5/4/20

புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதைக் குறித்த ஒரு வாதம்- கட்டுரை

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).



                     சிறுகதைக்கான இணைப்பு 


இந்த பதிவை எழுதுவதற்கு முன் சற்றேறக்குறைய ஒரு மணி நேரமாக இந்தியாவில் நடந்த முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சுபகுணராஜன் எழுதிய பழைய வலைப்பதிவை தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தப்பாடில்லை. நினைவில் இருந்ததிலிருந்து குறிப்பிட வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் ஜாதிய படிநிலை சார்ந்து மக்கள் பெரும்பிரிவாக முதன்முதலாக வகுக்கப்பட்டதை குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டின் அரசியல் பண்பாட்டு தனித்தன்மைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஒரு சிறிய நிலப்பரப்பில்- வரலாறு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சின்னங்களுக்கு அப்பாற்பட்டு- பல்வேறு சமூக குழுக்கள் "ஆண்ட பரம்பரை" பதாகையை கோருவதையும், சிலர் அதற்கு ஏகபோகம் கோருவதையும் எப்படி புரிந்துகொள்வது? சமூக குழுக்களின் அரசியல் கோரலால், போட்டியால், அதிகாரம் தமிழகத்தில் சமூகப் பரவலாக்கம் கண்டுள்ளது. வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஆட்சியில் இருந்த மு.கருணாநிதி ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் போது, பிரத்யேக ஒதுக்கீடாக இல்லாமல் "மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்" எனும் புதிய வகைப்பாட்டில் பிற சமூகங்களையும் இணைத்தே அமலாக்கினார். ஒரு சமூகம் மற்ற சமூகங்கள் மீது நிகழ்த்தும் "சமூக நீதி சூறையாடல்" எனும் சம கால சொல்லாடல்கள் எதுவும் எழுவதற்கு  முன்பாகவே கருணாநிதியின் தேர்ந்த அரசியல் பிரக்ஞை அவரை மேற்சொன்ன விஷயத்தில் வழிநடத்தியுள்ளதாக புரிந்து கொள்ளலாம். இந்த சமூக நீதி சார்ந்த செயல்முறை அரசியல் லாவகம் (Dexterity), களத்தில் இருந்து அல்லாது வேறு எங்கிருந்து அவர் கிடைக்கப் பெற்றிருக்க முடியும்? சமூகத்தின் விளிம்புநிலையில் வைக்கப்பட்டு இருந்த இசை வேளாளர் சமூகத்தில் இருந்து வந்த கருணாநிதியின் செயல்திறன் இவ்வகையான நுணுக்கங்களுடன் அணுகக்கூடியதென்றால், தமிழகத்தில் பரந்து விரிந்த, ஆனால் பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தில் இருந்து வந்த காமராஜரின் அரசியல் அதிகார பரவலாக்க சாத்தியப்பாடு என்னவாக இருந்தது?       






கடந்த ஒரு நூற்றாண்டில் நாடார்கள் குறித்த (அதிகாரப்பூர்வ அல்லது வேறு ஏதேனும்) பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த எனது அறிவின் போதாமையோடே புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதையை அணுக வேண்டியுள்ளது. மிகச் சிறியதாக கதை அமைந்திருப்பினும், நீதிக்கதை வடிவில், அது வைக்கும் விமர்சனம் கூரியது. கதையின் ஆரம்பத்திலேயே "கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காக பாடு பட்டதனால், உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்து இருக்கும்", தேவ இறக்க நாடார் அறிமுகமாகிறார். மேஜிஸ்ட்ரேட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவர் தன்முன் கூன்றிலேற்றப்படும் நபர்மீது திட்டவட்டமாக கட்டமைக்கப்பட்ட நீதியமைப்பின் சார்பில்  தீர்ப்பளிப்பவராக உள்ளார். நீதி, பங்கேர்ப்பின் வழியே வழங்குதல் மற்றும் பகிருதல், குறித்த முழுமையான சிந்தனை உதிக்காத, குறுகியே கருதுகோள்களின் வழியே "நீதி அளிக்கப்பட்டு" வந்த காலமது. நீதி என்பது பெற்றுக்கொள்வோரைக் கவனத்தில் எடுத்து கொள்ளாது,  வழங்குவோரின் அற-நிலைப் பாடுகளிலிருந்தே பாவிக்கப்பட்டு வந்த காலம் அது. அந்தக் காலகட்ட சமூகத்தின், மேனிலையாக்கதின் குறுஞ்சித்தரிப்பாக நிகழ்கிறது கதையில் வரும் தேவநாடாரின் பகுதி. 







நாடார்கள் என்றவுடன் பின்னிணைப்பாக கிறிஸ்தவம் என்ற பிம்பம் எப்போது உருவானது என தெரியவில்லை. ஆனால் நான் முதல் முதலாக நாடார்கள் குறித்து சமூகவியல் தளத்தில் தெரிந்து கொண்டது தமிழ் நாட்டில் கிறிஸ்துவ மதத்தினர் மத்தியில் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு குறித்த ஆய்விலிருந்து தான். கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்களில் தமிழகத்தில் கணிசமான பகுதியினர் நாடார்கள். கேரளத்தில்- ஒரு சில பத்தாண்டுகள் முன்வரையிலும்- இன்னும் மோசமான நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அங்கே கிறிஸ்துவமும் வாய்ப்புக்களுக்கான வாயிற்கதவாக அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு மதத்தில் இருந்து -படிநிலை பாகுபாடு, ஒடுக்குமுறை, வாய்ப்பு மறுக்கப்படுதல் ஆகிய காரணங்களால்- இன்னொரு மதத்திற்கு இடம் பெயர்வதால் எத்தகைய நேர்மறை விளைவுகளை, வளர்ச்சியை எதிர்கொள்ளலாம் எனும் வாதத்திற்கு நாடார்களின் தரப்பு வலு சேர்க்கிறது. சமூக-பண்பாட்டு மூலதனத்தின் (social capital) வளர்ச்சியும், பெருக்கமும், பகிர்தலும் ஒட்டுமொத்த சமூகத்தையும் (community) பெருமளவில் சென்று சேர்ந்துள்ளதை கவனிக்க முடிகிறது. இந்திய சமூகத்தின் அடிப்படை பண்பான குறுகிய-வட்ட விசுவாசத்தை விட்டு வெளியேறி பரந்துபட்ட அடையாளத்தினுள் பொருத்திக்கொள்ளும் போக்கு நாடார்களின் சமூக விரிவாக்கம் குறித்த விவாதத்திலும் காண முடிகிறது. ஆனால் இத்தருணத்தில் தமிழகதின் முக்கியமான அரசியல் பங்கேற்ப்பாளரான தொ.திருமாவளவன் 2016ம் ஆண்டு, தலித் மக்களின் அரசியல் போராட்டம் குறித்து ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தலித் மக்களின் பெரும் எண்ணிக்கையிலான மதமாறுதலால், நம்நாட்டின் வாக்கு அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பின் பின்னணியில், எவ்வாறு தங்களது அதிகார பேரத்தைக் குறைத்துக் கொண்டார்கள் எனப் பேசினார். அதே வேளையில், மதம் மாறிய தலித் மக்கள் போதிய சமூக அங்கீகாரத்தை பெற முடியாது "சிறுபான்மை" எனும் வட்டத்தினுள் சுருங்கி விடுவதைக் குறித்தும், தற்போதைய ஒன்றிய அரசின் வெறுப்பு அரசியலுக்கு இலக்காகுவதைக் குறித்தும் அங்கலாய்த்துக் கொண்டது பல காலம் நடைபெற்று வந்த இந்த விவாதத்தில் முக்கியமான இடையீடு.     







கதையின் மையத்தில் பால்ராஜின் விளித்தலான "விரியன் பாம்பு குட்டிகளே" என்பது கேலிக்குரிய உருவகமாக தெரிந்தாலும், அக்காலக்கட்டத்தில் ஆழ பதிந்து இருக்கும் ஒரு சாராரைக் குறித்த தப்பெண்ணத்தை (prejudice) வெளிப்படுத்துவதாகவே  உள்ளன. சுதந்திரத்திற்குமுன்பான காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் (கோட்டை- கொத்தளம் எனும் ஸ்தூல நிலை தாண்டி)  மட்டுமின்றி அவர்களது மதிப்பீடுகளும்  ஆளுமை செலுத்தி வந்தன. குதிரை என்பது இங்கே ஆடம்பரத்தின், ஆளுகையின் சின்னமாக மட்டுமல்லாது சாதாரண மக்களின் மாண்பை விடவும் ஒரு படி மேலானதெனும் படிமமாக  கதையினுள் உருக்கொள்கிறது. மேனிலையாக்கம் எனும் ஏணியில் ஏறி அமர்ந்திருப்பினும், போலச்செய்தல் எனும் சமூக கடமையின் பாற்பட்டு கடுமையான தண்டனையை குற்றவாளிக்கு விதித்து, வீடு திரும்பியதும் "பரலோகத்தின் தேவ பிதாவை அனைவருக்குமான மன்னிப்பிற்காக" யாசிக்கிறார் தேவ இறக்கம் நாடார். எளிமையான உருவக சித்தரிப்புகளுடன், விமர்சன சுளிப்புடன் கதையை, சமூகத்தின் இருவேறு தளத்தின் நிகழ்வை ஒப்பீட்டு முடிக்கிறார் புதுமைப்பித்தன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக