23/7/15

இந்திய நடுத்தர வர்க்கம்? உடையும் பிம்பம்

கட்டுரை: ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
தமிழில் :  கபிலன். இல




 

இந்தியா போன்றதொரு பரந்துபட்ட மிகப்பெரிய நாட்டில் "நடுத்தரம்" என்ற வார்த்தையே கூட பொருத்தமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நம்மில் பலரும் ‘நடுத்தர-வர்க்கம்’ என நம்மை தொடர்ந்து அடையாளப்படுத்தி வந்திருக்கிறோம். உண்மை நிலை குறித்த பிரக்ஞையற்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலையை கணக்கிலெடுக்காமலும் நாம் தொடர்ந்து வைத்து வரும் வாதம் "நாம் நடுத்தர வர்க்கம்"

எனில், இத்தகைய பொருத்தமற்ற வாதங்களை பியூவ் ஆராய்ச்சி மையம்(Pew Research Center) இப்போது நொறுக்கி உள்ளது. "இந்தியாவின் வளர்ந்துவரும் நடுத்தர-வர்க்கம்" என்னும் கட்டுக்கதைகளுக்கும் நடைமுறை எதார்த்தத்துக்கும் இடையிலுள்ள வெளியை வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சரி, உண்மை நிலை என்ன?, ஆம், இந்தியா, முன் எப்போதும் போல, அதே துக்ககரமான ஏழை நாடுதான்.


உலகளவில் ஏற்பட்ட வருமான விகிதத்தின் சரிவை ஆராய விழைந்த பியூவ் ஆராய்ச்சி மைய ஆய்வின் விளைவு, "இந்தியாவின் மகத்தான நடுத்தர-வர்க்கம்" எனப் மிகப்பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக செய்திதாள்களில் கோடிட்டு வந்த ஆங்கில ஊடகத்தினரை விழித்து கொள்ளச் செய்துள்ளது.


உலக மக்கள் தொகையில் மாறிவரும் வருமான விகிதத்தை ஆராய்ந்த இந்த ஆய்வு, 2000'ம் ஆண்டின் முதல் பத்தாண்டுகளில் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில், வியப்பூட்டும் விதத்தில் ஏழ்மை குறைப்பு நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இவையனைத்தையும் கடந்து பார்த்தால், நடுத்தர-வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை என்பது, 15 சதவீதத்திற்கும் குறைவு தான்.


இந்த ஆய்வு, அன்றாட குடும்ப- வருமான அடிப்படையில் மக்கள் தொகையை ஐந்து வகையாக பிரிக்கிறது. இதில் ஆரம்பநிலை என்பது பல்வேறு விஷயங்களுக்கு உட்பட்டது, உலக அளவில் ஒருநாள் வருமானம் 2($) டாலருக்கு (இந்திய மதிப்பில் இது 127.40₹) கீழ் இருந்தால், அவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். 2 டாலர் முதல் 10டாலர் வரை சம்பாதிப்போர், குறைந்த-வருமானப் பிரிவினர். இதே அளவீடுகளின் படி, நடுத்தர-வர்க்கம் என்பவர் நாளொன்றுக்கு 10 டாலர் முதல் 20 டாலர் வரை சம்பாதிப்பவர் ஆகும். (இந்த அளவீடே கூட எவ்வளவு குறைவானது என்பதை அமெரிக்காவைப் பொருத்திப் பார்த்தால் புரிந்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் வறுமை-கோட்டில் உள்ள மக்களின் வருமானமே $16. நமது அளவுகோளில் இந்த வருமானம் நடுத்தர-வர்க்கத்திற்கு பொருந்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது).


இந்தியாவில் உருவாகியுள்ள இந்தச் சரிவை, கொடுக்கப்பட்ட கணக்கீடுகளின் படி உற்றுப் பார்த்தால், இந்தியாவில் இதுவரை கொண்டாடப்பட்டு வந்த நடுத்தர-வர்க்கம் எங்கே எனும் ஆச்சரியம் உங்களுக்கு எழலாம்.




120 கோடி இந்திய மக்களில், 95 சதவிகிதத்தினருக்கும் மேலானவர்கள் ஏழைகள் மற்றும் குறைந்த-வருமானம் பெறுபவர்கள். இதே நிலை உலகளவில் 71 சதவிகிதம். இதுநாள்வரை சொல்லப்பட்டு வந்த அந்த "நடுத்தர-வருமான" இந்தியர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எவ்வளவு ஏமாற்றமளிக்கக் கூடியது என்றால் உலகளவில் இதுவே 13 சதவீதம்.


இந்த ஆய்வறிக்கை, “இருப்பினும் இந்தியாவின் வறுமை விகிதம் 2001'இல் 35% இருந்தது 2011'ல் 20% ஆக குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் “நடுத்தர-வருமானம்” ஈட்டுவோரின் பங்களிப்பு என்பது 1'ல் இருந்து 3 சதவீதமாக உயர்ந்துள்ளது”. மேலும் தொடர்கையில், “வளர்ந்து வந்திருக்க வேண்டிய நடுத்தர வர்க்கத்திற்கு பதிலாக இந்தியா, குறைந்த வருவாய் உள்ளோரின் தொகையில் வீக்கம் கண்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் 2 முதல் 10 டாலர் என்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதன்படி மக்கள், நடுத்தர- வருமான நிலை என்பதை அடைய நெடுந் தூரம் செல்ல வேண்டும்” என்கிறது.

                 


மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின் படி, ஏழ்மை நிலையிலிருந்து வெளியேறிய அதிகப்படியான இந்தியர்கள், பெருவாரியாக "குறைந்த-வருமானம்" பிரிவினுள் தான் தஞ்சம் புகுந்துள்ளனர், அதே நேரம் உயர்தர வர்க்கத்தை நோக்கிய அவர்களது பயணம் என்பதும் மிக மிகக் குறைந்த அளவிலேயே நடந்துள்ளது. தெளிவாக பெரும்பாலான இந்தியர்கள் உயர் வாழ்க்கை தரத்திற்கு அப்பால் உள்ளனர், அண்டை நாடான சீனாவால் முழுதும் மறைக்கப் பட்டுள்ளனர், சீனாவில் மத்திய வர்க்கத்தின் வருமான உயர்வு என்பது 2001'ல் 3 சதவீதத்தில் இருந்து, 2011'ல் 18% ஆக ஆகியுள்ளது முக்கியமானது.


இதில் வியத்தகு முரண் எதுவென்றால், தங்களை நடுத்தர-வர்க்கம் என அழைத்துக் கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தான். நடுத்தர-வர்க்கமும், நடுத்தர வருமானமும் ஒன்றல்ல என்பதைப்போலவே, இரண்டுக்கும்- ஒன்றின் மேல் ஒன்றாக- நியாயமான இடைவெளி அவசியம். இந்திய மேம்பட்ட ஆய்வு மையத்தின் பல-ஆண்டு குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் தேவேஷ் கபூர் மற்றும் மிலன் வைஷ்ணவ்-இருவராலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பாதிக்கும் மேலான இந்தியர்கள்- நகர, ஊரக, குறைவருமான, உயர் வருமான(எல்லா பிரிவினரும்)- தங்களை "நடுத்தர வர்க்கத்தினர்" என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றனர், என தெரிவிக்கிறது.


பியூவ் ஆராய்ச்சி ஆய்வின் முடிவு, ‘நடுத்தர-வர்க்கம்’ பற்றிய பரவலான, தெளிவற்ற வரையறைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தை பற்றி தொடர்ந்துக் கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம், இந்தச் சிக்கல் அனேக இந்தியர்கள் தங்களை "நடுத்தரம்" எனக் கருதிக் கொள்வதால் தான் உருவாகிறது. ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறானது. மிகக் குறுகிய எண்ணிக்கை-யினரே, 'நடுத்தர-வருமான' நிலைக்கு இங்கு தகுதியடைந்துள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளுக்கும் - வளரும் நாடுகளுக்குமான வாழ்கை-தர இடைவெளி என்பது குறைந்தபாடில்லை.


அறிக்கை இவ்வாறு முடிகிறது, "வரலாற்றுபூர்வமான, உலகளாவிய ஏழ்மை குறைப்பை, இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தம் கண்டது, ஒட்டுமொத்த மக்கள் தொகை இரட்டிப்பு வீதத்தில் நடுத்தர வர்க்கம் ஆகும் எனவும் கருதப்பட்டது. ஆனால், உலகளவில் நடுத்தர வர்க்க எழுச்சி என்பது எதார்த்தத்தை எட்டாத வாக்குறுதியாகவே இன்றும் நீடிக்கிறது”.








(ஜூலை 10'ம் தேதி Scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரை)