15/3/23

இலக்கியம் வாசிக்கும், இலக்கியம் வாசிக்கும் நண்பர்களுடைய, நண்பர்களுக்கு என் சிறு குறிப்பு

 



நம் தலைமுறையினர், குறிப்பாக 90களின் பிற்காலத்தை சேர்ந்தவர்களான, GenZ மற்றும் millennial’களுமே இச்சிறுகுறிப்பின் கரிசனத்துக்கு உட்பட்டவர்கள். எனினும் ஏனையோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விவாதம் தான் இது.

சமூகத்தில் நாம் மாற்றம் புரிய வேண்டும் என, சிலர் நேரிடையிலும் பலர் மறைமுகமாகவும் விழையும், ஒரு கருத்துருவாக களமாகவே இலக்கிய வாசிப்பு பயிற்ச்சியை, அது சார்ந்த உரையாடலை காணும் எண்ணத்தில் பலர் உள்புகுகிறார்கள். சிலரது சமூக மாற்றத்துக்கான அளவீடு என்பது அதே நோக்கத்தில் செயல்பட விழையும் உடனிருப்போரிடமும் இருந்து கூட வேறுபடும். சிலர் தன்னை பார்த்து ஒரு பத்து அல்லது இருபது நபர்கள் தங்களது ‘வழமையான’ அர்த்தமற்ற’ வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ‘அழகியல்’ நோக்கில் மற்றும் 'சிந்தனையில்' தேர்ச்சி பெற்று தனது ஆளுமையில் ஏற்றம் பெற்றாலோ அல்லது ‘சமூக மாற்றம்’ நோக்கி நடைபோட்டாலோ கூட ‘வெற்றி’ தான் என்பர். அதிலும் சிலர் ஒருபடி மேலேபோய், “ஒரே ஒருவர் கூட தங்களது வாழ்கையில் மைய்யமான மாற்றத்தை ஏற்படுத்தத் தக்க உத்வேகத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களெனில்” தனக்கு வெற்றியே என பெருமிதத்துடன் முன்வைப்பார்கள்.



ஆனால் ‘சமூக மாற்றத்திற்காக’ இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் அனைவரும் செயல்பட வேண்டும், அதற்கான திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்னும் நிலைப்பாடு வாசிப்பவர்களின் மேல் ஏற்றும் (புறவயமானதும், மனரீதிலுமான) அழுத்தம் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத் தெரியவில்லை. ‘சமூக மாற்றம்’ நோக்கி நீ செயல்படவில்லை என்றால் சமூக அநீதிகளுக்கான காரணிகளில் நீயும் ஒருத்தி/ஒருவன் எனும் குற்ற உணர்வின் பேரில், இலக்கிய அறநெறி அமைப்புகள், சமூக திரட்டலை மேற்கொண்டால் அது எவ்விதத்தில் ‘சமூக மாற்றத்தை’ வழிவகுக்கும், பேணும்? தனிநபர் சுதந்திரம் குறித்த உரையாடலே தமிழ் படைப்பிலக்கிய உலகில் அரிதிலும் அரிதானாக தென்படுகின்றதெனில் வாசிப்பவர்களிடையே “சமூக மூலமுதல்” (social capital) குறித்த உரையாடலோ, கவனமோ கூட இருப்பதில்லை. உன் அருகில் இருக்கும் ஒருவன் வண்ணதாசன் குறித்து இவ்வளவு அழகாக, நெக்குருகி பேசுகிறானே அவன் தந்தை ஒரு பொதுத்துறை வங்கி மேலாளர் தெரியுமா என்றக் கேள்வியோ; வாழ்க்கையில் 'உன்னதங்களை' பற்றிய அழகியல் பார்வையே முக்கியாமானது என சூளுரைக்கிறானே அவன் 'மேம்பட்ட' சமூகத்தில், அதாவது 'மேல் சாதி' என்னும் சமூகக் குழுவில் இருந்து வந்தவன் தெரியுமா? என்னும் கேள்விகளோ ஏன் இலக்கியம் வாசிப்பவர்களிடத்தில் இருப்பதில்லை என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? தொலைவில் தெரியும் (வெறும் நன்னம்பிக்கையிலான) வெளிச்சத்தை நோக்கி கண்மூடித்தனமாக நடைபோடும் குறுங்குழுக்களை, படைப்பு இலக்கிய வாசிப்பு வழியாக, சமூகத்தில் நடமாட விட்டுக்கொண்டு இருக்கிறோமா என்னும் கேள்வியும் எழாமலில்லை.



முதலில் ‘சமூக மாற்றதில்’ பங்கெடுக்க உனக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியேனும் இலக்கிய வாசிப்பை தொடங்குவோரிடமோ, இருப்போரிடமோ முன்வைக்கப்படுகிறதா? அல்லது நிகழ வேண்டிய ‘மாற்றம்’ ஏற்புடையதாயினும் நீ active agent’ஆக இருக்க விரும்பிகிறாயா அல்லது passive agent’ஆக இருக்க விருப்பப் படுகிறாயா என்னும் கேள்வியாவது விவாதிக்கப் படுகிறதா? காலம் போன காலம் வரையிலும் ஒன்றிய அரசாங்கத்தில் பணிபுரிந்துவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று,பின் தன் குடும்ப நிதிப் பாதுகாப்பு மற்றும் பூர்விக வளம் யாவற்றையும் பத்திரப்படுத்திவிட்டு, சவுகரியமான சமூக சூழலில் அமர்ந்து கொண்டு ஒருவன் “சமூக மாற்றம்” குறித்தும் “அறநெறிகளின் முதன்மை” குறித்தும், அவன் எதிர்ப்பார்க்கும் விழுமியங்கள் காணக்கிடைப்பின் அதை “சமூக கீழ்மை” என்றும் இருபது முப்பது ஆண்டுகளாக முன்வைத்து வருகிறான், அவனது ‘அதிகாரத்திற்கு’ உட்பட்டு அதை ஏற்றுக்கொண்டு வழிமொழியும் ஒரு பேதைக் கூட்டம் இக்காலத்தில் ‘இலக்கிய வாசிப்பாளர்கள்’ என்னும் போர்வையில் நம்மிடையே உருப்பெற்றுள்ளது.

முதலில் ‘சமூக மாற்றம்’ என்றால் என்ன? அதற்கு என்ன வரையறை? இந்த ‘சமூக மாற்றம்’ குறித்த கரிசனம் தவிர வேறு தேடலே இந்த சமூகத்தில் கிடையாதா? அல்லது இருக்க கூடாதா? வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ஏன் உங்களது இலக்கியத் தேடலாக இருக்க கூடாது? அதுபோக இந்த ‘சமூக மாற்றம்’ சார்ந்த இலட்சியவாதப் பேச்சுக்களை வீறு கொண்டு பேசியவர்கள் எல்லாம் இப்போது எவ்வளவு சொகுசான வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதாவது புலப்படுகிறதா? இப்படி ‘சமூகம்’ ‘திரட்சி’ (collective) குறித்து மார்தட்டியவர்கள் எல்லாம் இப்போது இயற்கையின் எழில், அதன் அழகியல், சிறுசிறு விடயங்களில் உன்னதங்களை காண்பது என சுருங்கிக் கொண்டதை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் தங்கள் வாயை திறந்து, இப்போதும் இனி வாருங்காலங்களிலும், சொல்ல மாட்டார்கள் தாங்கள் கடைப்பிடிப்பது “Art as an ‘escapism’” என்னும் வழமையை என்று. ஒருவேளை அதை அவர்களே இன்னும் உணராது இருப்பதால் கூட இருக்கலாம். எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் சிறுவயதில் திரைப்படம் பார்க்க ஆரம்பிக்கும்போது நேராக குரசாவா, சத்யஜித் ரே படங்களில் இருந்து ஆரம்பிக்கவில்லை அல்லவா? கவுண்டமணி காமடிகளில் இருந்தும், சுந்தர்.சி படங்களில் இருந்து தானே தொடங்கினீர்கள்? பிறகு படைப்பு இலக்கிய வாசிப்பில் ஏன் இந்தப் பாகுபாடு? ஜனரஞ்சக இலக்கியம் குறித்து ஏன் இப்படி ஒரு தீண்டாமை உங்களிடம் தென்படுகிறது? அதுவும் ‘உன்னதங்களை’ நோக்கி செல்லும் உங்களிடம்? உங்களது இந்த ‘உன்னதங்களுகான’ ‘இலட்சியவாத’ வீறு நடையில் சாமானியன் ஒருவன் தொண்டைக்குழியில் கால் ஊன்றி சென்றாலும் பரவாயில்லை என்னும் பண்பு, மனித மாண்பையே உதாசீனப்படுத்தும் போது, அதெப்படி அறிவுப் பண்பாகும்? அது 'சர்வாதிகார அறநெறி' திரட்சியை விளைவிக்குமா? “அறிவுச் சமூகத்தை” விளைவிக்குமா? என்னுடைய பார்வையில் இதையே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், முதலில் அத்தனையையும் படிக்க ஆசைப்படுங்கள், அதுதான் வாசிப்பை நோக்கி வருபரிடையே இருக்க வேண்டிய முதல் பண்பு. இருபதுகளின் இறுதியிலும், முப்பதுகளின் பாதியிலும் எனது பல நண்பர்கள் இந்த புரிதலுக்கு வந்து சேருவது கவலை அளிக்கிறது. அவர்களும் சோர்வுடனே அவர்களது வாழ்கையை, வாசிப்பை, புதிய தேடல்கள் குறித்த சிந்தனைகளை தொடர்கிறார்கள். நானெல்லாம் என்னுடைய கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்தே தீவிர இலக்கிய வாசிப்பும் ஜனரஞ்சக வாசிப்பும் வேறுவேறல்ல என்று சொல்லி வந்து இருக்கிறேன், மஹா ஸ்வேதா தேவியும் தேவை விநாயக முருகனும் தேவை, ஹாருகி முரகாமியும் தேவை தாஸ்தாவெஸ்கியும் தேவை என்று. தனிநபர் உறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன் எனினும் ‘குழுவாதேமே’ தழைத்தோங்கியது. இப்போதும் சொல்கிறேன், கண்டதையும் படிக்க ஆரம்பியுங்கள். அனைத்தும் உயர்வானதே. எந்த பண்பாடும் கீழ்மையான பண்பாடு இல்லை. ‘விழுமியம்’ குழுமியம்’ எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் வாழ்க்கையில் சந்தோசமாக இருபதைக்குறித்து சிந்தியுங்கள். இலக்கியவாதிகள் ஒன்னும் மகான்கள் அல்ல, உங்களையும் என்னையும் போல தனிமைச் சூழலில், இயல்பான உணர்வெழுச்சிகளை கை அடித்து கடந்து வரும் சாதரனர்களே. எனவே இங்கு யாரிடத்திலும் உங்கள் கேள்விகளுக்கான பதில் முழுமையாக இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாம் அதை சேர்ந்து தான் தேட வேண்டும். அதற்கு முதலில் நாம் அனைவரும் தனிமையில் தான் உழல்கிறோம் என்னும் உண்மையை ஒற்றுக்கொண்டு, நம் பலவீனங்கள் குறித்த வெளிப்படையான விவாதத்தின் மூலம் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி அதை ஏற்படுத்த விழையும் தருவாயில் வெறும் ‘பேருண்மைகளை’ நோக்கியே மட்டும் நம் பயணம் அமையாமல், அதிஷாவின் “ஓடுவதின் முக்கியத்துவம்” குறித்த பார்வையும், சாரு நிவேதிதாவின் “heavy metal” இசை குறித்த பார்வைகளும் நமது விவாதத்தின் முக்கிய பகுதியானால் நாம் செல்லும் பாதையும் இனிதே அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக