11/3/16

ஆர்த்தி'கள், இமையங்'கள், தேவைகள் – கபிலன்

(நிலாமுற்றம் வலைதளத்தில் நான் எழுதிய கட்டுரை)


"கலை கலைக்கானது" என்ற காலம் போய், கலை மக்களுக்கானது என்னும் காலம் உருவாகி வருவதன் தாக்கத்தின் எதிரொலியே தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய ஆரோக்கிய சூழலின் வெளிப்பாடு. அதிலும் இனி வரும் காலம், தலித் இலக்கியத்தின் காலம் என பல்வேறு மார்க்சிய, அம்பேத்கரிய அறிஞர்கள் முதல் நாட்டின் முக்கிய எழுத்தாளுமைகளின் கூற்று இங்கு நாம் கவனிக்கத்தக்கது. ஏனெனில், மக்களின் குரல் என்பதையும் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதே இதன் பிரதான ஆன்மா. ஆம், பேசாப் பொருளைக் குறித்து பேசுவது தானே கலைஞனின் வேலை?




இமையமும் இலக்கியமும்




தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் இமையத்தின் பங்கு தனித்துவமானது. காலம்தோறும் மனித மனம் வெற்றியை நோக்கியே தனது பார்வையை குவிக்கிறது என்றால், இலக்கியமோ என்றும் சோகத்தையே தனது பாடுபொருளாக கொண்டுள்ளது, அது துன்பியலையே பெரும்பாலும் பேசுகிறது. அது பேரிலக்கியங்களில் இருந்து இன்றைய நாவல் வரை. தமிழ் இலக்கியத்திலும் ஜெயமோகன் முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை இப்படியான வகைமையிலேயே எழுதுகின்றனர். இமையமும் இவ்வாறு துன்பியலையே தனது கதைகள் வழியாக பேசுகிறார். ஆனால் யாருடைய துன்பியலை? இங்குதான் நான் மேற்குறிப்பிட்ட "தனித்துவம்" கவனிக்கப்பட வேண்டும். இமையம் விளிம்புநிலை மக்களின் துன்பியலை பேசுகிறார்.







தோட்டியும் தமிழிலக்கியமும்




தமிழ் இலக்கிய தளத்தில் முதல்முறையாக விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசியது "தோட்டியின் மகன்" நாவல். அதுவும் மொழிபெயர்ப்பு தான். 1946'ல் மலையாளத்தில் எழுதப்பட்ட தோட்டியின் மகனின் மொழிபெயர்ப்பை 1952லேயே முடித்துவிட்ட சுந்தர ராமசாமியால், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து 2000'ல் தான் தமிழில் புத்தகமாக கொண்டுவர முடிந்துள்ளது. இதை குறித்து வருத்தத்துடன் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏன் 1940'லேயே மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளையால் சாதிக்க முடிந்ததை, தமிழில் நாற்பது ஆண்டுகள் கழித்து தான் நம்மாள் நெருங்கவே முடிகிறது? நமது தமிழ் பதிப்புத் துறை அவ்வளவு "புனிதப்படுத்தப்" பட்டிருந்ததா? இதனை ஒட்டி இன்று இமையம் போன்ற எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை நம்மாள் புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் பூமணி, இமையம் போன்றோரின் வருகைக்கு பிறகான சமீப ஆண்டுகளில் தான் தமிழில் முதல் "தூப்புக்காறி" உருவாகியுள்ளாள். மேலும் கடந்த வருடம் வெளியாகியுள்ள கௌதம சன்னாவின் "குறத்தியாறு" முக்கியமான படைப்பு.










நிலாமுற்றம்




இத்தகைய பின்னணியோடு நமது பார்வை விரியும் போது, இமையத்தின் படைப்புகளின் வீரியத்தை அதளவில் புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் இமையத்தின் "பெத்தவன்", "சாவுச்சோறு" படைப்புகளை இந்த வார நிலாமுற்றத்தில் பேச எடுத்துக் கொண்ட ஆர்த்தி பெரிதும் பாராட்டுக்கு உரியவர். ஏனெனில் இந்த படைப்புகளை நோக்கிய கவனத்தை ஏற்படுத்துதலே ஆர்த்தி செய்துள்ள பெரிய காரியமென்றும், அதுவே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கமாக என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு படைப்பு வெளியாகி விட்டால் அதுசார்ந்த விசயங்கள் யாவும் சரியாகி விடாது. தொடர்ந்து அது விவாதத்துக்கு உள்ளாகும் போதும், பரவலாக்கப் படும்போது தான் அது சாத்தியம். அதை நிலாமுற்றம் தொடர்ந்து செய்கிறது. அந்த செய்கையை அற்புதமான வகையில் இன்னும் ஒருபடி மேலே நகர்த்தி இருக்கிறார் ஆர்த்தி.




பெண்ணும் ஒடுக்குமுறையும்



ஒரு சடங்கோ, ஒரு நம்பிக்கையே, மதமோ அல்லது "ஒழுக்கவிதிகளோ", பெண்ணின் தலையில் ஏற்றுவதில்தான் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் ஆகப்பெரும் சாதனை அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். இந்த இடத்தில் இதை முற்போக்காகப் பார்த்தால் காந்தி தனது போராட்ட களத்தில் எந்தளவு பெண்களை நம்பினார் என நினைத்துப் பார்க்கலாம். பெண்களின் வலிமையை முற்போக்கானவர்களும் சரி, பிற்போக்கானவர்களும் சரி, எந்தளவு புரிந்து வைத்துளனர் என்பதை நாம் உணர முடிகிறது. "பெத்தவனில்" வரும் பெண்கள் அப்படி இருக்கின்றனர். மிகவும் மூர்க்கமான சாதியுணர்வோடு பெண்கள் உலாவுகின்றனர். தந்தைக்கு மகள் மீது உண்டாகும் பரிவுகூட அம்மாவுக்கு ஏற்படுவதில்லை. இது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. சரியோ தவறோ ஒரு விசயத்தில் பெண்கள் எடுக்கும் உறுதியான முடிவென்பது அவர்கள் இலக்கை அடையும் வரை அவர்களை ஓயச்செய்வதே இல்லை. இந்த இடத்தில் சாதியத்தின் கொடூரத்தை நினைத்தால் நமது அமைதி குலைகிறது. தெரிந்தோ தெரியாமலோ பெண்களே சாதிகளை காப்பவர்களாகவும், தலையில் தூக்கி சுமப்பவர்களாகவும் மாற்றப் பட்டுள்ளனர். அனைத்து பெருமை கற்பிதங்களும் அவர்களை வைத்தே கட்டப்படுகின்றன. இதை அவர்கள் உணராத வரை இதற்கு தீர்க்கமான ஓர் முடிவு இல்லை. எனவே இமையம் தன் கதைகள் மூலம் பெண்களிடம் பேசுகிறார். மிகவும் நிதானமாக, ஆனால் யதார்த்தமான தொனியில் பெண்ணிடம் உரையாடுகிறார். மனசாட்சியை எழுப்புகிறார். முடிவில் அவள் தன் நிலையை அறிந்து கதறுகிறாள், இதற்கு எப்படி முடிவு காண்பது என பதைபதைக்கிறாள்.




நேரடி உணர்வும், நேர்மையும்


மேலே குறிப்பிட்ட அதே பரபரப்பு தான் ஆர்த்தியிடமும் அவளது பேச்சில் காணமுடிந்தது. உண்மையில் இமையம் பெண்களுடன் நிகழ்த்தும் உரையாடலை நான் தனித்தே பார்க்க விரும்புகிறேன். ஆம், ஆண் ஊசலாட்டமானவன். அவனது மனநிலை வேறானது. எனில் பெண் சமூக, உளவியல் நிலை முழுக்க வித்தியாசமானது. பெத்தவன் கதையை நான் வாசித்து இருக்கிறேன் (இங்கு சாவுச்சோறு முழுதும் வாசிக்கவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அது என்னுள் ஏற்படுத்திய தாக்கமானது ஒரு சில கண்ணீர்த் துளியுடன் கடந்து போய்விடக் கூடியது. ஆனால் என் வகுப்பு தோழி, அதை படித்து முடித்ததும் ஓர் இரவு முழுக்க அழுததாகச் சொன்னாள். அன்று அதை வெறும் தனிப்பட்ட ஒருவளின் நிலையாக பார்த்த நான், இந்த நிகழ்வில் ஆர்த்தியிடம் இயல்பாக தெரிந்த அந்த அறச்சீற்றத்தின் மூலம், இந்த உண்ர்வுநிலையில் ஒரு பொது தன்மை இருப்பதை புரிந்துக் கொண்டேன். ஆண்களுக்கு எப்படியோ, பெண்களிடம் இமையத்தின் சொற்கள் நேரடித் தாக்கத்துடன் செல்கின்றன. இப்படியாக ஆர்த்தியின் பதிவு முழுமையான நேர்மையுடன் இருந்தது. அவள் அடிக்கடி கோடிட்ட "இந்த மாதிரியான சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்" என்னும் வார்த்தைகள் நாம் அடிக்கடி நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று.








தேவை இமைய"ங்கள்




சரி, இமையத்தினால் இன்று ஒரு ஆர்த்தியை (இங்கு ஆர்த்தி என்பதை பெண் என புரிந்து கொள்க), நம்மிடையே பார்க்க முடிந்துருக்கிறது. இன்னும் பல்வேறு ஆர்த்திகள் உருவாகி இருக்ககூடும். ஆனால் ஒரு இமையம் மட்டுமே போதுமா? இன்றைய நாளில் இமையங்களின் தேவை அதிகம். எனவே நமக்கு வேண்டியதெல்லாம் "இமையங்கள்" (இதை பால் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டாம்). அது ஒரு ஆணாகவோ, அல்லது ஆசிரியராகவோ இருக்க வேண்டும் என தேவையில்லை. பெண்களைக் குறித்து ஆண் பேச, பெண்களே ஏன் அதை விரிவாக பேசக்கூடாது என்பதே கேள்வி. பெண்கள் இனி எழுத வரவேண்டும். எழுத்தில் கவிதை உலகை தாண்டி பெண்கள் வரவேண்டும். அதிகளவில் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டும். பேசுபொருளாக மட்டும் இல்லாமல் இனி அதை பேசுபவளாகவும் பெண் மாற வேண்டும்.
நான் குறிப்பட வேண்டிய இன்னொன்று, நான் இங்கு ஆர்த்தியின் "திறனாய்வு" குறித்து திறனாய்வு செய்ய எழுதவில்லை. அந்த நிகழ்வின் தாக்கத்தை என்னளவில் விவரித்துள்ளேன். அவ்வளவே. இறுதியாக "பெத்தவன்" குறித்த வண்ணதாசனின் வார்த்தைகள் கவனப்படுத்த வேண்டியவை, "இனிவரும் காலங்களுக்கான தேடலின் முடிவு தான், பெத்தவன்". 

(http://nilamutrampsgcas.blogspot.in/2016/03/blog-post.html?m=1)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக