்ளது. வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஆட்சியில் இருந்த மு.கருணாநிதி ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் போது, பிரத்யேக ஒதுக்கீடாக இல்லாமல் "மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்" எனும் புதிய வகைப்பாட்டில் பிற சமூகங்களையும் இணைத்தே அமலாக்கினார். ஒரு சமூகம் மற்ற சமூகங்கள் மீது நிகழ்த்தும் "சமூக நீதி சூறையாடல்" எனும் சம கால சொல்லாடல்கள் எதுவும் எழுவதற்கு  முன்பாகவே கருணாநிதியின் தேர்ந்த அரசியல் பிரக்ஞை அவரை மேற்சொன்ன விஷயத்தில் வழிநடத்தியுள்ளதாக புரிந்து கொள்ளலாம். இந்த சமூக நீதி சார்ந்த செயல்முறை அரசியல் லாவகம் (Dexterity), களத்தில் இருந்து அல்லாது வேறு எங்கிருந்து அவர் கிடைக்கப் பெற்றிருக்க முடியும்? சமூகத்தின் விளிம்புநிலையில் வைக்கப்பட்டு இருந்த இசை வேளாளர் சமூகத்தில் இருந்து வந்த கருணாநிதியின் செயல்திறன் இவ்வகையான நுணுக்கங்களுடன் அணுகக்கூடியதென்றால், தமிழகத்தில் பரந்து விரிந்த, ஆனால் பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தில் இருந்து வந்த காமராஜரின் அரசியல் அதிகார பரவலாக்க சாத்தியப்பாடு என்னவாக இருந்தது?       






கடந்த ஒரு நூற்றாண்டில் நாடார்கள் குறித்த (அதிகாரப்பூர்வ அல்லது வேறு ஏதேனும்) பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த எனது அறிவின் போதாமையோடே புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதையை அணுக வேண்டியுள்ளது. மிகச் சிறியதாக கதை அமைந்திருப்பினும், நீதிக்கதை வடிவில், அது வைக்கும் விமர்சனம் கூரியது. கதையின் ஆரம்பத்திலேயே "கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காக பாடு பட்டதனால், உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்து இருக்கும்", தேவ இறக்க நாடார் அறிமுகமாகிறார். மேஜிஸ்ட்ரேட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவர் தன்முன் கூன்றிலேற்றப்படும் நபர்மீது திட்டவட்டமாக கட்டமைக்கப்பட்ட நீதியமைப்பின் சார்பில்  தீர்ப்பளிப்பவராக உள்ளார். நீதி, பங்கேர்ப்பின் வழியே வழங்குதல் மற்றும் பகிருதல், குறித்த முழுமையான சிந்தனை உதிக்காத, குறுகியே கருதுகோள்களின் வழியே "நீதி அளிக்கப்பட்டு" வந்த காலமது. நீதி என்பது பெற்றுக்கொள்வோரைக் கவனத்தில் எடுத்து கொள்ளாது,  வழங்குவோரின் அற-நிலைப் பாடுகளிலிருந்தே பாவிக்கப்பட்டு வந்த காலம் அது. அந்தக் காலகட்ட சமூகத்தின், மேனிலையாக்கதின் குறுஞ்சித்தரிப்பாக நிகழ்கிறது கதையில் வரும் தேவநாடாரின் பகுதி. 







நாடார்கள் என்றவுடன் பின்னிணைப்பாக கிறிஸ்தவம் என்ற பிம்பம் எப்போது உருவானது என தெரியவில்லை. ஆனால் நான் முதல் முதலாக நாடார்கள் குறித்து சமூகவியல் தளத்தில் தெரிந்து கொண்டது தமிழ் நாட்டில் கிறிஸ்துவ மதத்தினர் மத்தியில் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு குறித்த ஆய்விலிருந்து தான். கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்களில் தமிழகத்தில் கணிசமான பகுதியினர் நாடார்கள். கேரளத்தில்- ஒரு சில பத்தாண்டுகள் முன்வரையிலும்- இன்னும் மோசமான நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அங்கே கிறிஸ்துவமும் வாய்ப்புக்களுக்கான வாயிற்கதவாக அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு மதத்தில் இருந்து -படிநிலை பாகுபாடு, ஒடுக்குமுறை, வாய்ப்பு மறுக்கப்படுதல் ஆகிய காரணங்களால்- இன்னொரு மதத்திற்கு இடம் பெயர்வதால் எத்தகைய நேர்மறை விளைவுகளை, வளர்ச்சியை எதிர்கொள்ளலாம் எனும் வாதத்திற்கு நாடார்களின் தரப்பு வலு சேர்க்கிறது. சமூக-பண்பாட்டு மூலதனத்தின் (social capital) வளர்ச்சியும், பெருக்கமும், பகிர்தலும் ஒட்டுமொத்த சமூகத்தையும் (community) பெருமளவில் சென்று சேர்ந்துள்ளதை கவனிக்க முடிகிறது. இந்திய சமூகத்தின் அடிப்படை பண்பான குறுகிய-வட்ட விசுவாசத்தை விட்டு வெளியேறி பரந்துபட்ட அடையாளத்தினுள் பொருத்திக்கொள்ளும் போக்கு நாடார்களின் சமூக விரிவாக்கம் குறித்த விவாதத்திலும் காண முடிகிறது. ஆனால் இத்தருணத்தில் தமிழகதின் முக்கியமான அரசியல் பங்கேற்ப்பாளரான தொ.திருமாவளவன் 2016ம் ஆண்டு, தலித் மக்களின் அரசியல் போராட்டம் குறித்து ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தலித் மக்களின் பெரும் எண்ணிக்கையிலான மதமாறுதலால், நம்நாட்டின் வாக்கு அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பின் பின்னணியில், எவ்வாறு தங்களது அதிகார பேரத்தைக் குறைத்துக் கொண்டார்கள் எனப் பேசினார். அதே வேளையில், மதம் மாறிய தலித் மக்கள் போதிய சமூக அங்கீகாரத்தை பெற முடியாது "சிறுபான்மை" எனும் வட்டத்தினுள் சுருங்கி விடுவதைக் குறித்தும், தற்போதைய ஒன்றிய அரசின் வெறுப்பு அரசியலுக்கு இலக்காகுவதைக் குறித்தும் அங்கலாய்த்துக் கொண்டது பல காலம் நடைபெற்று வந்த இந்த விவாதத்தில் முக்கியமான இடையீடு.     







கதையின் மையத்தில் பால்ராஜின் விளித்தலான "விரியன் பாம்பு குட்டிகளே" என்பது கேலிக்குரிய உருவகமாக தெரிந்தாலும், அக்காலக்கட்டத்தில் ஆழ பதிந்து இருக்கும் ஒரு சாராரைக் குறித்த தப்பெண்ணத்தை (prejudice) வெளிப்படுத்துவதாகவே  உள்ளன. சுதந்திரத்திற்குமுன்பான காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் (கோட்டை- கொத்தளம் எனும் ஸ்தூல நிலை தாண்டி)  மட்டுமின்றி அவர்களது மதிப்பீடுகளும்  ஆளுமை செலுத்தி வந்தன. குதிரை என்பது இங்கே ஆடம்பரத்தின், ஆளுகையின் சின்னமாக மட்டுமல்லாது சாதாரண மக்களின் மாண்பை விடவும் ஒரு படி மேலானதெனும் படிமமாக  கதையினுள் உருக்கொள்கிறது. மேனிலையாக்கம் எனும் ஏணியில் ஏறி அமர்ந்திருப்பினும், போலச்செய்தல் எனும் சமூக கடமையின் பாற்பட்டு கடுமையான தண்டனையை குற்றவாளிக்கு விதித்து, வீடு திரும்பியதும் "பரலோகத்தின் தேவ பிதாவை அனைவருக்குமான மன்னிப்பிற்காக" யாசிக்கிறார் தேவ இறக்கம் நாடார். எளிமையான உருவக சித்தரிப்புகளுடன், விமர்சன சுளிப்புடன் கதையை, சமூகத்தின் இருவேறு தளத்தின் நிகழ்வை ஒப்பீட்டு முடிக்கிறார் புதுமைப்பித்தன்.    

27/3/20

புதுமைப்பித்தனின் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" குறித்த ஒரு வாதம்

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).  

                 சிறுகதையை வாசிக்க தொடுக  



ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் சதுர்த்தியன்று சமூக வலைத்தளத்தில் அதன் பரவலாக்கம் குறித்த அழகியல் பூர்வமான காரணத்தை நான் பகிர்ந்ததால், நண்பர்கள் சிலர் கடிந்து கொண்டனர். பிள்ளையார், அதன் வடிவிலாகட்டும், உருவகமாகட்டும் சிறந்த படைப்பிற்குரிய பல அம்சங்களை கொண்டுள்ளது. ஏனோ அதன் மீதான வசீகரம் சிறு வயது முதல் இருந்து வந்ததற்கான காரணம் மெல்ல மெல்ல சமீப காலங்களில் தான் புலப்படுகிறது. யானைத் தலையும், மனித உடலும், சில இடங்களில் விகார தோற்றமும் பல இடங்களில் காட்சிபடுத்தப்படும் பாலகன் தோற்றமும் என கற்பனை வளமும் மரபின் வலிமையையும் ஒரு சேரத்தக்க இயங்கும் வகையில் அவ்வுருவம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் விசாலத்தின், மாண்பின், அதன் வலிமையின் சான்றாக பொருட் கொள்ளத்தக்கதாக உள்ளது, யானை. ஒரு சமூகமாக கூட்டாக இயங்குவதிலும், அடிப்படை தேவைகளுக்காக பல தொலைவு பயணம் செய்வத்திலுமென ஆதி மனிதனுக்கான பல படிப்பினைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சுருக்கமாக, இயற்கையின், அதன் படைபாக்கத்தின் அதிசயிக்கத்தக்க பிரம்மாண்ட உருவகம். மனிதனுக்கு விளங்கிக்கொள்ள முடியாத வியப்பாக இயற்கை எப்படி இருந்ததோ அதே போன்றதொரு விளைவை தான் யானையும் உண்டாக்கி இருக்கும் என விழைகிறேன். அதனைக் கைகொண்டால் இயற்கையின் ஒரு பேருருவை கைகொண்டதன் மகிழ்வை, பெரும் ஆற்றலை ஆட்கொண்டதன் உணர்வை மனிதன் அடையப்பெருவதோடு, தனது ஆதிக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதிலும் ஆர்வம் பெறுவான். அவ்வாறான கைகொள்ளளின் ஆதார உருவகச் சான்று தான் பிள்ளையாரா? இன்றுவரை கோயில்களில் பல்வேறு காரணங்களுக்காக யானைகளை இருத்தி வைத்து இருக்கும் வழக்கத்தை மேலே குறிபிட்ட வாதத்தின் அடிப்படையில் விளக்கத் துணியலாமா?  





ஒரு விஷயத்தில் இருந்து அதன் இயல்பான அடுத்த படிநிலையை கடப்பதை "இயற்கை" என பெயர்க்காரணம் கொள்வதும் மனிதனின் இன்னொரு வகை ஆதிக்கம் தானா என ஐயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த அர்த்தப்படுத்திகொள்ளுதலின் சிக்கலே  "வளர்ச்சி" எனும் கருத்தாக்கத்தை இயற்கையுடன் ஐக்கியபடுத்திக் கொள்வதுதான். இந்த சிந்தனை, பொருளியல் வாதத்திற்கு பிறகான, சமீபத்திய வரவாக இருந்தாலும் இத்தகைய பொருளியல் அடிப்படியிலான படிநிலை வாதம் சமூகத்தை எந்தளவுக்கு வழிநடத்தியுள்ளது என்பதை ஆராய ஆர்வம் கூடாமல் இல்லை. தொடர்ந்து நகர்வது தான் "இயற்கை" எனில் ஏன் இயற்கைக்கு மீள் வருகை புரிய வேண்டுமென உலகம் முழுவதுமுள்ள சூழலியல் செயல்பாட்டாளர்கள் அறை கூவுகிறார்கள்? இயற்கை குறித்த இருமைவாதங்களான ஸ்தூலத் தன்மை மற்றும் நெகிழ்வுப்போக்கில் எது பொருட்கொள்ளத்தக்கது? ஏனெனில், ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் சற்றேறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டில், உலகத்தை மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது, "மாற்றம் ஒன்றே மாறாதது" எனும் இயங்கியல் வாதம் தான். இயற்கை மீதான இதன் தாக்கம் சொல்லில் அடங்காதெனினும் அதேவேளையில் மானிட சமூகத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் மனித நம்பிக்கைகள் ஸ்தூல உருவம் கொண்டனவா? இல்லையெனில் நகரத்தை தாண்டியுள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அழித்து கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், நகர விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் பங்கேற்ப்புடன், கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தியை எப்படி புரிந்துகொள்வது?   




புதுமைப்பித்தனை படிப்பது ஒரேநேரத்தில் உற்சாகமிக்க செயல்பாடாகவும், தீவிர பயிற்சியாகவும் இருக்கிறது. "ஆற்றங்கரை பிள்ளையார்" எனும் கதை, உள்ளபடியே சிறார்க்கதை தோற்றத்துடன்(Parable) கவனத்தில் கொள்ள வேண்டிய மிகப்பெரும் கேள்விகளை தன்னுள் கொண்டுள்ளது. தத்துவ தேடலுக்குரியதாகவும், சமகால நடப்புகள் தொடர்பான விவாதப் புள்ளிகளுடனும் அமைந்துள்ளது.  தமிழ் சிறுகதை உலகை வடிவமைத்தவரும், தீர்மானித்தவருமான புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையும், சிந்தனைமரபின் நீட்சியையும் பூண்டுள்ளன.




காலம் குறித்த தரநிர்ணயப் படுத்துதலை எள்ளிநகையாடி, "கி.மு.'க்கள் எட்டாத சரித்திர அடிவானம்" என தொடங்கும் கதை, பிள்ளையார் உருவகத்தை முன்வைத்து சரித்திர பிரக்ஞையுடன் சமயம்-அரசு-ஆதிக்கம்-பன்முக பண்பாட்டுச்சூழல்-படிநிலை மாற்றம் குறித்த பெரும் விவாதத்தை நடத்த முன்வருகிறது, அதுவும் எளிமையான சிறார் கதைக்கே உரிய மொழியுடன். சமயச் சார்பான மொழி அவர் வாழ்ந்த காலத்தில் வழமையானதொரு போக்குதான் என "சந்தேகத்தின் பலனை" அளிக்க முன்வந்து வாசிக்க துவங்கினாலும், அப்படியானதொரு சார்பின்றி கதையை நகர்த்தி மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். நாகரீகத்தை நதியுடன் ஒப்பிடுவது, சமயத்தை மரத்தோடு ஒப்பிடுவது, சமூகத்தை மேடையாக விழைவது(நாமனைவரும் நடிகர்கள் எனும் விளக்கத்திற்காகவா?), பெரும் மாற்றங்களை, படையெடுப்புகளை இயற்கை பேரிடருடன் ஒப்பிடுவது, இஸ்லாமிய, ஆங்கிலேய படையெடுப்பை முறையே ரோஜா மற்றும் விவிலியத்துடன் ஒப்பிடுவது என ஆர்வத்தை தூண்டும் விவாதப் புள்ளிகள் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன. சில தரப்புகளை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், நேரடியாக கதையை படிப்பதனால் மட்டுமே முழுமையுணர்வை சென்று சேரவும், இவ்விவாதத்தில் பங்களிக்கவும் முடியும் எனக் கருதுகிறேன். (கதைக்கான இணைய சுட்டி






அரச மரம் என்பது "ராஜ தர்மம்" எனவும், வேப்ப மரம் "சமய தர்மம்" எனக் கதையின் ஆரம்பத்தில் வரும் கூற்று விளக்கத்திற்கான தேவையின்றியே அமைந்திருகிறது. குறிப்பாக நம் நாட்டில், ஆரம்பத்தில் இருந்தே  இவ்விரண்டுக்குமிடையே நிலவும் இறுக்கமான பிடிப்பு அனைவரும் அறிந்ததே. சமூகத்தின் மீதான, அதன் பிரதிநிதியான தனிமனிதன் மீதான இவற்றின் சுமையே புதுமைப்பித்தனின் பிரதான கவலையாக தொனிக்கிறது. வேப்ப மரத்தின் வேர்கள் பிள்ளையாரின் வயிற்றை சுற்றியும், கால்கள் எங்கும் நகரமுடியா வண்ணம் பற்றிக்கொண்ட அரச மரத்தின் வேர்களும், இவ்விரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்ட பிள்ளையாரின் தலையுமென அதை வெளிப்படுத்திச் செல்கிறார். இத்தகைய "கஷ்ட காலம்" வருவதற்கு முன் இரு மரங்களின் செழிப்பான வளர்ச்சியினால், அதன் நிழலின் குளிர்ச்சியில் பிள்ளையார் இன்பித்து இருந்துள்ளதாக கதை குறிப்பிடும் காலகட்டம் எதுவாக இருக்கும் எனும் கேள்விக்கு ஒரு தெளிவு கிடைத்தபாடில்லை. நவீனத்துவரான புதுமைப்பித்தன், மதங்களற்ற சமூகத்திலும், தனி மனித முதன்மை வாதத்திலும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்திருக்க கூடும் என்னும் அதே வேளையில் சமயங்களின் தாக்கத்திலும் தெளிவு கொண்டவராகவே இருக்கிறார். 




கதையில் நிகழும் இஸ்லாமிய வருகையை, "தாடி வைத்த, உடைவாள் தரித்த கைலிக் கட்டிய கிழட்டு மனிதன்" வருகையுடன் கட்டியம் கொள்கிறார். இறந்த பசுமாட்டின் தோலும், சேமித்து வைக்கப்பட்ட இறைச்சியுமென, மாற்று பண்பாட்டு "வெறித்தலுக்குறிய" கூறுகளுடன் சித்தரிப்புகள் கதையில் வெளிப்படுகின்றன.  எதிர்மறை எண்ணங்களினால் வெளிப்பட்ட படிமங்கள் என இவற்றை புறந்தள்ளிவிட எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. "உடைவாள்" குறித்த பிம்பம், வன்முறை வெறியாட்டத்தையும், படையெடுப்புகளையும் சுட்டுவதாகவே உள்ளன. ஒவ்வொரு குழுமத்துக்கும் இடையே உள்ள தனித்தன்மையைச் சுட்டும் அதே தருணத்தில் வகைமாதிரிகளை கட்டமைக்கும் எந்த முயற்சியும் கதையில் நிகழவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் நிலவிய அரசியல் சரிகளுக்கு (Political Correctness) ஏற்ப அத்தகைய சித்தரிப்புகள் ஒற்றுப்போய் இருப்பதற்கு வாய்ப்பிருந்தும் புதுமைப்பித்தன் அவ்வாறு முயலவில்லை என்பது வியப்பிற்குரியது. முகலாய, துருக்கிய இஸ்லாமியர்களின் வருகையை மட்டுமின்றி "மேற்கு சமுத்திரத்தின் இடரால்" ஏற்பட்ட வெள்ளையர்களின் வருகையையும் எளிமையான படிமங்களோடே அணுகுகிறார். எ.கா: "வெண்மையான, தங்க கம்பிகள் போன்ற தலைமுடியுடன், தாடியும், நீண்ட அங்கியுமாய், தோல் பையினுள் வாளும், கருப்பு அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும், சிலுவையும் வைத்திருந்தான்".  




மேற்குறிப்பிட்ட உருவகங்களை தாண்டி பண்பாட்டுக் குறிப்புகளே பெரும் ஆர்வத்தை மூட்டுகின்றன. திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மேடையை வந்தடைந்த "தாடிவைத்த கைலி உடுத்தியக் கிழவன்" மாமிசத்தை மட்டும் கொண்டு வரவில்லை, ஒரு ரோஜா மலரையும் கொண்டு வருகிறான். மாட்டு தோலை "பிள்ளையாருக்கு" போற்றியதோடு நில்லாமல் அருகிலேயே கொண்டு வந்த ரோஜாவை நட்டு இருபெரும் மரங்களுக்கு இடையே ஒரு சிறு செடியையும் வளர்க்கிறான். மேடையில், மரங்களுக்கிடையில் அழகாக வளர்கிறது ரோஜா செடி. 




சிறுவயதில் என் வீட்டின் அருகாமையில் வசித்துவந்த சாமிகிரி சித்தர் என்பவர், ஒவ்வொரு மாலையும் விளையாட்டு திடலில் எங்களைக் கடந்து போகும்போது பத்தடி தூரத்திலிருந்தே சுண்டி இழுக்கும் விதமாக அத்தர் அணிந்து இருந்ததை நினைவிற்கு கொண்டு வராமல் கதையின் இந்த பகுதியைக் கடந்து வர முடியவில்லை.  கதையில் வரும் ஒரு வரி, "மரக் கன்றுகள், செடியின் பரப்பை தாண்டி வேறு புல்பூண்டுகளும் முளைத்தன",ஒட்டுமொத்த சாரத்தையும் விவரித்து விடுகின்றது.       




புத்தரும், ஜீனரும் மற்றும் சங்கரன், ராமானுஜன், மத்வன் என பிள்ளையாரின் நிலை கண்டு "மேடைக்கு" பலரும் உதவ முன்வந்தும் நிலைமை சீரான பாடில்லை. அதிலும் பிள்ளையாரின் வருத்தத்திற்கும், கடும் சொற்களுக்கும் ஆளான புத்தரின் நிலையோ சோகத்திற்கு இடமானது. நிலைப் பெற்று இருக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் போது அது "ரோஜாக்களை" மற்றுமல்ல "முட்களையும்" சேர்த்தே வாரி வரும். சமகால வாதக்களங்கள் பல இத்தகைய நுணுக்கங்களுக்கு இடமளிப்பது இல்லை. பண்பாடு எப்போதும் இருமைவாதங்களின் கொதிகலனாகவே இருந்து வந்திருக்கின்றன. எவர் நல்லவர், யார் தீயவர், எது நல்லது, எது கெட்டது, நல்ல இஸ்லாமியர், தீய/தவறான இஸ்லாமியர் என வரையறைகளை விதிக்கும் கருவியாக பண்பாடு இருப்பதை புதுமைப்பித்தனும் கவனத்தில் கொண்டு இருப்பது அவரது மேதமையைக் காட்டுகிறது. 




இறுதியாக சமகாலத் தன்மையுடன் விளங்கும் சில விவாதப் புள்ளிகளுடன் என் தரப்பை நிறைவு செய்கிறேன். ஆங்கிலேயர்கள் குறித்த பல்வேறு விமர்சன சொல்லாடல்கள் நம்மிடையே புழங்கிவந்தாலும், சிறு அளவிலேனும் ஆக்கப்பூர்வ அணிந்துரைகள், ஆதரவு மொழிகள் இல்லாமல் இல்லை. "கருப்பு தோல் அட்டைப் போட்ட ஒரு பெரிய புத்தகம்" எனும் உருவகத்தின் ஊடே புதுமைப்பித்தன் மேற்குறிப்பிட்ட இரண்டாம் தரப்பின்பால் கவனத்தைக் கோருகிறாரா என ஐயப்பட தோன்றுகிறது. ஏனெனில் காலனிய அரசாங்கத்தின் கல்வி பரவலாக்கத்தால் மிகப்பெரும் பலனை, அறிவு விரிவாக்கத்தை தமிழகம் அடைந்தது.  இன-மைய-தேசியம், அரசியல் தளத்தில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் அக்குழுமச் சார்பினர் காலனிய அரசாங்கத்தின் நேர்மறை விளைவுகளை முன்வைப்பவர்களை சிறுமைப் படுத்தும் போக்கு வளர்ந்து வருவதும் இத்தைகைய விவாதத்திற்கு நியாயம் சேர்க்கிறது. கதையின் இறுதி அத்தியாத்தில், பல தரப்பட்ட மக்கள் குழுமி "மேடையில்" எது, எப்படி இருக்க வேண்டும் எனும் சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் தருணத்தில்,  நாம்- இனி வரும் காலங்களில்- வாழ்நாள் தோறும் முட்டி மோதி ஒருமித்த, இணக்கமான புரிதலுக்கு வழிகோல தவிக்கக் கூடிய ஒரு கேள்வியை கேட்கிறார் புதுமைப்பித்தன், "மரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா?".