12/4/16

சமகால அரசியல் - தமிழக தேர்தல் - அதன் போக்கு- நீட்சி

(2016-2017'ஆம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முதல்கட்டத்தில் தேர்வான எனது கட்டுரை. அடுத்த கட்ட எழுத்து தேர்வு 17.04.16. தலைப்பு: தமிழக அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தலில் நிகழும் மாற்றங்கள், கருத்தியல் சார்ந்த பார்வையை முன்வைத்தல்)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அரசியல் பங்கேற்பின்மையால் ஏற்படும் மிகப்பெரிய மோசமான விளைவு என்னவென்றால் கீழ்மையாளர்களால் நாம் ஆளப்படுவது தான் – பிளேட்டோ




"அரசியல் எதுக்குப்பா நமக்கு" என்னும் கேள்வி தான் நம்மையும் சூழந்து கொண்டு இருந்தது சில ஆண்டுகள் முன்புவரை. ஆனால் நிலைமை இன்று வேறு. ஆம், போன தலைமுறைகளின் டீக்கடை பெஞ்சு'களை விஞ்சிவிட்டது இன்றைய சமூக வலைதள அரசியல் பேச்சுகள். கழுத்தை சுற்றும் பாம்புகள் போல தலைவர்களை "மீம்ஸ்"கள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.




அதிகாரத்தின் மமதை


“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை", தனது தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியின் களிப்பில் வெளியானவை. ஆனால் ஓராண்டுக்குள் சென்னை பேரிடரின் போதான அவரது அரசின் கையாளாகத் தனம், இந்த மிதப்பை முற்றிலும் புரட்டிப் போடும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் பேரிடரால் நிகழ்ந்த இழப்புக்கு நிகரானது அரச நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டும் அவலம் வேறு. எளிய மக்கள் மனதில் பதிந்த இந்த கசப்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது.




"இலவசங்களின்" அரசியல்



2006'ம் ஆண்டு சட்டசபை தேர்தல். கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் மூழ்கி இருந்தன. அப்போது பிரதான எதிர்கட்சி தலைவரான கருணாநிதி தன்னுடைய தேர்தல் அறிக்கையுடன் வந்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: இலவச நிலம், இலவச வீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச கணினி. ஜெயலலிதா முதல் பெரும்பாலான கட்சிகள் வரை, கருணாநிதி அரசியலை கேலிக்கூத்தாக்குகிறார் என சாடின. தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2011'ம் ஆண்டு தேர்தல். இப்போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்: விலையில்லா மிக்சி, விலையில்லா மின்விசிறி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வீடு. பெருவெற்றி பெற்றது அதிமுக. இடைப்பட்ட இந்த இரண்டு ஆட்சியிலும் நடந்திருக்கும் மாற்றம் என்பது "இலவசம்" என்பதிலிருந்து "விலையில்லா" என்னும் வார்த்தை வேறுபாடு அளவிலான மாற்றம் மட்டுமே. அடிப்படை தேவைகள், உரிமைகளை வழங்க மற்றும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதாண்டி ஆடம்பரங்களை இலவசமாக ஏற்றுக்கொள்ள மக்கள் இப்போது தயாரில்லை. நிலையான வேலையும் நிரந்தரமான வருமானமுமே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




கருத்துக்களே தலைமை


2014'ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தொடங்கிய சமயம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முதல் பரப்புரையில் சொன்னார்: "இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி". அன்று அவர் கோடிட்டு காட்டிய அந்த கருத்தியல் மோதல் இன்று அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த வருடம் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை "மதச்சார்பின்மையாக" இருக்குமென்றால், இந்த ஆண்டு அது "கருத்து சுதந்திரமாக" இருக்கும். இந்தப் போக்கு எதேச்சையானது அல்ல. நேற்றைய பெருமாள் முருகனிலிருந்து இன்றைய கண்ணையா குமார் வரையான நிகழ்வுகளின் மூலம் அரசின் அதிகாரம் எவ்வளவு மூர்க்கமானது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்து வருகின்றனர் ஆட்சியாளர்கள். இனி "வளர்ச்சி" கோஷங்கள் புளித்துவிட்ட நிலையில், மதச்சார்பின்மை பற்றிய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும். அனைவருக்கும் 15 லட்சம் என்பதை தாண்டி, உணவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்னும் கருத்து வலுப்பெறும். புல்லட் ரயில் என்றைக்கோ வரட்டும், இன்றைக்கு நான் சாப்பிடும் உணவு நாளை நான் கொல்லப்பட காரணமாக இருக்கக்கூடாது தானே?




நிகழும் மாற்றம்


அறிவியல் ரீதியாக எந்த ஒரு கருத்தும் ஒரே வடிவத்திலேயே நெடுநாள் உயிர்ப்போடு இருக்க முடியாது. 40"க்களில் சுதந்திரமும், 60"களில் சமத்துவச் சிந்தனையும், 70'களின் பிற்பகுதியில் ஜனநாயகம் நசுக்கப்பட்ட போது அதற்கு எதிரான கருத்தும், 80களில் சமூகநீதி அரசியலும் என அது தொடர்ந்தது. பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டிய அந்த அரசியல் சூழல் மத துவேஷ சக்திகளால் பின்னாட்களில் சிதறடிக்கப்பட்டது. அதேபோலவே ஒரு துருவ அரசியலும் இனி மாறப்போகும் சூழல் வலுத்து வருகிறது. ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி என்றல்லாமல், எந்த கொள்கைக்கு எது மாற்று கொள்கை என்னும் கேள்வி எழும் நிலை வெகுதொலைவில் இல்லை. அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த அரசியலும் தமிழ்நாட்டில் வீரியம் பெற்று வருகிறது. திராவிட அரசியல், அதன் வழி வந்த கட்சிகளால் நீர்த்துப்போனதே இதற்கு காரணம். வாச்சாந்தி வழக்கிலிருந்து பரமக்குடி துப்பாக்கி சூடு வரை பொறுத்திருந்து பார்த்து அடைந்த ஏமாற்றத்திற்கு பிறகே தங்களுக்கான அரசியல் பாதையை தலித் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இன்று தமிழ்நாட்டில் ஒரு தலித், முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்னும் கருத்து வலுப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.


மக்களே இறுதி எஜமானர்கள்


இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல். அதில் பெரும் பேசுபொருளாக இருக்கப்போவது ஊழலும், மதுப்பிரச்சனையும். ஊழலை பொறுத்தவரை இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்னவென்றால், அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை என்பதை தாண்டி ஊழல் அரசில்வாதிகள் அதை நியாயப்படுத்தும் போக்கு தான். இரண்டாவது மது விலக்கு. இன்று இது குறித்து திமுகவும், அதிமுகவும் பேசுவதற்கு கூட தார்மீகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த தேர்தல் அசாதாரணமான ஒன்று. ஆட்சியிலிருக்கும் கட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி. ஆனால் அந்த அதிருப்தியை பாரம்பரிய எதிர்க் கட்சியான திமுகவால் பயன்படுத்தவோ ஒருங்கிணைக்கவோ முடியவில்லை. கிட்டதட்ட ஆறுமுனைப் போட்டி. உடனடி அரசியல் லாபத்தையும் கணக்கெடுக்காது எது மற்ற அரசியல் கட்சிகளை இந்த இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து விலக்கி வைக்கிறது. கணக்கு 2016'ஐ பற்றியல்ல, 2021 பற்றி. மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது ஒரு நீண்ட காலப் பயணம். இதற்கான முயற்சியில் எண்ணிக்கை பலத்தில் இன்று சரிவு ஏற்பட்டாலும், நாளை நம்பிக்கை மிக்க மாற்றாக வளர முடியும் என்னும் ஒரே நோக்கம்தான் இதில் அடங்கி இருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளில் இருந்து கிரானைட் ஊழல் வரை மக்கள் பார்த்து சலித்தாகி விட்டது. இவர்கள் சுற்று முடிந்தது, இனி அவர்களுக்கு தரலாம் என்னும் நிலையை இனிமேலும் மக்கள் எடுக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் முதல்முறை முழுமையான லகான் மக்கள் கைகளில். மார்க்ஸின் கூற்றுப்படி, வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறது. முதல்முறை துன்பியலாகவும். இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும். இனிமேலும் அரசியலை கேலிக்கூத்தாக்க தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.




– கபிலன் இல.

(clkabilan@gmail.com).

11/3/16

ஆர்த்தி'கள், இமையங்'கள், தேவைகள் – கபிலன்

(நிலாமுற்றம் வலைதளத்தில் நான் எழுதிய கட்டுரை)


"கலை கலைக்கானது" என்ற காலம் போய், கலை மக்களுக்கானது என்னும் காலம் உருவாகி வருவதன் தாக்கத்தின் எதிரொலியே தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய ஆரோக்கிய சூழலின் வெளிப்பாடு. அதிலும் இனி வரும் காலம், தலித் இலக்கியத்தின் காலம் என பல்வேறு மார்க்சிய, அம்பேத்கரிய அறிஞர்கள் முதல் நாட்டின் முக்கிய எழுத்தாளுமைகளின் கூற்று இங்கு நாம் கவனிக்கத்தக்கது. ஏனெனில், மக்களின் குரல் என்பதையும் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதே இதன் பிரதான ஆன்மா. ஆம், பேசாப் பொருளைக் குறித்து பேசுவது தானே கலைஞனின் வேலை?




இமையமும் இலக்கியமும்




தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் இமையத்தின் பங்கு தனித்துவமானது. காலம்தோறும் மனித மனம் வெற்றியை நோக்கியே தனது பார்வையை குவிக்கிறது என்றால், இலக்கியமோ என்றும் சோகத்தையே தனது பாடுபொருளாக கொண்டுள்ளது, அது துன்பியலையே பெரும்பாலும் பேசுகிறது. அது பேரிலக்கியங்களில் இருந்து இன்றைய நாவல் வரை. தமிழ் இலக்கியத்திலும் ஜெயமோகன் முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை இப்படியான வகைமையிலேயே எழுதுகின்றனர். இமையமும் இவ்வாறு துன்பியலையே தனது கதைகள் வழியாக பேசுகிறார். ஆனால் யாருடைய துன்பியலை? இங்குதான் நான் மேற்குறிப்பிட்ட "தனித்துவம்" கவனிக்கப்பட வேண்டும். இமையம் விளிம்புநிலை மக்களின் துன்பியலை பேசுகிறார்.







தோட்டியும் தமிழிலக்கியமும்




தமிழ் இலக்கிய தளத்தில் முதல்முறையாக விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசியது "தோட்டியின் மகன்" நாவல். அதுவும் மொழிபெயர்ப்பு தான். 1946'ல் மலையாளத்தில் எழுதப்பட்ட தோட்டியின் மகனின் மொழிபெயர்ப்பை 1952லேயே முடித்துவிட்ட சுந்தர ராமசாமியால், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து 2000'ல் தான் தமிழில் புத்தகமாக கொண்டுவர முடிந்துள்ளது. இதை குறித்து வருத்தத்துடன் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏன் 1940'லேயே மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளையால் சாதிக்க முடிந்ததை, தமிழில் நாற்பது ஆண்டுகள் கழித்து தான் நம்மாள் நெருங்கவே முடிகிறது? நமது தமிழ் பதிப்புத் துறை அவ்வளவு "புனிதப்படுத்தப்" பட்டிருந்ததா? இதனை ஒட்டி இன்று இமையம் போன்ற எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை நம்மாள் புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் பூமணி, இமையம் போன்றோரின் வருகைக்கு பிறகான சமீப ஆண்டுகளில் தான் தமிழில் முதல் "தூப்புக்காறி" உருவாகியுள்ளாள். மேலும் கடந்த வருடம் வெளியாகியுள்ள கௌதம சன்னாவின் "குறத்தியாறு" முக்கியமான படைப்பு.










நிலாமுற்றம்




இத்தகைய பின்னணியோடு நமது பார்வை விரியும் போது, இமையத்தின் படைப்புகளின் வீரியத்தை அதளவில் புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் இமையத்தின் "பெத்தவன்", "சாவுச்சோறு" படைப்புகளை இந்த வார நிலாமுற்றத்தில் பேச எடுத்துக் கொண்ட ஆர்த்தி பெரிதும் பாராட்டுக்கு உரியவர். ஏனெனில் இந்த படைப்புகளை நோக்கிய கவனத்தை ஏற்படுத்துதலே ஆர்த்தி செய்துள்ள பெரிய காரியமென்றும், அதுவே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கமாக என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு படைப்பு வெளியாகி விட்டால் அதுசார்ந்த விசயங்கள் யாவும் சரியாகி விடாது. தொடர்ந்து அது விவாதத்துக்கு உள்ளாகும் போதும், பரவலாக்கப் படும்போது தான் அது சாத்தியம். அதை நிலாமுற்றம் தொடர்ந்து செய்கிறது. அந்த செய்கையை அற்புதமான வகையில் இன்னும் ஒருபடி மேலே நகர்த்தி இருக்கிறார் ஆர்த்தி.




பெண்ணும் ஒடுக்குமுறையும்



ஒரு சடங்கோ, ஒரு நம்பிக்கையே, மதமோ அல்லது "ஒழுக்கவிதிகளோ", பெண்ணின் தலையில் ஏற்றுவதில்தான் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் ஆகப்பெரும் சாதனை அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். இந்த இடத்தில் இதை முற்போக்காகப் பார்த்தால் காந்தி தனது போராட்ட களத்தில் எந்தளவு பெண்களை நம்பினார் என நினைத்துப் பார்க்கலாம். பெண்களின் வலிமையை முற்போக்கானவர்களும் சரி, பிற்போக்கானவர்களும் சரி, எந்தளவு புரிந்து வைத்துளனர் என்பதை நாம் உணர முடிகிறது. "பெத்தவனில்" வரும் பெண்கள் அப்படி இருக்கின்றனர். மிகவும் மூர்க்கமான சாதியுணர்வோடு பெண்கள் உலாவுகின்றனர். தந்தைக்கு மகள் மீது உண்டாகும் பரிவுகூட அம்மாவுக்கு ஏற்படுவதில்லை. இது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. சரியோ தவறோ ஒரு விசயத்தில் பெண்கள் எடுக்கும் உறுதியான முடிவென்பது அவர்கள் இலக்கை அடையும் வரை அவர்களை ஓயச்செய்வதே இல்லை. இந்த இடத்தில் சாதியத்தின் கொடூரத்தை நினைத்தால் நமது அமைதி குலைகிறது. தெரிந்தோ தெரியாமலோ பெண்களே சாதிகளை காப்பவர்களாகவும், தலையில் தூக்கி சுமப்பவர்களாகவும் மாற்றப் பட்டுள்ளனர். அனைத்து பெருமை கற்பிதங்களும் அவர்களை வைத்தே கட்டப்படுகின்றன. இதை அவர்கள் உணராத வரை இதற்கு தீர்க்கமான ஓர் முடிவு இல்லை. எனவே இமையம் தன் கதைகள் மூலம் பெண்களிடம் பேசுகிறார். மிகவும் நிதானமாக, ஆனால் யதார்த்தமான தொனியில் பெண்ணிடம் உரையாடுகிறார். மனசாட்சியை எழுப்புகிறார். முடிவில் அவள் தன் நிலையை அறிந்து கதறுகிறாள், இதற்கு எப்படி முடிவு காண்பது என பதைபதைக்கிறாள்.




நேரடி உணர்வும், நேர்மையும்


மேலே குறிப்பிட்ட அதே பரபரப்பு தான் ஆர்த்தியிடமும் அவளது பேச்சில் காணமுடிந்தது. உண்மையில் இமையம் பெண்களுடன் நிகழ்த்தும் உரையாடலை நான் தனித்தே பார்க்க விரும்புகிறேன். ஆம், ஆண் ஊசலாட்டமானவன். அவனது மனநிலை வேறானது. எனில் பெண் சமூக, உளவியல் நிலை முழுக்க வித்தியாசமானது. பெத்தவன் கதையை நான் வாசித்து இருக்கிறேன் (இங்கு சாவுச்சோறு முழுதும் வாசிக்கவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அது என்னுள் ஏற்படுத்திய தாக்கமானது ஒரு சில கண்ணீர்த் துளியுடன் கடந்து போய்விடக் கூடியது. ஆனால் என் வகுப்பு தோழி, அதை படித்து முடித்ததும் ஓர் இரவு முழுக்க அழுததாகச் சொன்னாள். அன்று அதை வெறும் தனிப்பட்ட ஒருவளின் நிலையாக பார்த்த நான், இந்த நிகழ்வில் ஆர்த்தியிடம் இயல்பாக தெரிந்த அந்த அறச்சீற்றத்தின் மூலம், இந்த உண்ர்வுநிலையில் ஒரு பொது தன்மை இருப்பதை புரிந்துக் கொண்டேன். ஆண்களுக்கு எப்படியோ, பெண்களிடம் இமையத்தின் சொற்கள் நேரடித் தாக்கத்துடன் செல்கின்றன. இப்படியாக ஆர்த்தியின் பதிவு முழுமையான நேர்மையுடன் இருந்தது. அவள் அடிக்கடி கோடிட்ட "இந்த மாதிரியான சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்" என்னும் வார்த்தைகள் நாம் அடிக்கடி நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று.








தேவை இமைய"ங்கள்




சரி, இமையத்தினால் இன்று ஒரு ஆர்த்தியை (இங்கு ஆர்த்தி என்பதை பெண் என புரிந்து கொள்க), நம்மிடையே பார்க்க முடிந்துருக்கிறது. இன்னும் பல்வேறு ஆர்த்திகள் உருவாகி இருக்ககூடும். ஆனால் ஒரு இமையம் மட்டுமே போதுமா? இன்றைய நாளில் இமையங்களின் தேவை அதிகம். எனவே நமக்கு வேண்டியதெல்லாம் "இமையங்கள்" (இதை பால் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டாம்). அது ஒரு ஆணாகவோ, அல்லது ஆசிரியராகவோ இருக்க வேண்டும் என தேவையில்லை. பெண்களைக் குறித்து ஆண் பேச, பெண்களே ஏன் அதை விரிவாக பேசக்கூடாது என்பதே கேள்வி. பெண்கள் இனி எழுத வரவேண்டும். எழுத்தில் கவிதை உலகை தாண்டி பெண்கள் வரவேண்டும். அதிகளவில் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டும். பேசுபொருளாக மட்டும் இல்லாமல் இனி அதை பேசுபவளாகவும் பெண் மாற வேண்டும்.
நான் குறிப்பட வேண்டிய இன்னொன்று, நான் இங்கு ஆர்த்தியின் "திறனாய்வு" குறித்து திறனாய்வு செய்ய எழுதவில்லை. அந்த நிகழ்வின் தாக்கத்தை என்னளவில் விவரித்துள்ளேன். அவ்வளவே. இறுதியாக "பெத்தவன்" குறித்த வண்ணதாசனின் வார்த்தைகள் கவனப்படுத்த வேண்டியவை, "இனிவரும் காலங்களுக்கான தேடலின் முடிவு தான், பெத்தவன்". 

(http://nilamutrampsgcas.blogspot.in/2016/03/blog-post.html?m=1)

10/11/15

தீபாவளி - ஒரு குறிப்பு



 முதலில் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!








தீபாவளி மதரீதியில் அனுசரிக்கப்படும் ஒரு பண்டிகை, மூடவழக்கங்கள் நிறைந்து நிற்கும் ஓர் நிகழ்வு, தேவையில்லாமல் காசை கரியாக்க வாய்க்கும் சந்தர்பம். இதுதான் தீபாவளி குறித்த எனது உடனடி மதிப்பீடு. ஆனால் இப்போது அல்ல, ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பு.







இதனிடையில் முற்போக்கு இலக்கியங்களின் வழி, பகுத்தறிவு சார்ந்த அதீத தர்க்க உண்ர்வும் இந்நிலையை மேலும் என்னுள் கூர்தீட்டியது என்றே சொல்ல வேண்டும்.


கடவுள் மறுப்பு என்பது கடவுள் மறுப்பு மட்டுமே அல்ல, அதன் நீட்சியான மனித தன்மையற்ற வழக்கங்களின், மூடத்தனமான நடைமுறைகளுக்கான மறுப்பு தான், அதன் முழுமையான பொருள். வரலாற்றில், பெரியார் நம் காலத்தில் என இல்லாமல் பல்வேறு காலக் கட்டங்களிலும் தொடர்ந்து தப்பாகவே புரிந்து கொள்ளப்பட்ட, தவறாக interpret செய்யப்பட்ட (செய்யப் பட்டு வரும்) ஒரு நபர் என்பது என் கணிப்பு. பெரியார் என்றவுடன் கடவுள் எதிர்ப்பு (மறுப்பு கூட அல்ல), பிள்ளையார் சிலை உடைப்பு(அதுவும் முழுமையான உண்மை அல்ல)  என்பது மட்டுமே பலருக்கும் நினைவில் உதிப்பதிலிருந்தே இக்கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், தனது ஆத்ம நண்பர் ராஜாஜி வீட்டிற்கு வரும் பொழுது எல்லாம், விபூதி தட்டை ஏந்தி நிற்பவர் தான் பெரியார். அவர் மட்டுமல்ல, இறை நம்பிக்கை உள்ள யாவரையும் கூட பெரியார் மதித்தே அன்பு செலுத்தி வந்தார். ஆனால், பெரியாரை கோடிட்டுக் காட்டுகிற நம்மில் எத்தனை பேர் அத்தகைய சகிப்புத் தன்மையுடன் இன்று இருந்து வருகிறோம். வெறுப்பு என்பது இருமுனை உள்ள ஈட்டிப் போல வளர்ந்து வருவதை எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்?..




இந்தியா பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள் கொண்டோரின் தொடர்ச்சியான உரையாடல் களமாக இருந்து வரும் ஓர் மாபெரும் நிலப்பரப்பு. இங்கே யாரும் யாருடைய நம்பிக்கைகளையும், அபிலாசைகளையும் துவேஷிப்பது வரலாற்றில் மதிப்பளிக்க கூடியதாக இருந்ததில்லை. பல்வேறு தத்துவங்களும் அனாயசமாக அதனதன் போக்கில் தனித்துவத்தை இழக்காது விரவி இருந்த இடம்தான் இந்தியா எனும் துணைக்கண்டம். அப்படியான தத்துவங்களில் வரலாறெங்கும் எப்போதும் இருந்து வந்த ஓர் தத்துவம் தான் நாத்திகமும். இந்தியாவில் நாத்திக வாதம் எங்கிருந்தும் திடிரென புதிதாக எழுந்து வந்து குதித்து விடவில்லை. இறை ஏற்பு பெரிதும் பெருகி இருந்த காலங்களில் எல்லாம் கூடவே இறை மறுப்பும் இருந்தே தான் வந்துள்ளன. அதுதான் நமது மரபு.  நமது வரலாற்றில் எல்லாவற்றிற்கும் இடம் இருந்தே தான் வந்துள்ளன. தத்துவரீதியிலான இத்தகைய விசாரனைகள், பிற்காலத்தில் உருவ வழிபாடு, சகிப்பின்மைக்கு எதிராக வளர்ச்சி அடைந்த போக்கு தான் மார்க்கமாக உருப்பெற்ற புத்தம், ஜெயினம் எல்லாம். என்னளவில் புத்தரையே இந்தியாவின் முதன்மையான பகுத்தறிவுவாதி என்பேன். வேத மறுப்பில் தொடங்கியது அவரது முற்போக்கு. இப்படி தான் இருந்து வந்துள்ளது நமது பண்பாட்டு தொடர்ச்சி.




ஆனால் அத்தகைய சகிப்பு தன்மை மிகுந்த  நிலை இன்று கேள்விக் குள்ளாகி இருப்பதுதான் நமது காலத்தின் பெரும் அவலம். சகிப்பின்மை என்பது இன்றைய இணைய வெளியின் டாப் ட்ரெண்டிங்காக மட்டும் அல்ல, நமது அவலத்தின் ஒரு சின்னம். ஆத்திகர்களிடம் என்று மட்டுமல்ல, நாத்திகர்களிடமும் சகிப்புத்தன்மை குறித்த புரிதல் அருகி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.




அத்தகைய ஓர் சிக்கலான குழப்பத்திற்கு தான் வழியாகிப் போகிறது, "நாத்திகம் பேசுவோர் தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லலாமா என்னும் கேள்வி.




இதற்கு எளிமையான பதில்,

"சொல்லலாம்".




                  தர்க்கரீதியாக இதை விளக்க வேண்டுமானால்




* முதலில் தீபாவளி இந்து பண்டிகை அல்ல, சமணர் பண்டிகை.




* பக்தி மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னரே வைணவ, சைவ சமயங்கள் பிற சமய நம்பிக்கைகள், பண்டிகை மட்டும் வழக்கங்களை சுவீகரித்து கொள்ளத் தொடங்கி விட்டது.




* இங்கே கூறப்படும் "நரகாசுரன்" கதை எல்லாம் பின்னாளில் புனையப்பட்ட ஒன்று. வடநாட்டு பகுதிகளிலும் இதுபோல பல கதைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ப அவை மாறியுள்ளன.




* இதற்கு மிகச்சிறந்த உதாரணம், புத்தத்தின் புனித நிறமாக கருதப்படும் காவி நிறத்தை, தங்களது மத அடையாளமாக மாற்றி இப்போது ஹிந்துத்துவ வாதிகள் "கறை" படுத்தியுள்ளனரே அதைப்போல.




(புத்தரை விஷ்ணுவின் இன்னொரு அவதாரமாக மத அடிப்படைவாதிகள் தொடர்நது கூறி வருவதை நினைவுபடுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்)




* மேலும் ஓர் உதாரணமாக புலால்- அதாவது இறைச்சி- உண்ணாமையை சொல்லலாம். சைவர்களாகட்டும் வைணவர்களாகட்டும் ஆதியில் யாகத்திற்காக குதிரைகளை பலியிட்டவர்கள் தான் என்பதை மறந்திடக் கூடாது.




* விஜயநகர பேரரசுக்கு முன்னர் இந்நிகழ்வு மிகப்பெரும் அளவில் கொண்டாடப்பட்டதில்லை. பட்டாசு வெடிக்கும் பழக்கம் கூட அண்மையில் சீனாவிடமிருந்து கடன் வாங்கியது தான்.




–மேலும் உபரித்தகவலாக, அடிப்படைவாதிகள் சமீப காலமாக அதிக வெறுப்புடன் குறிவைத்து தாக்கி வருவது, மன்னர் அசோகர். ஏனெனில் இந்திய வரலாற்றில் அவருடைய இடம் தவிர்க்க முடியாதது. அந்த வரலாற்று நாயகனை தங்களுடைய சுய லாபங்களுக்காக வெவ்வேறு வகைகளில் திரித்துக் கூறும் வேளையை இப்போது மும்முரமாக்கி உள்ளனர். அதனொரு பகுதிதான் பிகார் தேர்தலில் அசோகர் புஷ்ப்பக(இந்த தொணியில் தான் இருக்கும்) விமானத்தை வைத்திருந்தார் என்னும் பொய்ப் பிரச்சாரம். அவர் பௌத்த மதத்தை தழுவியவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.




     --------------------------




சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். தீபாவளி என்பது இந்துப் பண்டிகை அல்ல, இந்தியாவின் பண்டிகை. இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும், தொடர்ந்து கொண்டாடி வந்த, இன்றும் கொண்டாடி வரும் ஓர் பண்டிகை. சிறுவயதில் இருந்து சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே வளர்ந்து வந்தவன் நான், ஆனால் ஒருபோதும் தீபாவளி கொண்டாட்டங்களில் எங்களிடம் இருந்து அவர்கள் விலகி நின்றது இல்லை.  ஒட்டுமொத்த மக்களும் குதூகலத்துடன் லயிக்கும் ஒரு தருணம் அது. ஆம், இந்தியாவின் கொண்டாட்ட மனநிலையின் ஒரு பெருநிகழ்வாகவே தீபாவளியைப் பார்க்கிறேன். நிலையற்ற வாழ்கையை பாரதூரமாக கடக்கும் நிலையிலேயே இன்றையகால மனிதன் இருந்து வருகிறான். அதுவும் இன்றைய சூழல், அடிப்படை தேவைகளும் பூர்த்தியடையாத, மேலும் பொருளாதார தேவைகளால் வாழ்க்கை நெருக்கடிகளை சமாளிப்பதே பெரும் பிரயத்தனம் என ஆகிவிட்டது. அத்தகைய யதார்த்தத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் இயல்பான ஓர் கொண்டாட்டத்திற்கான நாளாகவே தீபாவளியைப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறன். மிகப்பெரிய வணிக குழுமங்களின் வியாபார நெடி இந்த பண்டிகை கொண்டடாடங்களின் ஊடாகப் பரவி இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் நான் குறிப்பது அத்தகைய கொண்டாட்டத்தை அல்ல. இவ்விதமான சின்ன சின்ன கொண்டாட்டங்களும் இல்லாமல் போனால் மனிதன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வாய்ப்பு என்பதே சிறிதும் இன்றி மேலும் நெக்குருகி போவான் என்பதே யதார்த்தம். தொடர் அழுத்தங்களின் பிரதியாகவே அவன் வாழ்வு மாறிப் போகும். எனவே, எளிய மக்களின் கொண்டாட்டங்களை வரவேற்போம். நாமும் கொண்டாடுவோம்.




சித்தாந்தத்தின் பெயரால் மனிதனின் கொண்டாட்டங்களை புறக்கணிப்பதும், அலட்சியப்படுத்துவதும் கூட பகுத்தறிவு ஆகாது.

நாம் கொண்டாடவில்லை என்றால் கூட பரவாயில்லை, அடுத்தவர்களின் கொண்டாட்டத்திற்கு தடைக்கற்களாக நமது வாதங்களை கொஞ்சம் அடுக்காமலாவது இருப்போமே.

   °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நண்பர்கள், தோழர்கள், சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

களைக்கட்டட்டும் கொண்டாட்டங்கள்...