18/11/16

திருப்பூரின் உலக திரைப்பட விழா

5 நாட்கள், 23 படங்கள்

உற்சாகமாக தொடங்கியது திருப்பூர் உலகத் திரைப் பட விழா.






18 ஆம் தேதி முதல் 22ஆம தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவை 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர்' நடத்துகின்றனர்.

5'வது ஆண்டாக இன்று தொடங்கப் போகும் திரைப்பட விழா, திருப்பூரில் நடப்பது இதுவே முதல்முறை.

முதல் இரண்டாண்டுகள் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ'வுடன் இணைந்து நடத்தப் பட்டது. பின்பு நகரங்களை தாண்டியும் உலக திரைப்படங்களை கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் பட்டுக் கோட்டையிலும், கம்பத்திலும் முறையே நடத்தப் பட்டது.

இப்போது இந்த ஆண்டு தொழில் நகரமான திருப்பூருக்கு வந்துள்ளது.
மாவட்ட அளவில் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவிலும் முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் வருவார்கள் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய ஒருங்கினைப்பாளரும், தமுஎகச தலைவருமான எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விழா பற்றி கூறுகையில், "தொடர்ந்து ஐந்நாவது வருடமாக திருப்பூரில் இன்று திரைப்பட விழா தொடங்குகிறது. சினிமா நமது சித்நனைத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் அது தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். முதலில் நல்ல சினிமா என்றாலே இங்கே யாருக்கும் தெரியாது. வாழ்வை பேசும் படங்களே நல்ல சினிமா. மேலும் இங்கு சினிமா என்பது தொடர்ந்து நம் சிந்தனைத் தளத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்" என்றார்.

திரைப்பட விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு ஆளுமையான எடிட்டர் லெனின் துவக்கி வைக்கிறார்.

முதல் படமாக "ஸ்பார்டகஸ்" திரைப்படம் காலை 10 மணிக்கு திரையிடப் படுகிறது. உலக திரைப்பட இயக்குனர்களில் தன் திரைவாழ்கையில் அனைத்து விதமான உச்சங்களையும் தொட்டுவரென புகழப்படும் ஸ்டான்லி குப்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படம் "உலக சினிமா வரலாற்றில் முதல் காவியப் படம்"என அடையாளப்படுத்தப் படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் என 12 நாடுகளை சேர்ந்த 23 படங்கள் திரையிடப் படுகிறது.
நுழைவு கட்டணமாக ஒரு நாளுக்கு 200₹ என்றும், ஐந்து நாளுக்கும் சேர்த்து 1000₹ என தெரிவிக்கப் பட்டுள்ளது.


- கபிலன்


**

15/11/16

C"க்கு பின்னால் இருக்கும் A மற்றும் B"யின் கதை







கணிணியின் பிரதான இயக்கியாக(drive) ஏன் C இருக்கிறது என என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? 


ஏன் A, B அல்லாமல் C'ல் இருந்து ஆரம்பிக்கிறது? 

கணிணியின் ஆரம்ப காலகட்ட வளர்ச்சியிலிருந்து அதன் தீவிர ஆர்வலர்களாக இருப்பவர்களுக்கு இதற்கான விடை எளிமையாக கிடைத்திருக்கும். ஆனால் கணிணி-பிரியர் அல்லாதவர்களின் மனத்திரையில் சரீர் சரீரென அடிக்கடியாவது இந்தக் கேள்வி வந்து போயிருக்கும். 

ஏன் மைக்ரோ சாஃப்ட்'டின் விண்டோஸ் கணிணியின் பிரதான இயக்கியாக (default drive) C இருக்கிறது? அதற்கு அடுத்தடுத்த இயக்கிகளாக D, E மற்றும் என தொடர்கிறது. எனில் USB இயக்கியை சொருவினால் அது கணிணியில் F, G இயக்கியாக தொடரும். 
சரி இதற்கெல்லாம் முன்னால் உள்ள அந்த A'க்கும் B'க்கும் என்ன தான் ஆனது? 



பதற வேண்டாம். பதில் எளிமையானது தான். ஆம். கணிணியின் வளர்ச்சியை ஒவ்வொரு தலைமுறையாக (Generations) நாம் கணக்கிடுவோம் இல்லையா. அப்படியாக உருவாக்கப்பட்ட ஆரம்பகாலகட்ட கணிணிகளில் போதுமான அளவில் பெரிய சேமிப்பு உபகரணத் திறன் (internal storage capacity) இல்லை. அப்போது அதற்கு பதிலாக Floppy disk drive என்னும் சாதனம் பயன்படுத்தப்பட்டது. தமிழில் நெகிழ் வட்டு இயக்கி என இதைச் சொல்லலாம். அந்த இயக்கியே ஆரம்பத்தில் A என அழைக்கப்பட்டது. அது 5¼ என்றும் 3½ என்றும் இரு அளவைகளில் வெளியானது. இந்த இரு இயக்கிகளையும் பொருத்தக்கூடிய வசதியுடன் வெளியான கணிணியின் பிரதான இயக்கியாக தான் முறையே A மற்றும் B செயல்பட்டது.






1980களின் பிந்தைய காலகட்டத்தில் தான் Hard drive இயக்கிகள் நிலையான அம்சமாக கணிணியில் மாறியது. எனவே இயல்பாக, முந்தைய இயக்கியின் தொடர்ச்சியாக அது C என பெயரிடப்பட்டது. கணிணி இயங்குதளம் சாரந்த அனைத்தும் C'ல் தான் சேமிக்கப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நெகிழ் வட்டு இயக்கிகளின் (Floppy disks) தேவை இல்லாமல் போனது. எனவே A, B மறைந்தது, அதன் தொடர்ச்சியாக C மட்டும் இருந்து வருகிறது. 


**

விகடனில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறு கட்டுரை.


3/11/16

மவுலின்னாங்கும், "ஸ்வச் பாரத்தும்


           





மவுலின்னாங். "ஸ்வச் பாரத் ஸ்வச் பாரத்" என சுத்தம் குறித்த பிரக்ஞை கடந்த இரண்டு ஆண்டுகளாக திடுதிப்பென்று நம்மிடையே கிளர்ந்தெழும் முன்னரே, அதை செயலளவில் யதார்த்தத்தில் நிகழ்த்தி காட்டியது மவுலின்னாங். 


மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைத்தொடரில் அமைந்துள்ளது மவுலின்னாங். ஷில்லாங்கிலிருந்து 90 கிமி தொலைவில் அமைந்துள்ள வெறும் 500 பேர் கொண்ட சின்னஞ்சிறு கிராமம். முழுக்க காசி பழங்குடியின மக்கள் வாழும் இந்த கிராமம் உலக அளவில் ஒரு பெரும் கவனத்தை இந்தியாவிற்கு ஈட்டித் தந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 


அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முனனரே. ஊர் கூடி தேர் இழுப்பதை போல சிறுகச் சிறுக அனைவரது பங்களிப்புடனும் அதை சாதித்திருக்கிறது. ஆம், "ஆசியாவின் சுத்தமான நகரம்" என டிஸ்கவர் இந்தியா இதழால் 2003ம் ஆண்டு அறிவிக்கப் பட்டுள்ளது மவுலின்னாங். ஆனால் உலக மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்நிகழ்வு பெருவாரியான இந்திய மக்களை சென்று சேராதது ஏனோ துரதிர்ஷ்டம் தான். 





அப்படி என்னதான் இருக்கிறது மவுலின்னாங்கில் ?




                             
               




2003 ஆம் ஆண்டிலிருந்தே உலக அளவில் சுற்றுலா பயணிகள் மவுலின்னாங்கிற்கு அணி வகுக்க தொடங்கிவிட்டனர். வந்த பயணிகளின் மூலம் தெரிந்து கொண்டு மேலும் பலர் வரத் துவங்கினர். 2005ம் ஆண்டு உலகத் தொலைக்காட்சிகளின் மூலம் மேலும் பிரபலமானது மவுலின்னாங். இப்படியாக பயணிகளின் வரத்து அதிகரித்து இன்று மாநிலத்தின் மொத்த வருவாயில் சுற்றுலா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 


மவுலின்னாஙை பொறுத்தவரை விஷயம் மிக எளிமையானது, "சுத்தம் பேணுதல் பிறப்புரிமை". கிராமவாசிகளின் முக்கிய கடமையாக காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதென்றால், வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமத்தையும் தத்தம் பங்கிற்கு சுத்தம் செய்வதும். நீங்கள் மவுலின்னாங்கில் வசிக்கும் ஒரு சிறுவன் என்றால், உங்களது முதல் கடமை ரோட்டைக் கூட்டுவதாகத்தான் இருக்கும் பிறகுதான் பள்ளி, படிப்பெல்லாம். இயல்பாகவே மவுலின்னாங் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பிற்கு வந்தவுடன் சுத்தம் செய்யும் கடமையும் அளிக்கப்பட்டு விடுகிறது. "சுத்தம் செய், இல்லையெனில் உணவு கிடையாது" என்பதே எழுதப்படாத விதியாகிப் போனது. இது தலைமுறைகள் கடந்து நீடிக்கும் ஓர் வழக்கமாகவே அமைந்து விட்டது. 





                          "வாழும் பாலம்"


                  
                  


இந்த வார்த்தையை இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறிர்களா? உயிரற்ற கான்கிரீட் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் நமக்கு வாழும் (வேர்) பாலம் என்ற சொல் சற்று அந்நியமாக இருப்பதில் வியப்பில்லை தான். ஆனால் அது உண்மை. ஆலமரத்தின் விழுதுகளை பின்னி பிணைந்து உருவாகியுள்ள ஓர் இயற்கை ஆச்சரியம் ரிவாய் கிராமத்தில் உள்ள இந்த வாழும் பாலம். ஆரம்பத்தில் ஆலமரங்களின் விழுதுகளை பயன்படுத்தியே பாதையை கடந்துள்ளனர். பின்னாட்களில் இயற்கையாக மரங்களின் பிணைப்பால் உருவான பாலம், மனிதனுக்கும் இயற்கைக்குமான பந்தத்தை காட்சிப்படுத்துவதாக உள்ளது. சீரற்ற நகரத் தெருக்களின் இறுக்கமான கட்டடங்களுக்கு இடையே மூச்சு விடவும் சிரமப்படும் சூழலை ஒப்பிடும் போது, உயிரோட்டமான இந்த பாலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் பரவசத்தை அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். 





                    உயர விரியும் வானம் 



landscape of Bangladesh





மவுலின்னாங் மக்களை பொறுத்தவரை ரசாயனம், பிளாஸ்டிக் என எதையும் தங்கள் ஊரில் அனுமதிப்பதில்லை. ஊரினுள் நுழையும் பிரதான சாலையைத் தவிர ஏனைய சாலைகள் அனைத்தையும் மண் சாலைகளாகவே இன்றுவரை பராமரித்து வருகின்றனர். இவையனைத்தையும் கடந்து மற்றுமொரு அதிசயம், ஸ்கை வ்யூ (Sky view). ஆம், மூங்கிலால் ஆன சிறிய வீடு மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் எல்லையோரம் உள்ள கிராமம் என்பதால் ஒட்டுமொத்த மவுலின்னாங் மட்டுமல்லாது வங்கதேச நிலப்பரப்பையும் இந்த "ஆகாய இல்லம்" மூலம் ரசிக்கலாம். வாழும் பாலத்திற்கு அடுத்து அதிக பயணிகளை கவரும் இடமாக உள்ளது "ஸ்கை வ்யூ". 







                                                

     மவுலின்னாங்வாசிகளின் கவலை 


            




2003ல் உலகின் கண்களில் மவுலின்னாங் கவனம் பெறத் துவங்கியதிலிருந்தே மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. ஆனால் கிராம மக்களின் தலையாய கவலை, சுற்றுலா பயணிகளால் ஊருக்குள் பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள். ஆரம்பத்தில் இது ஓரளவிற்கே இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போக நிலைமை மோசமாகத் தொடங்கியது. முடிந்தளவு இதை கட்டுபடுத்த முயன்று இப்போது இந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காகவே ஐந்து பெண்களை நியமித்துள்ளனர் ஊர் பொதுமக்கள். வெறும் பிளாஸ்டிக் மட்டுமல்லாது கான்கிரிட், சிமென்ட் வீடுகளையும் மக்கள் விரும்புவதில்லை. இப்போதும் பாரம்பரியமான குடிசைகளையே இருப்பிடமாக கொள்கின்றனர் காசியினர். தங்களுக்கான தனித்துவம், பிரத்யேக மரபு ஆகியவற்றை அதிகரித்து வரும் சுற்றுலா வாசிகளால் இழந்து விடுவோமோ என்கிற அச்சம் தான் அதற்கு காரணம். இயற்கையோடு இணைந்து வாழ்வதையே உண்மையான வாழ்கையாக காசி பழங்குடியினர் கருதுகின்றனர். 






                    நமக்கான முன்னோடி 


                     





"கடவுளின் பூந்தோட்டம்" என டேஜ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அலக்ஸான்டர் கரன்கோர் மற்றும் ஜான்மெஜாய் தமூளி, மவுலின்னாங் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். மவுலின்னாங் மக்களின் வாழ்க்கை எந்தளவிற்கு இயற்கையுடன் இயைந்துள்ளது என்பதை அழகாக காட்சிபடுத்தி இருப்பார்கள். சூழல் குறித்த சமூக அக்கறையில் காசி மக்கள் நமக்கு முன்னோடிகள். ஆம், சுத்தம் குறித்த போதனை மட்டும் முழுமையான சுகாதாரத்துக்கு தீர்வாகாது. அடிப்படையில் அது மக்களின் அன்றாட நடைமுறைக்கு உகந்ததாக, அவர்களின் வாழ்நிலையில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அப்போதுதான் நிச்சமான மாற்றம் சாத்தியம் என மவுலின்னாங் மக்கள் நமக்கு உணர்த்துகின்றனர். மவுலின்னாங்வாசியான கான்கோங், "அடிப்படையில் எங்கள் கிராமம் சுத்தமாக இருப்பதற்கு காரணம் எங்கள் மக்கள் தான், மக்களின் ஒற்றுமை தான் இதற்கு முழு காரணம், பரஸ்பர ஒற்றுமை இல்லையென்றால் எதுவுமில்லை" என்கிறார். இங்கு நமக்கு அதுதான் பிரச்சனையே. ஆம், மக்களின் பங்கேற்பே மாற்றத்திற்கான முதல் அடி. மவுலின்னாங் வழிகாட்டட்டும்.