28/12/17

சிம்மாசனங்கள் - சிறுகதை




யாருமற்ற வகுப்பறையில் காலியாக இருந்தது ஆசிரியரின் நாற்காலி. அமைதி அடர்த்தியாக பரவி இருந்த அன்றைய காலை அவனுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. “ஏன் இன்னும் ஒருத்தரையும் காணோம்”, தனக்கு தானே பேசிக்கொண்டு வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் இருந்து பள்ளியை சுற்றி அமைந்திருந்த தீப்பெட்டிக் கட்டுகளைப் போல சிதறிக் கிடந்த வீடுகளைப் பார்த்தான். புழுக்கம் நிறைந்த இறுக்கமான வீடுகள். “இன்னும் இவங்களுக்கு விடியலை போல” கடிகாரத்தை பார்த்து முனகிய அடுத்த நொடி, வளாக சுற்றுச்சுவரின் இடது புறத்தில் இருந்த மஞ்சள் நிற தகரக் கூரை வீட்டில் இருந்து கணவன் மனைவி இருவர் சத்தமாக சண்டை இட்டுக்கொண்டு வீதிக்கு வந்தனர். “என்னைக் கேக்காம செய்வியா...செய்வியா, ஏன் செஞ்ச சொல்லு?”, கணீர் கணீரென மனைவியை அறைந்து கொண்டிருந்தார் கணவர். வீறிட்டு அழுதவாறே கூச்சலிட்டதால் மனைவி என்ன சொல்கிறாள் என விக்னேஷிற்கு கேட்கவில்லை. சற்று தள்ளி சென்று உற்று நோக்கினான். “ரெண்டு பேரையும் எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே”, அவனது யோசனை அவனுக்கே தொந்தரவாக இருந்தது.



விக்னேஷிற்கு ஒரு தங்கை. பெயர் தேவி. வீட்டிற்கு அருகிலேயே உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஒவ்வொரு நாளும் அரக்கப் பறக்க இவன் கிளம்பிய பிறகே அம்மா தங்கையின் பக்கம் திரும்புவாள். ‘கிர்ர் கிர்’ எனும் குட்டி குறட்டை சத்தம் போன்ற அவளது மூச்சொலி , வயோதிக நகரப் பேருந்து கக்கிச் செல்லும் கரும்புகை போன்ற பொறாமையை அவனுள் பரவச் செய்யும். நான்கு வருடம் பிந்தி சென்று வாழவேண்டும் எனும் ஆசை துளிர்க்கும். ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டி அம்மாவிற்கு டாட்டா சொல்லும்போது, தேவியின் நிம்மதியான தூக்கத்தைப் பார்க்க அவ்வளவு ஆசையாய் இருக்கும். அம்மா நகர்ந்த சமயம், சடுதியில் அவளை எழுப்பிவிட்டு ஓடி வந்து விடுவான்.


தூக்கம், ஆகப் பெரும் சந்தோசம். அதைவிட இந்த உலகத்தில் பெரிய தேவை என்ன இருக்க முடியும்?. விக்னேஷைப் பொறுத்தவரை மனிதனின் மகிழ்ச்சிகரமான தருணம், ஏன் பொக்கிஷம் தூக்கம் தான். அவன் தன் நிஜ வாழ்வின் சுவாரசியத்தை மிஞ்சும் அதி அற்புதமான பல வாழ்கையை கனவுலகில் தான் வாழ்ந்து இருக்கிறான். பல விநோதங்களை கண்டடைந்தும் இருக்கிறான். பெண்கள் அனைவரும் சிகரெட் பிடிப்பது அப்படியான விநோதங்களில் ஒன்று. ஆனால் நேற்றைய இரவு கடுமையான ஒன்று. அவனால் தூங்கவே முடியவில்லை. நடுயிரவிற்கு பிறகு அத்தனை சத்தம். திடீரென அப்பாவும் அம்மாவும் எதுக்கு இப்படி சண்டை போட்டு கொள்கிறார்கள், என சோம்பியவாரே எழுந்தான். கூச்சல் அதிகமாக அதிகமாக இவனுள் பயம் திரண்டது. “போலாமா வேணாமா”, என யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தங்கையை பார்த்தான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.




மணி ஆறு ஆகி இருந்தது. “இத்தன புஸ்தகங்களை எதுக்குப்பா தூக்கிட்டு போற, நாங்கெல்லாம் படிக்கறப்போ ஒரு நோட், ரெண்டு நோட்டு தான் எடுத்துட்டு போவோம். இவ்ளோ சுமைய தூக்கிட்டு போனா எப்டி படிக்க தோணும்”, பஸ் ஸ்டாப்பில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் இவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட்டது. ஏறி உட்கார்ந்ததும் திரும்பி பார்த்தான், இவனோடு சேர்த்து மூன்று பேர் தான் இருந்தார்கள். முதல் பேருந்து என்பதால் சற்று நேரம் நின்றது. வழக்கமாக ஆறே முக்காலுக்கு தான் ஏறுவான், எட்டு மணிக்கு பள்ளி சென்று சேர சரியாக இருக்கும். அன்று பத்தாம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் இருந்தால் மாணவர்கள் வருவார்கள் என நம்பிக்கை கொண்டான்.



விக்னேஷ் தன் வீட்டில் இருந்து இரு பேருந்துகள் மாறி தான் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறான். அடுத்த ஆண்டு பொது பரீட்சை என்பாதால் பள்ளியை மாற்றுவதில் அவனது பெற்றோருக்கும்ஆசிரியர்களுக்கும் உவப்பு இல்லை. பேருந்து நெரிசலில் தப்பி பிழைத்து மாலை வீடு திரும்பிய நொடியில் இருந்தே புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்துவிடுவான். கால் வலிக்கிது, சோர்வாக இருக்கிறது, பஸ்ஸில் சென்று வர சிரமமாக இருக்கிறது. அவனது புகார்கள் எதுவும் கண்டுகொள்ள படவில்லை. அனைத்திற்குமான ஒரே பதில், “பப்ளிக் முடியட்டும் அப்புறம் மாத்திரலாம்”.



என்றைக்குமில்லாது கூட்டமில்லாத பஸ் ஒன்றிற்குள் இருப்பது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. பக்கவாட்டிலும், வெளிப்புறத்திலும் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ போஸ்டர்கள் நிரம்பி வழிந்தன. ரேடியோவில் ‘சூரியோதயம்’ ஒலிக்க ஆரம்பித்தது, பஸ் கிளம்பி இருந்தது.



“இப்ப எல்லாம் வர வர மரியாதையே இல்லாம போயிட்டிருக்கு, என்ன நெனைச்சுட்டு இருக்க மனசுல”


“அப்டி என்ன குறைஞ்சு போச்சு, நீங்களே சாப்பாடு போட்டுகொங்கனு தான சொன்னேன், அதுக்கு அடிபீங்களா?”


“ஆமாடீ,அதென்ன நீ சொல்றது, ஒரு மனுஷன் அல்லோலப்பட்டு வீட்டுக்கு வந்தா இப்டிதான் நடந்துக்குவியா?”


“இந்த ஒரு முறை தான சொன்னேன், என்னை ஏன் இப்டி பாடாப்படுத்துறீங்க...அய்யோ ஆண்டவா”


“ஆமாடி இப்ப கால் மேல கால் போட்டுட்டு எனக்கு ஆர்டர் போடுவ, நாளைக்கு என் தலை மேல ஏறி உக்காருவ, அப்றம் நான் உனக்கு சேவகம் பண்ணனுமா?” 

சண்டை, அழுகை, கதறல், ஆத்திரம். இடையில் இரண்டு முறை அம்மாவிற்கு அறையும் விழுந்து இருந்தது. அப்பா இன்னும் பொருமிக்கொண்டு இருந்தார். கொட்டக் கொட்ட அதை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தங்கை எழுந்து அழத் தொடங்கி விட்டிருந்தால். அந்நொடி வீடே கண்றாவியாக இருந்தது. எங்காவது போய் விடலாமா எனத் தோன்றியது.


விக்னேஷின் அப்பா தாசில்தார் ஆபிஸில் வேலைப் பார்கிறார். என்ன வேலை எவ்வளவு சம்பளம், எதையும் தெளிவாக சொல்ல மாட்டார். தாசில்தாரரிடம் பெற வேண்டிய ஆவணங்கள் குறித்துப் பலரும் வீட்டிற்கு வந்து அப்பாவை பார்ப்பார்கள். சிலர் நேரம் காலம் தெரியாது பேசிக் கொண்டிருப்பார்கள். டீ, பக்கோடா என இடையிடையே அவருடைய அறைக்கு கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். சிரித்தவாறே, “அதெல்லாம் பண்ணிடலாம், சீக்கிரமே முடிச்சி கொடுத்தரலாம்” என சொல்லிக் கொண்டிருப்பார் அப்பா. ஒவ்வொரு நாள் இரவும் மேலதிகாரிகளை திட்டியே சாப்பிடத் தொடங்குவார். சில நாட்கள் எல்லைமீறி வசை காதைப் பொத்துமளவுக்கு வந்து விழும். ம்ம்’கொட்டிக் கொண்டே அம்மா ‘குழந்தைங்க, குழந்தைங்க’ என இறைஞ்சுவார்.



“அடி போடி, இவனுங்க முன்னாடி எப்பவும் கை கட்டி வாய்ப்பொத்தி நின்னுகிட்டே சேவகம் பண்ணனுமா... ஒரு நிமிஷம் உட்கார்ந்துற முடியலை, வெட்கமா இருக்கு. என்னை நெனைச்சா எனக்கே கேவலமா இருக்கு. இன்னைக்கு அந்தாளு வந்து பேசிட்டு இருக்கும்போது உக்காந்து இருந்துடேனாமா... ‘ஒரு சீனியர் ஆபிஸர் பேசிட்டு இருக்குரப்போ இப்டிதான் உக்காந்துட்டு இருப்பியாயா? இதான் மரியாதை கொடுக்கற லச்சணமா’னு அசிங்க படுத்திட்டான். இதெல்லாம் ஒரு பொழப்பா? இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்”. அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அம்மாவை பார்த்து மேலும் ஆத்திரத்துடன் “எல்லாம் உன்னால தான்டி, உன்னால எனக்கு பிடிச்ச சனியன் தான் எல்லாம்” என எரிந்து விழத் தொடங்குவார். “நீ இல்லாம இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பன். குடும்பம், நீ, ஆபீஸ்’னு எல்லத்துனாளையும் தான் நான் இப்டி சின்னப்பட்டுட்டு இருக்கேன்”. ஒவ்வொரு நாளும் இருள் கவியத் தொடங்கும் போது, எதற்கும் தயரானவளாக அம்மா இயல்பாக மாறுதை விக்னேஷ் கவனித்திருக்கிறான்.



பேருந்து ஜன்னல் கம்பிகளினூடே புலர்ந்து வரும் காலையை கவனிப்பதில் ஒரு அலாதி இருப்பதைப் பல முறை உணர்ந்து இருக்கிறான். வித்தியாச வித்தியாசமான முகங்கள், விசித்திரமான காட்சிகள். அதே இடம், அதே சாலை தான். ஆனால் காலை வேறு மாதிரியானது. சாலை வளைவுகளை கடக்கும்போது தொப்பலாக செய்திதாள்கள் குவிந்து இருப்பதை பார்ப்பான், கூடையை தூக்கிவிட ஆள் பார்த்து கொண்டு நிற்கும் பூக்கார பாட்டிகள் கேலியாக தோற்றமளிப்பார்கள். வீடுகளுக்கு முன் குனிந்து கூட்டுபவர்களை பார்த்ததும் பதற்றமாகி விடுவான். ஒரு சில முறை இவன் பார்த்ததை அவர்கள் கவனித்து விட்டால் தவித்துப்போவான். யார் எவரென தெரியாவிட்டாலும் தான் தப்பு செய்து விட்டதாக உணர்வான். குற்றவுணர்வுடனே அன்றைய நாள் தொடங்கும்.




கண்ணசந்து கம்பியில் லேசாக இடித்துக் கொண்டதும் தான் பிரக்ஞை ஏற்பட்டு தோன்றியது, இன்றைய நாள் அப்படியான நாள் இல்லை. வழக்கமான புத்துணர்வு மிக்க காலையாக இன்று இல்லை, சிறப்பு வகுப்பு எடுக்க வரும் ஆசிரியரின் முகம் போல சலனமற்று இருந்தது. விரக்தி வெதும்பி வெளிப்பட்டது. வயிற்றுனுள் ஈருருளை திணறுவது போன்று இருந்தது, நேரத்திற்கு சாப்பிடும் வழமை இன்று அனுசரிக்கப் படவில்லை. அழுது வீங்கிய கண்களும், கரகரத்த குரலுமாய் கையில் இருபது ரூபாயை திணித்து “இந்தா இவ்ளோ தான் இருக்கு, அங்க போய் டீ,பன் எதாவது வாங்கி சாப்ட்டுகோ” என்றால் அம்மா. சமைக்காததர்கான காரணம் விக்னேஷிற்கு தெரியாமலில்லை. ஆனால் அதை எதுவும் அவன் கேட்கவில்லை. அப்பா எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தான், காணவில்லை.



அம்மா’விற்கு வீட்டில் மட்டும் தான் வேலை. நினைவு தெரிந்த நாளிருந்து அவள் வெளியில் எங்கும் வேளைக்கு சென்றதில்லை. தன் நண்பர்களின் அம்மா’க்கள் பலர் வேலைக்கு போவது தெரிந்திருந்தும், அவனுக்கு அது ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. “அம்மாவும் வேளைக்கு போய்ட்டா அப்புறம் இன்னைக்கு மாறி தான் எப்பவும் சாப்பிடாம வர வேண்டி இருக்கும்”, யோசித்து கொண்டிருந்தவன் செவிப்பாரையில் வந்தறைந்தது பள்ளி வேனின் சத்தம். கடிகாரத்தை பார்த்தான், 7.42.




வந்ததில் இருந்து பத்து பதினைந்து நிமிடங்கள் அப்பிடியே வராண்டாவில் நின்று கொண்டு யோசனையில் மூழ்கி இருந்தது உணர்ந்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனது வகுப்பு அறைக்குள் மெளனமாக நுழைந்தான். சூழ்ந்திருந்த வெறுமை கலந்த அமைதி மேலும் பல நினைவுகளை தூண்டி அவனை துன்புறுத்தியது. கணக்கு தான் முதல் பீரியட், சார் வர இன்னும் நேரமாகும் என நினைத்தபடியே நாற்காலியை இழுத்து உட்கார்ந்தான். விக்னேஷிற்கு சார்’ரின் சேரில் உட்காருவது அதுவே முதல் முறை. மிகவும் சௌகரியமாக உணர்ந்தான். அங்கே உட்கார்ந்து கொண்டு அவனும் அவன் இரண்டு நண்பர்கள் உட்காரும் பெஞ்சை பார்க்கும் போது, அது மிகவும் சிறியதாக தெரிந்தது. இதனுடன் ஒப்பிடும்போது அந்த மரபெஞ்சின் விஸ்தீரணம் பத்தில் ஒரு வீதம் கூட இல்லை என உணர்ந்தான். அவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது, அது தான் உட்காரும் இடம் தானா? ஆசிரியர் நாற்காலியில் வீற்றிருக்கும் போதெல்லாம் அவர் தன்னையே பார்ப்பதாக விக்னேஷிற்கு தோன்றும். முரளி அவனை கூப்பிட்டு கூப்பிட்டு சலித்துவிடுவான். சார் பாத்துவிடுவார் என்னும் பயமே போதுமானதாக இருந்தது அவனுக்கு, திரும்பவே மாட்டான், அவர் இருக்கும் வரை யாருடனும் பேச மாட்டான். கணக்கை விடவும், அதன் ஆசிரியர் மீதே பயம் அதிகம். ஆனால் நாற்காலியில் உட்கார்ந்தால் மாணவர்கள் எதிரே வந்து அமர்ந்தாலும் இல்லாவிட்டாலும், பெரிய வித்தியாசம் இருக்காது என்றே விக்னேஷிற்கு இப்போது தோன்றியது. பரந்து விரிந்த அந்த வகுப்பை, அந்த ஒற்றை சேரில் இருந்து பார்ப்பது என்பது ஒரே நேரத்தில் ஒரு கழுகு பார்வையை போன்றும், விட்டத்தை வெறிப்பதாகவும் இருப்பதாக அவனுக்குப் பட்டது. மாணவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், ஆசிரியர் தன்னை பார்த்து விட கூடும் எனும் பிரக்ஞையால் மறைந்து மறைந்து பேச வேண்டிய நிலை. ஆனால் ஆசிரியர்க்கு அங்கிருந்து அனைவரும் ஒன்றுதான். மரபெஞ்சுகள் தான். தமிழ் ஆசிரியர் ஒருவர் மட்டுமே அனைவரையும் வட்டமாக குழுமச் செய்து தானும் சேர்ந்து அமர்ந்து வகுப்பை நடத்துகிறார் எனும் நினைவு தட்டியதும், சம்பந்தமின்றி ஏன் இது நினைவுக்கு வந்ததது என திகைப்படைந்தான். அந்த யோசனையை அப்படியே உதறிவிட்டு, ஒரு கணம் நிதானித்து நாற்காலியின் இரு கைப்பிடிகளையும் இறுகப் பற்றினான். மெல்ல வலது காலின் மேல் இடது காலை போட்டான். சிம்மாசனத்தில் இருப்பது போல உணர்ந்தான். சட்டென தலைமுடியை ஐந்து விரல்கள் இடுக்கி போல் பிடித்து தரதரவென இழுப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து எழுந்தான். மூர்ச்சை அடையும் அளவுக்கு வலி மிகுந்து “சார் சார்..சாரி சார்” எனக் கதறினான். அதுகாறும் அவர் வந்து நின்றுகொண்டு இருந்ததை அவன் கவனிக்கவில்லை. தலையில் இருந்த கையை எடுத்து சுளீரென கன்னத்தில் கனமாக பதித்தார் ஆசிரியர். “வாத்யார் உக்கார இடத்துல உக்காரலாமாடா?” என்றார் பற்களை கடித்தபடி, “போ, போய் உன் இடத்துல உக்காரு”.


தேம்பி வழிந்த கண்களை துடைத்துக் கொண்டு, வாத்யாரை பார்த்து நடுங்கியபடியே சென்று தனது பெஞ்சில் அமர்ந்தான்.


*** 
Thank You for the Inspiration Perumal Murugan Sir. I Hope for it to continue forever.

1 கருத்து:

  1. உன் எழுத்துக்கள் எப்போதும் அற்புதம் செய்துவிடுகின்றன ❣

    பதிலளிநீக்கு