4/9/14

அன்னா கரினினா- என் பார்வை




அன்னா கரீனினா - வாழ்வில் மறக்க முடியா ஓர் அற்புதப் படைப்பு. கடந்த பதினைந்து நாட்களாக தொடர் வாசிப்பில், ஆழ்ந்த ஈடுபாட்டோடு, என்னை நான் இந்த இலக்கிய கடலில் மூழ்கடித்துக்கொண்டேன். அதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்றேன்.

ஆசிரியர் லியோ தால்ஸ்டாய் பெருநாவல்களில், நான் வாசித்த இரண்டாவது நாவல் இது!
ஆனால் உண்மையில் அன்னாகரீனினா எனக்குள் ஏற்படுத்திய ஒரு பாதிப்பைப் போல #போரும்அமைதி இல் நான் உணரவில்லை. போரும் அமைதியையும் பொருத்தவரை அதன் கதை களம், சூழல், கதாபாத்திரங்களின் உணர்வு தன்மை, மிக நுட்பமாக உணர, நாவலினுள் ஊடுருவி, மையக் கருவை தொட்டு நுகர அதிகப்படியான மறுவாசிப்பு தேவை. ஆனால் அன்னா கரீனினா அவ்வாறு அல்லாது முதல் வாசிப்புலேயே மனதை முழுவதும் கவரக் கூடியது. இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பு தேவை, ருஷ்ய படைப்புகள் என்றாலே இலக்கிய சுவையும், நயமும் ததும்ப இருக்கும். அத்தகைய ஒரு அதீத இலக்கிய சுவை நிரம்பிய நாவலே அன்னா கரீனினா.

ஒரு பெண்ணின் பல பரிமாணத்தை, வாழ்க்கை வெளியில் அவளை தன்னிச்சையாக எடைபோடும் ஒரு ஏதேச்சதிகார சமூகத்தை, உளவியல் ரீதியாக அன்னா அனுபவிக்க நேரும் துன்பங்களை, தன்னுடைய ஆதிக்க அதிகார நற்பெயருக்கு பங்கம் வராதவரை யார் புண்பட்டாலும் சரி என கவலையற்றவனாய் அன்னாவின் கணவன் கரீன், நாவலை படைத்த ஆசிரியர் டால்ஸ்டாய் தனது குணாதிசயங்களை மையமாக வைத்து கதையின் ஊடாக பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக லெவினை படைத்திருந்தது, குடும்பம், மதம், சமூகம் என பல கட்டமைப்புக்குள் இந்த உலகம் பெண்களுக்கு என பிரத்யேகமாக ஏற்படுத்தியிருக்கும் பல எல்லைகளையும், தடைகளையும், வேலிகளையும், அதனை உடைத்து எறிய முற்படும் ஒரு பெண்ணின் மனவலிமையும், இறுதியில் தார்மீக துணையென யாருமின்றி ஆற்றாமையால் வெடித்து பொங்கும் அன்னா தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வரை, என உலக இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாய் தனது தனித்துவமான நயமிக்க இலக்கியசுவையுடன் அழகாகவும் கவித்துவமாகவும் நாவலை வார்த்திருக்கிறார் என்றே சொல்லலாம்... சுமார் 150 வருடங்களுக்கு முன் வெளியான
இந்நாவலில் நிலவும் சமூக சூழலானது இன்றைய, நமது சமகால-சமூகத்திற்கும் அப்படியே பொருந்தக்கூடியவை என்பதிலிருந்தே உலகப் புகழ் பெற்ற இந்நாவலின் தனித்தன்மையை எளிதில் உணரமுடியும்..!








இப்படைப்பை வாசித்து முடித்ததில் இருந்தே, ஒரு எண்ணம் இருக்கமாய் நெஞ்சை நெருடியவாறே உள்ளது, ஆம், நாம், நம் சமூகம் இன்னும் கடக்க வேண்டிய தூரம், இன்னும் வெகு தொலைவில் உள்ளது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக