11/3/15

தலைப்பு: உலகம் நம் உள்ளங் கைக்குள்! வாட்ஸ்ஆப், பேஸ்புக், நெட் என ஒரு மொபைல் இருந்தால் போதும். நாம் தனிமையை உணரவே மாட்டோம். செல்போனோடு நீங்கள் எந்த அளவு கன்னக்ட் ஆகி இருகிறீர்கள். உங்களின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் அது எப்படித் தீர்மனிக்கிறது என்பதை செம ஜாலியாக எழுதி அனுப்புங்களேன்.






உலகம் நம் உள்ளங்கைக்குள்'! உண்மைதான், ஆனால் இன்று நிலைமை மேலுமொரு படி முன்நகர்ந்து விட்டதாகவே உணர்கிறேன். ஆம், உலகம் நம் விரலிடுக்குகளில் அடங்கிவிட்டிருக்கிறது என்பதுதான் அது. மாற்றமடைந்து வரும்- மேலும் பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும்-இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் நிகழலாம். இன்றைய தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் அப்படி தந்தது என்ன? தகவல் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? உலக நடப்புகளோடு நாம் நம்மை எவ்வாறு பினைத்துக் கொண்டுள்ளோம்?




நாங்கெல்லாம் அந்தக் காலத்துல'




பொதுவாகவே இங்கு கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களிடம், 'தொன்றுதொட்டு' இந்திய மரபாகவே கருதக் கூடியளவிற்கு ஒரு பழக்கமுண்டு, அது இன்றைய தலைமுறையினரிடம் தங்களது சுய (தலைமுறை) பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது. எது எடுத்தாலும் அந்தக் காலத்தில் 'அது' நல்லாயிருந்தது, இந்தக் காலத்தில் 'இது'. நல்லாயில்லை 'பஜனை' தான். தலைவர் கவுண்டமணி காலத்திலிருந்தே கூட இவர்கள் இப்படித்தான். அதற்கு அப்பவே தலைவர் செம்மையான 'கவுண்டரும்' கொடுத்திருப்பார். ஆனால் இன்றும் - சந்தானம் தாண்டி சூரி காலம் வரையிலும்- இவர்களது அனுகுமுறையில் மாற்றமில்லாது தொடர்வது சற்றே கவலைக்குரிய(!) ஒன்றுதான்.




"ஒழுக்க" உபதேசங்கள்




ஒழுக்கத்துக்கும் தொழில்நுட்பத்திற்கும் 'முடிச்சு' போடுவதென்பது இங்கு காலங்காலமாக தொடர்ந்து அரங்கேறி வரும் ஒரு காமெடிதான். இது வந்தால், அது போய்விடும், அது வந்தால் இது போய்விடும் எனும் அடித்தளமற்ற பழமைவாத பிதற்றல்கள் ஓர் தொடர்கதையே. உதாரணத்திற்கு செல்போன் என்றதுமே, உடனே அதனால் ஏற்பட வாய்ப்பிருக்ககூடிய எதிர்மறையான விஷயங்களையே பட்டியலிடுவார்கள் 'பழமையிஸ்ட்கள்'. சாதகம், பாதகம் என்பது சகலத்திலும் உண்டு என்பதை சமயத்தில் வசதியாக மறந்துவிடுகிறார்கள். கம்ப்யூட்டர் வரத் துவங்கிய காலத்திலிருந்தே இவர்களுக்கு இதே 'புராணம் தான்'. அவ்வகையில் இந்தியாவில் 'பாதகப் பட்டியல்களே' புதிய தொழில்நுட்பத்திற்கான வரவேற்பு எனப் புரிந்துகொள்ளலாம்.




'தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள்'


செல்போன் வந்ததிலிருந்தே நெடுநேரம் இனையத்தை பயன்படுத்துகிறான் என்பது முதல் குற்றச்சாட்டு. இணையம் என்பது எங்கோ எட்டாத தொலைவில் இருந்த காலம்போய், இன்று விரல் நுனிக்கு எட்டியிருப்பது, நிச்சயம் முன்னேற்றம் தான். முன்பெல்லாம் பல நூல்நிலையங்களில் தேடியும் கிடைத்திராத பல நூல்கள், இன்று கூகுள் செய்தால் PDF ஆகவும், 'கிண்டில்'லும் தாராளமாகக் கிடைக்கின்றன. இது அவனுக்கான குறிப்புகளை எடுக்கவும்,கல்விக்கும் பயன்படாதா?

இதை,எதையும் கணக்கிலெடுக்காது, மட்டையடியாக சிலர் இணையத்தினால் தான்,பாலியல் காணொளிகள், படங்கள் எனப் பார்த்து 'கெட்டுக் குட்டி சுவர்' ஆகிறார்கள் என 'சான்றிதழ்' அளிப்பார்கள். அவர்களிடம் கேட்க ஒன்றே ஒன்றுதான் உள்ளது. பாலியல் குறித்த(PORNOGRAPHY SITES) இணையதளங்கள் பெருமளவில் இன்று பெறுகியிருக்கிறது என்றாலும், இணையம் என்பது இதற்கு மட்டும்தான் பயன்படுகிறதா? செல்போன், இணையம் அதன் வரவு, வளர்ச்சி எல்லாம் ஒரு இருபது ஆண்டுகளாகத்தான், அதற்கு முன்பு இருந்தவர்க்கு எல்லாம் பாலியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லையா? அல்லது இணையம் வந்தபிறகுதான் பாலுறவு குறித்த அறிவே உதித்ததா? எந்த நாகரிகத்தில் வாழ்வபராயினும், ஓர் வயது முகிர்வுக்குப் பிறகு, எதிர் பாலினத்தவரின் மீதான பாலியல் ஈர்ப்பென்பது வெகு இயல்பானது,இயற்கையானதும் கூட. ஆதிகாலத்திலிருந்தே நிலைமை இதுதான்,அப்போது என்ன இணையமா இருந்தது.

அடுத்து மணிக்கணக்கில் பேஸ்புக், டிவிட்டர்ல மூழ்கிக்கிடக்கிறான் என்பது. இந்தக் கேள்விகள் எல்லாம் நிரூபணமில்லாத பொதுப் புத்தியில் இருந்து எழக்கூடியவை. வெற்றுப் பேச்சுகளுக்கும், வெறும் கேலி கிண்டலுக்கு மட்டும் இன்று சமூகவலைதளங்கள் பயன்படுத்த படுவதில்லை, மாற்றுச் சிந்தனைகளுக்கும் அது வழிகோல்கிறது. சமூக-அரசியல்-பொருளாதார தளத்திலான விவாதங்களும், விழிப்புணர்வு மிக்க பல உரையாடல்களும் அன்றாடம் சமூக வலைதளங்களில் நடைபெறாமல் இல்லை. அரபு நாட்டில் ஏற்பட்ட இணையப் புரட்சி அளவிற்கு இல்லையாயினும் இதுவும் ஒரு நல்ல தொடக்கம் தானே. அதுக்கெல்லாம் இன்னும் டைம் எடுக்கும் பாஸு.




எப்போதும் "தொடர்பு" எல்லைக்குள்


எதையும் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்கும் தலைமுறை இன்றைய தலைமுறை. எதையும் எளிதாக எடுத்துக், கடந்து செல்லும் மனநிலை இன்றைய மனநிலை. இவ்வாறு மேலதிகமாக எப்போதும் கொண்டாட்டம் நிரம்பிய சூழலில் திளைத்திருந்தாலும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இல்லாமல் இருப்பது இல்லை. அனு நிமிடமும் தன்னைக் குறித்த பிரக்ஞையுடனே இருக்கிறான். ஃபேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்ஆப் என இன்றைய இளைஞன் மிகவும் 'பிஸியானவன்'. வெளியில் இருந்து அட்வைஸ் பண்ணுபவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை தான். தன் நண்பர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் இன்று இணையம் மூலம் ஒருவனுக்கு அத்துப்படி. ஒருவிதத்தில் சமூக வலைதளங்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்தற்கான ஜன்னலாகவும் இருக்கிறது. பெரும்பாண்மையான நேரத்தை இணையம் விழுங்கி விடுவதை உணர்ந்தாலும், அதிலிருந்து தன்னை தனித்துக் கொள்ள இன்றைய இளைஞன் விரும்பவில்லை, அதை அவன் சமூகத்திலிருந்தே தன்னை அன்னியப் படுத்திக் கொள்வதாகவே உணர்கிறான். வெகு விரைவில் அத்தியாவசிய பட்டியலில், இணையமும் இணையலாம்.




தனிமையா?அப்படின்னா!




தனிமை என்பது என்றும் நிரந்தரமான ஒன்றல்ல, அவ்வப்போது நேரும் ஓர் நிகழ்வு, தனிமை ஓர் அடர்த்தியான உணர்வு, அதன் இருப்பு என்பது காலச் சூழலைப் பொருத்து தான். முன்புபோல தற்போது தனிமை ஆட்படுதலுக்கான சூழல் குறைவு. வலிந்து ஒருவர்மேல் தினிக்கப்பட்டால் தான் உண்டு. எதிலும் மனதை தேக்கிக் கொண்டு, வருந்தும் நிலை இன்று இல்லை. ஏனெனில் எங்கும் எவருடனும், எப்போதும் நாம் தொடர்பில் இருந்து கொண்டேதான் இருக்கிறோம், ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமல்ல, பலருடனும். முகநூலை திறந்தால் நேரம் போவதே தெரியாமல் பதிதாய் வாசிக்க ஆயிரமாயிரம் பதிவுகள் எப்போதும் இறைந்து கிடக்கின்றன. பத்தாததுக்கு நம் வீடுகளை எப்போதுமே ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கிறது தொ(ல்)லைகாட்சி, இதைத்தவிர ஒருபெரும் மக்கள் கூட்டத்தை எப்போதும் தன் கைக்குள் தொடர்ந்து வைத்தபடியே இயங்கி வருகிறது சினிமா என்னும் பிரமாண்ட ஊடகம். இதையெல்லாம் தாண்டி தான் தனிமை எனும் உணர்வு நிலைக்குள் பிரவேசிக்க இயலும் என்பதே இன்றைய எதார்த்தம்.




வாசிப்பற்ற இளைஞர் சமூகமா?




"இன்றைய இளைஞர்கள், புத்தகங்கள் வாசிப்பதில்லை". இது இன்று பெரும்பாண்மையானோரின்-குறிப்பாக படைப்புத் தளத்தில் உள்ளோரின்- கருத்தாக உள்ளது. இதை எங்கிருந்து (அ )எந்தக் கருதுகோளின் அளவில் முன் வைக்கிறார்கள், ஏதேனும் 'புள்ளி' விபரத் தகவலா எனத் தெரியவில்லை. ஆனால், அச்சுப் புத்தக/சந்தை பிரதிகளின் விற்பனையின்(எண்ணிக்கை) அடிப்படையில் தான் இக்கூற்று எழுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இணையதள சேவை இளைஞர்களிடத்தில் பல்கிப் பெருகியுள்ள இன்றைய காலத்தில், 'புத்தக விற்பனையை' மட்டும் வைத்து 'வாசிப்பு இல்லை அல்லது குறைந்து வருகிறது' என முடிவுக்கு வரலாமா என தெரியவில்லை.

ஆனால் இன்றைய இளைஞர்கள் நிறைய வாசிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அதுவும் முந்தைய காலங்களை விட அதிகமாக. பக்கங்கள் அளவில் அத்தியாயங்கள்/தலைப்பு அளவில் அவை கனக்கிலடங்காது. மெய்நிகர் வாசிப்பே இன்றைய பரவலான கட்டம். அச்சு புத்தகங்களாக வாங்கி, வாசிப்பது வேண்டுமானால் இன்று குறைந்திருக்கலாம். ஆனால் வாசிப்பு குறையவில்லை. அது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாளடைவில் இனையத்தில் வாசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே தான் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வாசிப்பது எல்லாம் இங்கு எந்தக் கணக்கிலும் அடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஒரு நாளைக்கு எத்தனை வார்த்தைகள்,வரிகள் வாசிப்பார்களோ, அதைவிட அதிகமாகத்தான் இன்று வாசிப்பின் நிலை இருக்கிறது, அதாவது உயர்ந்திருக்கிறது.




        "உலகம் என்றும் நம்மருகே"




உலகத்தோடு நாம் ஒருசேர இயங்க, நம்மை மேம்படுத்திக்கொள்ள, தொழில்நுட்பம் தான் உதவுகிறது. அது உலகத்தை நம் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது. அதன் பல கூறுகள் வாழ்வில்,மறுக்கமுடியாதளவில் நீக்கமற நிறைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் நிகழ்த்திய மாற்றங்கள் ஏராளம். நாம் கற்பனை கூட செய்திராத பல சாகசங்களை அது நிகழ்த்தி உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டு மனிதர்களுக்கு அளித்த ஆகப்பெருங்கொடை நவீன கைப்பேசி. அது பெருங் கூரையின் கீழ் அனைத்து மக்களையும் இணைக்கிறது, நாடு, இனம்,தேசம் கடந்து.


(விகடன் மாணவர் பயிற்சி திட்டத்திற்கு அனுப்பியக் கட்டுரை)

14/2/15

கடந்து செல்லா காதல்....

கரைந்தோடும் நினைவுகளின் வழியே
கவிதை பாட, சொற்களைத் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள்
சொற்கள் கிட்டலாம்
என் வலியை  உணர்த்தலாம்
எனில் உன் அன்பை போல
அதுவும் தற்காலிகமானதாக
இல்லாது இருத்தலே
போதுமானது
எனக்கு .

கண்களின் ஓரம்
கசிந்தோடும் கண்ணீரின் ஊடே
உன்னுடனான எனது அன்பை
மீட்க முயற்சிக்கிறேன்
நாள்தோறும்
தோற்றுத்தான் போனேன்
இன்றும்.

அன்பிற்கான தேடலின்போது ஆன
எனது தோல்விகள்
புதிதா என்ன

நீ கொடுத்த மலர்களை
மட்டுமல்ல
வீசிச்சென்ற முட்களையும் கூட
தாங்கியே நிற்கிறேன்
தயக்கமின்றி

மீளாதப் பொழுதுகள் பல
தாளாத தனிமையில்
வெம்மை படர்ந்த
அந்தி வெளியில் ,
அன்பிற்கான எனது
பிரயாசைகள்
தொடர்ந்து வண்ணமே
உள்ளன

நீ விட்டுச்சென்ற சுவடுகளோடு
அன்பிற்கான படிப்பினையாக
உன் நாட்கள் என
வாழ்வின் அடுத்த
படிநிலையை
மெல்ல கடக்கவே நினைக்கிறன்

எக்காலத்துக்கும் ஆன அன்பென
இவ்வுலகில் ஏதேனும் உண்டா, என 
எஞ்சி நிற்கும் கேள்வியோடே
தொடர்கிறேன்
எனது பயணத்தை
"அன்பு கிலோ எத்தனை?"
எனக் கேட்காத
உலகத்தை
நோக்கி ...

24/12/14

பெரியார் பார்வைகள்- நன்றி எழுத்தாளர் விநாயக முருகன்



நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்.


எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "


சுயமரியாதை

-----------------------

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமேயாகும்.

மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்
.

சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்

மனிதன் உலகில் தன் சுயமரிaயாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.


நான் யார்?

------------------

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக்காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.

"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.


சமுதாயச் சீர்திருத்தம்

------------------------------------

சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வே கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்: மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். ஒரு சமூகமென்றிருந்தால் அச் சமூகத்தில் ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும். சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும். சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும் பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்குக் கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால் அக்கடவுளைப் பஞ்சமனும் சூத்திரனும் தொழலாமா?



கல்வி

-----------

எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய் இருக்கிறது. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவ ர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.

முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.


தமிழ்மொழி

---------------------

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன். மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.


எழுத்துச் சீர்திருத்தம்

------------------------------------

எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பதிப்புகளிலும் எழுத்துக்களிலும் ``ஈ'' என்கின்ற எழுத்தானது ``இ'' எழுத்தையே மேலே சுழித்த வட்டவடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.

இன்னும் 400, 500 ஆண்டுகளுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அநேகம், வேறு வடிவத்தில் இருந்து வந்திருக்கின்றன. அதுபோலவே இப்போ தும் சில எழுத்துக்களை மாற்ற வேண்டியதும் சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசிய ம் என்றும், அனுகூல மென்றும்பட்டால் அதைச் செய்யவேண்டியது த èன் அறிவுடைமை. ஒரு மொழியோ, ஒரு வடிவமோ எவ்வளவு பழையது - தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும். எழுத்துக்களை உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது புதிய எழுத்துக்களை சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும். மொழியின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்தே ஒழிய வேறில்லை.


திருக்குறள்

-------------------

திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அîதாடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

அறிவினால் உய்ந்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களைக் கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

கம்பராமாயணத்தில் 100 பாட்டும், கந்தபுராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளில் 10 பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்ட வல்லது.

குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவ·ர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.

குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பட்ட நூல்.


கூட்டுறவு

-----------------

கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகும்.

நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.

மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.

கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக-கு­கலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.

நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அîதாகதியாகிவிடுமென்பது நிச்சயம்.


பொருளாதாரம்

-------------------------

கடவுளுக்குக்கு நன்றி செலுத்தும் முறையிலும் இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே, இந்த நாட்டின் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப் பார்க்கலாம்.

மக்களக்குள்ள சமுதாயக் கொடுமை தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பலவகைகளிலும் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் ­க்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.

செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து, அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச்சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.

நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.


திருமணம்

-------------------

மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள் - அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற எண்ணமில்லாது பழக வேண்டும்.

மணமக்கள் சந்ததி உற்பத்தி செய்வதில் அவசரப்பட்டுவிடக் கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.

ஒருவனுடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.

திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது.


அரசியல்

---------------

பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.

நம் நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும், சமூக ஒற்றுமையும் உண்டாக்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.

பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம், பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது.

இலஞ்சம் ஒழிய வேண்டுமானால், தனி உடைமைத் தர்மம் அழிந்து, ஒழிந்து, பொதுஉடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.

சமுதாயத் துறைக்கு பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்.


பொதுத்தொண்டு

----------------------------

தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் - பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவர் பொதுவாழ்வில் எப்படி நடந்துகொண்ண வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.

பிறப்பதும் சாவதும் இயற்கை, ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.

சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும்.

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது.

மனிதன் திருடுகிறான், பெய் பேசுகின்றான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை, ஆனால் சாதியைவிட்டுத் தள்ளிவிடப்படுகிறான், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.


கருத்துகள்

--------------

சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையாது. ஒழுக்கம் என்பது, சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்தபடியே செல்லுவதுமாகும்.

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால், இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

தொழிலாளி-முதலாளித்தன்மை முறையே இருக்கக் கூடாது. வேலை செய்பவர்கள் பங்காளியாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத்தனம்.

நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தபற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.

தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.



பகுத்தறிவு

------------------

இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.

கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


அறிவியல்

-------------------

இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.

இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிக ளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவ ண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய ந வீன வசதிகள், தீ உண்டாக்க சக்கிமுக்கிக் கல்லை உராய்ந்îதாம் , இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்ச èர விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந் துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த து போலவே இருக்கிறதே!.

கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படி யே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.

சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.

மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.


இலக்கியம்

-------------------

எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அளவையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.

இலக்கியம் என்பது நாகரீகத்தை புகத்த வேண்டும். மக்களிடம் உ யரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.

இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப் படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கைக்கு உயிர் மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக் கும் ஏற்றதாக என்பது என் கருத்து.

நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநி லை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின்மீதே "இலக்கிய மறுமலர்ச்சி" பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மதம், கடவுள் சம்பந்தமற்ற - யாவரும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்கள் ஞான முடையவர்களாவார்கள்.


கலைகள்

---------------


"தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்" தமிழில் இசை இருக்க வேண்டும்" என்று கூறுபவர்களை நையாண்டிசெய்து, அவ்வாறு கூறுவதும் கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவுகொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நல்ல தமிழில் - இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும்,அன்பையும், மானமிக்க சமத்துவ வாழ்வினையும், வரலாற்றினையும், நேர்மையையும், நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழியின் ஆர்வத்தையும், ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டும் பாட்டுக்களையே பாடுமாறு செய்தல் வேண்டும்.

நாடகங்களிலே இரண்டு விதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பது. வசன ரூபமாய்க் காண்பிப்பவைகளையே மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால்தான் என்ன?

எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாதோய் இருக்க வேண்டும்.


ஒழுக்கம்

---------------

பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது.

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.

பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.

ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.


பெண் உரிமை

-----------------------

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்வதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகம்.

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

கற்புக்காகக் கணவனின் திருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.


இளைஞர்கள்

----------------------

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.

வாலிபப் பருவம், அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப் போல் மிகப் பத்திரமாய் காப்பாற்றப்படவேண்டிய பருவம்.

பித்தலாட்ட, மத சம்மந்தமான மூட நம்பிக்கைகள் அனைத்தையும் ஒழிக்க வாலிபர்கள் முனைய வேண்டும்.

வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழகப்படுத்துவதேயில்லை, பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழக்குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாதோகும்.

இளைஞர்கள் குழந்தைகளுக்ச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள், பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கொங்குக் காணப்படுகின்றîதா, கூட்டம் கு­கலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.


பல்துறை

---------------

சிலர் சாமியைப் பார்த்தால் சாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும் சாமியும் தீட்டுப்ட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும் உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒரு விதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?

காசி, ·ரி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர்விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறîதா, ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்?

எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற மறையில் செலவு செய்து வருகிறானே அவன்தான் பிரபு ஆவான். நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம். சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந் தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே அது வகுப்புத் துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?


---------பெரியார் (மறைவு தினம் 24 டிசம்பர் 1973