மவுலின்னாங். "ஸ்வச் பாரத் ஸ்வச் பாரத்" என சுத்தம் குறித்த பிரக்ஞை கடந்த இரண்டு ஆண்டுகளாக திடுதிப்பென்று நம்மிடையே கிளர்ந்தெழும் முன்னரே, அதை செயலளவில் யதார்த்தத்தில் நிகழ்த்தி காட்டியது மவுலின்னாங்.
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைத்தொடரில் அமைந்துள்ளது மவுலின்னாங். ஷில்லாங்கிலிருந்து 90 கிமி தொலைவில் அமைந்துள்ள வெறும் 500 பேர் கொண்ட சின்னஞ்சிறு கிராமம். முழுக்க காசி பழங்குடியின மக்கள் வாழும் இந்த கிராமம் உலக அளவில் ஒரு பெரும் கவனத்தை இந்தியாவிற்கு ஈட்டித் தந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முனனரே. ஊர் கூடி தேர் இழுப்பதை போல சிறுகச் சிறுக அனைவரது பங்களிப்புடனும் அதை சாதித்திருக்கிறது. ஆம், "ஆசியாவின் சுத்தமான நகரம்" என டிஸ்கவர் இந்தியா இதழால் 2003ம் ஆண்டு அறிவிக்கப் பட்டுள்ளது மவுலின்னாங். ஆனால் உலக மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்நிகழ்வு பெருவாரியான இந்திய மக்களை சென்று சேராதது ஏனோ துரதிர்ஷ்டம் தான்.
அப்படி என்னதான் இருக்கிறது மவுலின்னாங்கில் ?
2003 ஆம் ஆண்டிலிருந்தே உலக அளவில் சுற்றுலா பயணிகள் மவுலின்னாங்கிற்கு அணி வகுக்க தொடங்கிவிட்டனர். வந்த பயணிகளின் மூலம் தெரிந்து கொண்டு மேலும் பலர் வரத் துவங்கினர். 2005ம் ஆண்டு உலகத் தொலைக்காட்சிகளின் மூலம் மேலும் பிரபலமானது மவுலின்னாங். இப்படியாக பயணிகளின் வரத்து அதிகரித்து இன்று மாநிலத்தின் மொத்த வருவாயில் சுற்றுலா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
மவுலின்னாஙை பொறுத்தவரை விஷயம் மிக எளிமையானது, "சுத்தம் பேணுதல் பிறப்புரிமை". கிராமவாசிகளின் முக்கிய கடமையாக காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதென்றால், வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமத்தையும் தத்தம் பங்கிற்கு சுத்தம் செய்வதும். நீங்கள் மவுலின்னாங்கில் வசிக்கும் ஒரு சிறுவன் என்றால், உங்களது முதல் கடமை ரோட்டைக் கூட்டுவதாகத்தான் இருக்கும் பிறகுதான் பள்ளி, படிப்பெல்லாம். இயல்பாகவே மவுலின்னாங் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பிற்கு வந்தவுடன் சுத்தம் செய்யும் கடமையும் அளிக்கப்பட்டு விடுகிறது. "சுத்தம் செய், இல்லையெனில் உணவு கிடையாது" என்பதே எழுதப்படாத விதியாகிப் போனது. இது தலைமுறைகள் கடந்து நீடிக்கும் ஓர் வழக்கமாகவே அமைந்து விட்டது.
"வாழும் பாலம்"
இந்த வார்த்தையை இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறிர்களா? உயிரற்ற கான்கிரீட் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் நமக்கு வாழும் (வேர்) பாலம் என்ற சொல் சற்று அந்நியமாக இருப்பதில் வியப்பில்லை தான். ஆனால் அது உண்மை. ஆலமரத்தின் விழுதுகளை பின்னி பிணைந்து உருவாகியுள்ள ஓர் இயற்கை ஆச்சரியம் ரிவாய் கிராமத்தில் உள்ள இந்த வாழும் பாலம். ஆரம்பத்தில் ஆலமரங்களின் விழுதுகளை பயன்படுத்தியே பாதையை கடந்துள்ளனர். பின்னாட்களில் இயற்கையாக மரங்களின் பிணைப்பால் உருவான பாலம், மனிதனுக்கும் இயற்கைக்குமான பந்தத்தை காட்சிப்படுத்துவதாக உள்ளது. சீரற்ற நகரத் தெருக்களின் இறுக்கமான கட்டடங்களுக்கு இடையே மூச்சு விடவும் சிரமப்படும் சூழலை ஒப்பிடும் போது, உயிரோட்டமான இந்த பாலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் பரவசத்தை அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
உயர விரியும் வானம்
landscape of Bangladesh |
மவுலின்னாங் மக்களை பொறுத்தவரை ரசாயனம், பிளாஸ்டிக் என எதையும் தங்கள் ஊரில் அனுமதிப்பதில்லை. ஊரினுள் நுழையும் பிரதான சாலையைத் தவிர ஏனைய சாலைகள் அனைத்தையும் மண் சாலைகளாகவே இன்றுவரை பராமரித்து வருகின்றனர். இவையனைத்தையும் கடந்து மற்றுமொரு அதிசயம், ஸ்கை வ்யூ (Sky view). ஆம், மூங்கிலால் ஆன சிறிய வீடு மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் எல்லையோரம் உள்ள கிராமம் என்பதால் ஒட்டுமொத்த மவுலின்னாங் மட்டுமல்லாது வங்கதேச நிலப்பரப்பையும் இந்த "ஆகாய இல்லம்" மூலம் ரசிக்கலாம். வாழும் பாலத்திற்கு அடுத்து அதிக பயணிகளை கவரும் இடமாக உள்ளது "ஸ்கை வ்யூ".
மவுலின்னாங்வாசிகளின் கவலை
2003ல் உலகின் கண்களில் மவுலின்னாங் கவனம் பெறத் துவங்கியதிலிருந்தே மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. ஆனால் கிராம மக்களின் தலையாய கவலை, சுற்றுலா பயணிகளால் ஊருக்குள் பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள். ஆரம்பத்தில் இது ஓரளவிற்கே இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போக நிலைமை மோசமாகத் தொடங்கியது. முடிந்தளவு இதை கட்டுபடுத்த முயன்று இப்போது இந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காகவே ஐந்து பெண்களை நியமித்துள்ளனர் ஊர் பொதுமக்கள். வெறும் பிளாஸ்டிக் மட்டுமல்லாது கான்கிரிட், சிமென்ட் வீடுகளையும் மக்கள் விரும்புவதில்லை. இப்போதும் பாரம்பரியமான குடிசைகளையே இருப்பிடமாக கொள்கின்றனர் காசியினர். தங்களுக்கான தனித்துவம், பிரத்யேக மரபு ஆகியவற்றை அதிகரித்து வரும் சுற்றுலா வாசிகளால் இழந்து விடுவோமோ என்கிற அச்சம் தான் அதற்கு காரணம். இயற்கையோடு இணைந்து வாழ்வதையே உண்மையான வாழ்கையாக காசி பழங்குடியினர் கருதுகின்றனர்.
நமக்கான முன்னோடி
"கடவுளின் பூந்தோட்டம்" என டேஜ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அலக்ஸான்டர் கரன்கோர் மற்றும் ஜான்மெஜாய் தமூளி, மவுலின்னாங் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். மவுலின்னாங் மக்களின் வாழ்க்கை எந்தளவிற்கு இயற்கையுடன் இயைந்துள்ளது என்பதை அழகாக காட்சிபடுத்தி இருப்பார்கள். சூழல் குறித்த சமூக அக்கறையில் காசி மக்கள் நமக்கு முன்னோடிகள். ஆம், சுத்தம் குறித்த போதனை மட்டும் முழுமையான சுகாதாரத்துக்கு தீர்வாகாது. அடிப்படையில் அது மக்களின் அன்றாட நடைமுறைக்கு உகந்ததாக, அவர்களின் வாழ்நிலையில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அப்போதுதான் நிச்சமான மாற்றம் சாத்தியம் என மவுலின்னாங் மக்கள் நமக்கு உணர்த்துகின்றனர். மவுலின்னாங்வாசியான கான்கோங், "அடிப்படையில் எங்கள் கிராமம் சுத்தமாக இருப்பதற்கு காரணம் எங்கள் மக்கள் தான், மக்களின் ஒற்றுமை தான் இதற்கு முழு காரணம், பரஸ்பர ஒற்றுமை இல்லையென்றால் எதுவுமில்லை" என்கிறார். இங்கு நமக்கு அதுதான் பிரச்சனையே. ஆம், மக்களின் பங்கேற்பே மாற்றத்திற்கான முதல் அடி. மவுலின்னாங் வழிகாட்டட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக