3/6/14

கலைஞர் கருணாநிதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

                                                                                        
திமுகத் தலைவர் - மு. கருணாநிதிக்கு இன்று 91வது பிறந்தநாள்.
இந்தியாவின் அனைத்து பொதுத் தேர்தல்களையும், சந்தித்த தலைவர்களுல் பிரதானமானவர் திரு.மு.கருணாநிதி.
திமுகத் தொண்டர்கள் மற்றும் அபிமானிகள் என அனைவராலும் பரவலாக கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதியின் ஆரம்பகால அரசியல் பேச்சாற்றலை அவரது சொல்வனத்தை அக்காலத்தில் மெச்சாத ஆளே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு மக்களையும், இளைஞர்களையும் தன்னுடைய பேச்சாற்றல் மூலம் திமுகவின் பால் ஈர்த்தவர், கலைஞர்.
என்னுடைய தந்தை தன்னுடைய இறுதிகாலம் வரையிலும் திமுக ஆதரவாளராகவும், கலைஞர் அபிமானியாகவுமே இருந்தார்.
அதனுடைய தாக்கம் சிறு வயதில் என்னுள்ளும் இருந்தது.
ஆனால், அன்று நான் கேள்விப் பட்ட திமுகவும் , இன்று இருக்கும் திமுகவையும் வேறுவேறாகவே எண்ணத் தோன்றுகிறது.
காலங்கள் மாறுகிறது, ஆனால் திமுக அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. மாறாது இருந்தது திமுவின் தலைமை மட்டுமே. இதுவே திமுகவின் மேல் மக்கள் அனைவரிடத்திலும் ஒரு எண்ணத் தளர்வை உண்டுபண்ணியது.
ஒருகாலத்தில் பெருவாரியான இளைஞர்களை தன்பக்கம் வெகு இலகுவாக ஈர்க்க முடிந்த திமுகவால், இன்று அதனுடைய பாரம்பரிய வாக்குவங்கியையே கூட காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இதிலிருந்தே அதனுடைய சரிவு எத்தகையது என ஊகித்தரியலாம்.
வெற்றித் தோல்வி என்பது நமது தேர்தல் முறையில் வெகு சாதாரணம், ஆனால் தோல்விக்கு பிறகு கட்சியை நெறிப்படுத்திக் கொள்ள முயல்வதும், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் கட்சிக்குள் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியமானது.
ஆனால் இப்பணியில் திமுக தலைமை, சட்டமன்ற தேர்தல் முடிந்து இந்நாள்வரையிலும், தற்போது நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை கடந்து தற்போது வரையிலும் எந்தளவு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது என்பது சந்தேகமே.
கடந்தகால தலைமுறையினரை பொறுத்தவரை திமுக என்பது  ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சிறுபான்மையினருக்காக, சமூகநீதிக்காக குரல் கொடுத்த ஒரு கட்சி. ஆனால் இந்த தலைமுறையினரின் சமகால அரசியல் விழுமியங்களைப் பொறுத்தவரை திமுக என்பது ஊழல் வயப்பட்ட கட்சி.
இந்த அவப்பெயரைஅகற்றுவதற்கான பணியை மும்முரமாக திமுக துணிந்து முன்னெடுக்க வில்லை என்பதே யதார்த்த நிலை.
திமுக குடும்ப அரசியல் சூழலும், மா.செ'களின் குறுநில மன்னர் போக்கும் எதிர்மறை அபிப்பிராயத்தையே இன்றைய தலைமுறையினர் மனதில் விதைத்தது. அது தேர்தலிலும் எதிரொலித்தது.
காலங்காலமாய் பாடுபட்டு கட்சியை வளர்த்த 91 வயது மனிதர், இன்று தன் கண் முன்னே கழகத்தின் பெயர் களங்கம் அடைந்திருப்பதை எண்ணி மனதளவில் எத்துனை வேதனைக்கு  உள்ளாவார் என யூகிக்க முடிகிறது.
கவலையடைந்து இருப்பதை விட, விரைவில் ஸ்தாபன அளவில் துணிச்சலாக சில மாற்றங்களை திமுகவில் முன்னெடுத்தாலொழிய கழகத்தை கரை சேர்க்க முடியாது. இதை கலைஞரும் அறிவார்.
நம்மை பொறுத்தவரை, ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு நாம் என்றுமே எதிரி கிடையாது.
துவண்டு கிடக்கும் ஒவ்வொரு மதச்சார்பற்ற முற்போக்கு அரசியல் சக்திகளுக்கும் உத்வேகம் அளிப்பது, தவறுகளை சுட்டிக் காட்டுவது, விமர்சிப்பது அனைத்து முற்போக்கு எண்ணமுடைய  ஜனநாயக  விரும்பிகளது கடமை என்றே எண்ணுகிறேன்.
கலைஞருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ☆ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக