உலகம் நம் உள்ளங்கைக்குள்'! உண்மைதான், ஆனால் இன்று நிலைமை மேலுமொரு படி முன்நகர்ந்து விட்டதாகவே உணர்கிறேன். ஆம், உலகம் நம் விரலிடுக்குகளில் அடங்கிவிட்டிருக்கிறது என்பதுதான் அது. மாற்றமடைந்து வரும்- மேலும் பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும்-இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் நிகழலாம். இன்றைய தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் அப்படி தந்தது என்ன? தகவல் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? உலக நடப்புகளோடு நாம் நம்மை எவ்வாறு பினைத்துக் கொண்டுள்ளோம்?
நாங்கெல்லாம் அந்தக் காலத்துல'
பொதுவாகவே இங்கு கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களிடம், 'தொன்றுதொட்டு' இந்திய மரபாகவே கருதக் கூடியளவிற்கு ஒரு பழக்கமுண்டு, அது இன்றைய தலைமுறையினரிடம் தங்களது சுய (தலைமுறை) பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது. எது எடுத்தாலும் அந்தக் காலத்தில் 'அது' நல்லாயிருந்தது, இந்தக் காலத்தில் 'இது'. நல்லாயில்லை 'பஜனை' தான். தலைவர் கவுண்டமணி காலத்திலிருந்தே கூட இவர்கள் இப்படித்தான். அதற்கு அப்பவே தலைவர் செம்மையான 'கவுண்டரும்' கொடுத்திருப்பார். ஆனால் இன்றும் - சந்தானம் தாண்டி சூரி காலம் வரையிலும்- இவர்களது அனுகுமுறையில் மாற்றமில்லாது தொடர்வது சற்றே கவலைக்குரிய(!) ஒன்றுதான்.
"ஒழுக்க" உபதேசங்கள்
ஒழுக்கத்துக்கும் தொழில்நுட்பத்திற்கும் 'முடிச்சு' போடுவதென்பது இங்கு காலங்காலமாக தொடர்ந்து அரங்கேறி வரும் ஒரு காமெடிதான். இது வந்தால், அது போய்விடும், அது வந்தால் இது போய்விடும் எனும் அடித்தளமற்ற பழமைவாத பிதற்றல்கள் ஓர் தொடர்கதையே. உதாரணத்திற்கு செல்போன் என்றதுமே, உடனே அதனால் ஏற்பட வாய்ப்பிருக்ககூடிய எதிர்மறையான விஷயங்களையே பட்டியலிடுவார்கள் 'பழமையிஸ்ட்கள்'. சாதகம், பாதகம் என்பது சகலத்திலும் உண்டு என்பதை சமயத்தில் வசதியாக மறந்துவிடுகிறார்கள். கம்ப்யூட்டர் வரத் துவங்கிய காலத்திலிருந்தே இவர்களுக்கு இதே 'புராணம் தான்'. அவ்வகையில் இந்தியாவில் 'பாதகப் பட்டியல்களே' புதிய தொழில்நுட்பத்திற்கான வரவேற்பு எனப் புரிந்துகொள்ளலாம்.
'தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள்'
செல்போன் வந்ததிலிருந்தே நெடுநேரம் இனையத்தை பயன்படுத்துகிறான் என்பது முதல் குற்றச்சாட்டு. இணையம் என்பது எங்கோ எட்டாத தொலைவில் இருந்த காலம்போய், இன்று விரல் நுனிக்கு எட்டியிருப்பது, நிச்சயம் முன்னேற்றம் தான். முன்பெல்லாம் பல நூல்நிலையங்களில் தேடியும் கிடைத்திராத பல நூல்கள், இன்று கூகுள் செய்தால் PDF ஆகவும், 'கிண்டில்'லும் தாராளமாகக் கிடைக்கின்றன. இது அவனுக்கான குறிப்புகளை எடுக்கவும்,கல்விக்கும் பயன்படாதா?
இதை,எதையும் கணக்கிலெடுக்காது, மட்டையடியாக சிலர் இணையத்தினால் தான்,பாலியல் காணொளிகள், படங்கள் எனப் பார்த்து 'கெட்டுக் குட்டி சுவர்' ஆகிறார்கள் என 'சான்றிதழ்' அளிப்பார்கள். அவர்களிடம் கேட்க ஒன்றே ஒன்றுதான் உள்ளது. பாலியல் குறித்த(PORNOGRAPHY SITES) இணையதளங்கள் பெருமளவில் இன்று பெறுகியிருக்கிறது என்றாலும், இணையம் என்பது இதற்கு மட்டும்தான் பயன்படுகிறதா? செல்போன், இணையம் அதன் வரவு, வளர்ச்சி எல்லாம் ஒரு இருபது ஆண்டுகளாகத்தான், அதற்கு முன்பு இருந்தவர்க்கு எல்லாம் பாலியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லையா? அல்லது இணையம் வந்தபிறகுதான் பாலுறவு குறித்த அறிவே உதித்ததா? எந்த நாகரிகத்தில் வாழ்வபராயினும், ஓர் வயது முகிர்வுக்குப் பிறகு, எதிர் பாலினத்தவரின் மீதான பாலியல் ஈர்ப்பென்பது வெகு இயல்பானது,இயற்கையானதும் கூட. ஆதிகாலத்திலிருந்தே நிலைமை இதுதான்,அப்போது என்ன இணையமா இருந்தது.
அடுத்து மணிக்கணக்கில் பேஸ்புக், டிவிட்டர்ல மூழ்கிக்கிடக்கிறான் என்பது. இந்தக் கேள்விகள் எல்லாம் நிரூபணமில்லாத பொதுப் புத்தியில் இருந்து எழக்கூடியவை. வெற்றுப் பேச்சுகளுக்கும், வெறும் கேலி கிண்டலுக்கு மட்டும் இன்று சமூகவலைதளங்கள் பயன்படுத்த படுவதில்லை, மாற்றுச் சிந்தனைகளுக்கும் அது வழிகோல்கிறது. சமூக-அரசியல்-பொருளாதார தளத்திலான விவாதங்களும், விழிப்புணர்வு மிக்க பல உரையாடல்களும் அன்றாடம் சமூக வலைதளங்களில் நடைபெறாமல் இல்லை. அரபு நாட்டில் ஏற்பட்ட இணையப் புரட்சி அளவிற்கு இல்லையாயினும் இதுவும் ஒரு நல்ல தொடக்கம் தானே. அதுக்கெல்லாம் இன்னும் டைம் எடுக்கும் பாஸு.
எப்போதும் "தொடர்பு" எல்லைக்குள்
எதையும் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்கும் தலைமுறை இன்றைய தலைமுறை. எதையும் எளிதாக எடுத்துக், கடந்து செல்லும் மனநிலை இன்றைய மனநிலை. இவ்வாறு மேலதிகமாக எப்போதும் கொண்டாட்டம் நிரம்பிய சூழலில் திளைத்திருந்தாலும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இல்லாமல் இருப்பது இல்லை. அனு நிமிடமும் தன்னைக் குறித்த பிரக்ஞையுடனே இருக்கிறான். ஃபேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்ஆப் என இன்றைய இளைஞன் மிகவும் 'பிஸியானவன்'. வெளியில் இருந்து அட்வைஸ் பண்ணுபவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை தான். தன் நண்பர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் இன்று இணையம் மூலம் ஒருவனுக்கு அத்துப்படி. ஒருவிதத்தில் சமூக வலைதளங்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்தற்கான ஜன்னலாகவும் இருக்கிறது. பெரும்பாண்மையான நேரத்தை இணையம் விழுங்கி விடுவதை உணர்ந்தாலும், அதிலிருந்து தன்னை தனித்துக் கொள்ள இன்றைய இளைஞன் விரும்பவில்லை, அதை அவன் சமூகத்திலிருந்தே தன்னை அன்னியப் படுத்திக் கொள்வதாகவே உணர்கிறான். வெகு விரைவில் அத்தியாவசிய பட்டியலில், இணையமும் இணையலாம்.
தனிமையா?அப்படின்னா!
தனிமை என்பது என்றும் நிரந்தரமான ஒன்றல்ல, அவ்வப்போது நேரும் ஓர் நிகழ்வு, தனிமை ஓர் அடர்த்தியான உணர்வு, அதன் இருப்பு என்பது காலச் சூழலைப் பொருத்து தான். முன்புபோல தற்போது தனிமை ஆட்படுதலுக்கான சூழல் குறைவு. வலிந்து ஒருவர்மேல் தினிக்கப்பட்டால் தான் உண்டு. எதிலும் மனதை தேக்கிக் கொண்டு, வருந்தும் நிலை இன்று இல்லை. ஏனெனில் எங்கும் எவருடனும், எப்போதும் நாம் தொடர்பில் இருந்து கொண்டேதான் இருக்கிறோம், ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமல்ல, பலருடனும். முகநூலை திறந்தால் நேரம் போவதே தெரியாமல் பதிதாய் வாசிக்க ஆயிரமாயிரம் பதிவுகள் எப்போதும் இறைந்து கிடக்கின்றன. பத்தாததுக்கு நம் வீடுகளை எப்போதுமே ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கிறது தொ(ல்)லைகாட்சி, இதைத்தவிர ஒருபெரும் மக்கள் கூட்டத்தை எப்போதும் தன் கைக்குள் தொடர்ந்து வைத்தபடியே இயங்கி வருகிறது சினிமா என்னும் பிரமாண்ட ஊடகம். இதையெல்லாம் தாண்டி தான் தனிமை எனும் உணர்வு நிலைக்குள் பிரவேசிக்க இயலும் என்பதே இன்றைய எதார்த்தம்.
வாசிப்பற்ற இளைஞர் சமூகமா?
"இன்றைய இளைஞர்கள், புத்தகங்கள் வாசிப்பதில்லை". இது இன்று பெரும்பாண்மையானோரின்-குறிப்பாக படைப்புத் தளத்தில் உள்ளோரின்- கருத்தாக உள்ளது. இதை எங்கிருந்து (அ )எந்தக் கருதுகோளின் அளவில் முன் வைக்கிறார்கள், ஏதேனும் 'புள்ளி' விபரத் தகவலா எனத் தெரியவில்லை. ஆனால், அச்சுப் புத்தக/சந்தை பிரதிகளின் விற்பனையின்(எண்ணிக்கை) அடிப்படையில் தான் இக்கூற்று எழுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இணையதள சேவை இளைஞர்களிடத்தில் பல்கிப் பெருகியுள்ள இன்றைய காலத்தில், 'புத்தக விற்பனையை' மட்டும் வைத்து 'வாசிப்பு இல்லை அல்லது குறைந்து வருகிறது' என முடிவுக்கு வரலாமா என தெரியவில்லை.
ஆனால் இன்றைய இளைஞர்கள் நிறைய வாசிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அதுவும் முந்தைய காலங்களை விட அதிகமாக. பக்கங்கள் அளவில் அத்தியாயங்கள்/தலைப்பு அளவில் அவை கனக்கிலடங்காது. மெய்நிகர் வாசிப்பே இன்றைய பரவலான கட்டம். அச்சு புத்தகங்களாக வாங்கி, வாசிப்பது வேண்டுமானால் இன்று குறைந்திருக்கலாம். ஆனால் வாசிப்பு குறையவில்லை. அது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாளடைவில் இனையத்தில் வாசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே தான் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வாசிப்பது எல்லாம் இங்கு எந்தக் கணக்கிலும் அடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஒரு நாளைக்கு எத்தனை வார்த்தைகள்,வரிகள் வாசிப்பார்களோ, அதைவிட அதிகமாகத்தான் இன்று வாசிப்பின் நிலை இருக்கிறது, அதாவது உயர்ந்திருக்கிறது.
"உலகம் என்றும் நம்மருகே"
உலகத்தோடு நாம் ஒருசேர இயங்க, நம்மை மேம்படுத்திக்கொள்ள, தொழில்நுட்பம் தான் உதவுகிறது. அது உலகத்தை நம் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது. அதன் பல கூறுகள் வாழ்வில்,மறுக்கமுடியாதளவில் நீக்கமற நிறைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் நிகழ்த்திய மாற்றங்கள் ஏராளம். நாம் கற்பனை கூட செய்திராத பல சாகசங்களை அது நிகழ்த்தி உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டு மனிதர்களுக்கு அளித்த ஆகப்பெருங்கொடை நவீன கைப்பேசி. அது பெருங் கூரையின் கீழ் அனைத்து மக்களையும் இணைக்கிறது, நாடு, இனம்,தேசம் கடந்து.
(விகடன் மாணவர் பயிற்சி திட்டத்திற்கு அனுப்பியக் கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக