உலகம் அழியத் தயாராகி வருகிறது.
அறிவித்த போப் பாண்டவர்
கூடவே தற்கொலைக்கான ஆயுத்தங்களிலும்
மும்முரமானார்.
அழியத் துவங்கப் போகிறதா உலகம்!
வற்றியக் காம்புகளுடன்
பாதி இறந்த குழந்தையை
இறுக அணைத்தவாறே ஆனந்தக்
கெக்கலியிட்டாள்
ஏழை வயோதிகி.
முழுக்க மழித்தெடுத்த முகத்துடன்
கண்ணாடியில் பட்டொடியும் வைரத் துளிகளையொத்த
சில்லெனும் தண்ணீர்,
அப்பிக்கிடந்த முகத்தில்
இருந்து
மெல்ல மெல்ல உருகித்
துளிர்க்க,
பூமியின் கடைசி நாளுக்கான
கடைசி அறிவிப்பானையை
தெரிந்துகொண்ட அவன்
தனது இறுதிப் புணர்ச்சிக்கு தயாரானான்.
இலட்சோபலட்ச மனித சஞ்சாரங்களின்
இறுதி கணம் என்பதால்,
இன்னும் தீவிரமாகவும்
உன்மத்தத்தின் கடைசி மிடரையும் ருசிக்கும் வகையிலும்
நடைபெற்றுக் கொண்டிருந்தது
உலகின் அந்தக்
கடைசிப் புனர்ச்சி.
பூமியின் அந்த இறுதி
தினத்தினூடாக எழுந்த
மூர்க்கமான கலவியின்
கேவலானாது
மென்மையானதொரு சங்கீதமாய்
பால்வெளியை நிறைக்கத் தொடங்கியது.
ஆக
உயிர்ப்பற்று இறுகி கிடந்த
இந்த பூமியின்
இறுதி நாளுக்கான
அழகிய பிரிவு உபச்சாரமாக
ஒரு நல்ல நீண்ட உன்னதமான கலவியைத் தவிர
வேறென்ன இருக்க முடியும்!
என கணக்கை முடித்தான் ஐந்து தலை
பிரம்மன்.
_________________________________
கபிலன். இல